ஊரடங்கு சமயத்தில் 300% வளர்ச்சி கண்ட இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிறுவனம்!
2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் டெக்னாலஜி மூலம் செயல்படும் நாட்டின் முதல் ஃப்ரெஷ் இறைச்சி மற்றும் கடல் உணவு விற்பனை நிறுவனம் ஆகும்.
லாக்டவுன் காரணமாக விநியோகச் சங்கிலி தொடர்பான சிக்கல்கள் காணப்பட்டாலும் ஆன்லைன் உணவு டெலிவரி மற்றும் கொள்முதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக இறைச்சி மற்றும் கடல் உணவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
மக்களிடையே கொரோனா வைரஸ் பரவுவது போன்றே இறைச்சி மற்றும் கடல் உணவுகள் மூலம் கொரோனா தாக்கம் ஏற்படுவதாக வதந்திகளும் தொடக்கத்தில் பரவியது. இறைச்சி விற்பனை குறைந்தது, விநியோகச் சங்கிலி தடைபட்டது. ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இத்தனை பிரச்சனைகளுக்கிடையிலும் இறைச்சி மற்றும் கடல் உணவுகள் துறை வளர்ச்சியடைந்தது.
’Tendercuts' நிறுவனம் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் டெக்னாலஜி மூலம் செயல்படும் நாட்டின் முதல் ஃப்ரெஷ் இறைச்சி மற்றும் கடல் உணவு விற்பனை நிறுவனம். ஊரடங்கு சமயத்தில் இந்நிறுவனம் 300 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, என தெரிவிக்கிறது.
டென்டர்கட்ஸ் நிறுவனர் நிஷாந்த் சந்திரன் உடனான நேர்காணலின் தொகுப்பு இதோ:
யுவர்ஸ்டோரி தமிழ்: டென்டர்கட்ஸ் நிறுவன பின்னணி என்ன?
நிஷாந்த் சந்திரன்: டென்டர்கட்ஸ் உருவாக்கும் எண்ணம் 2016-ம் தோன்றியது. நான் இதற்கு முன்பு பேமெண்ட் கேட்வே நிறுவனத்தை நடத்தி வந்தேன். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அந்த நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதனால் பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவை சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடம் இல்லை என்பதால் இந்திய உணவகங்கள் எதுவும் இருக்காது.
உள்ளூர் உணவு வகைகள் மட்டுமே கிடைத்தன. அவற்றை என்னால் தொடர்ந்து சாப்பிடமுடியாமல் போனது. இதனால் அங்கே தங்கும் சமயங்களில் நானே சமைத்து சாப்பிடத் தொடங்கினேன்.
2013-14 காலகட்டங்களில் ஒருமுறை மார்கெட் சென்றபோது அங்குள்ள சுத்தமான சூழலைப் பார்த்தபோது நம் ஊரில் ஏதோ சரியில்லை என்கிற எண்ணம் ஏற்பட்டது. பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டபோது இறைச்சி விற்பனைத் துறையில் வாய்ப்புள்ளதை உணர்ந்தேன். இதில் அனுபவமில்லாதபோதும் ஆர்வம் இருந்தது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாற்றத்தை கொண்டு வர விரும்பினால் அந்தப் பகுதி குறித்து தெரியாமல் இருப்பதும் ஒரு வகையில் சிறந்தது என்பதே என் கருத்து. தொடக்கத்தில் இறைச்சி மற்றும் மீன் விற்பனையை ஆன்லைனில் மட்டுமே செய்தோம். சோதனை முயற்சியாக ஒரே ஒரு இடத்தில் மட்டும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டோம். நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து சென்னை முழுவதும் விரிவடைந்தோம்.
தற்போது இரண்டு முறைகளிலும் ஃப்ரெஷ்ஷாக இறைச்சி விற்பனை செய்து வருகிறோம்.
FSSI, WHO தரநிலைப்படி சிக்கன், மட்டன் போன்றவை 95% சந்தையில் ஃப்ரெஷ்ஷாக கிடைப்பதில்லை என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 0-4 டிகிரியில் இருந்தால் மட்டுமே அவை ஃப்ரெஷ் என்று சொல்லமுடியும். மற்றவை ஃப்ரீஸ் செய்யப்பட்டவை.
வெளிநாடுகளில் இறைச்சி வகைகள் வெளியில் வைத்து விற்கப்படுவதில்லை. நம் நாட்டில் இதுபோன்ற தரநிலைகள் பின்பற்றப்படுவதில்லை. இந்தச் சூழலை மாற்றுவதற்காகவே நான் டென்டர்கட்ஸ் தொடங்கினேன்.
யுவர்ஸ்டோரி தமிழ்: நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு இந்திய சந்தையில் இது குறித்து ஏதேனும் ஆய்வு செய்தீர்களா? இங்கு மக்களின் நுகர்வு முறை எப்படி இருந்தது?
நிஷாந்த்: 2016ம் ஆண்டில் தொடங்குவதற்கு முன்பு கிட்டத்தட்ட 3 மாதங்கள் சந்தையை ஆய்வு செய்தோம். மக்களிடம் கேள்விகள் கேட்டு புரிந்துகொள்வதற்கு பதிலாக நேரடியாக ஒரு ஸ்டோர் திறந்தோம். பல்வேறு வகை இறைச்சி மற்றும் மீன் வகைகள் கொடுத்து நிகழ்நேர அடிப்படையில் கருத்துக்களை கேட்டறிந்தோம்.
இறைச்சிகளை வாங்க வரும்போது தங்கள் கண்ணெதிரே கட் செய்து கொடுக்கப் படவேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். நாங்கள் சுத்தமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிப்பதற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறோம். அவர்களின் எதிரே அவர்கள் விரும்பும் இறைச்சி வகையை, வெட்டி ஃபெர்ஷ்ஷாக வழங்குவோம்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக மக்கள் முகக்கவசமும் கையுறைகளும் அணிகிறார்கள். சானிடைசர் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் 2016ம் ஆண்டிலிருந்து இதுபோன்ற நடைமுறைகளையே பின்பற்றி வருகிறோம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இவை பின்பற்றப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக கடைகளில் சிக்கன் ஒரு கிலோ வாங்கினால் இரண்டு லெக் பீஸ் மட்டுமே வரும். வாடிக்கையாளர்கள் மேலும் சில பீஸ் கிடைத்தால் வாங்கலாம் என்று விரும்புவார்கள். ஆனால் தனியாகக் கிடைக்காது. இதையறிந்து நாங்கள் லெக் பீஸ் மட்டும் வேண்டுமானால் தனியாக வாங்கிக்கொள்ளும் வகையில் வழங்கத் தொடங்கினோம்.
அதேபோல் மட்டன் வாங்கும்போது கொழுப்புடன் சேர்த்து கொடுப்பார்கள். கொழுப்பில்லாத மட்டனை மக்கள் விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து அதையும் வழங்கத் தொடங்கினோம். எங்களிடம் வாங்கும் இறைச்சி வகைகள் ஒரே தரநிலையுடன் கிடைக்கிறது.
இறைச்சி விற்பனை செய்வோரிடம் இருந்து நேரடியாகச் இறைச்சிகளைக் கொண்டு வந்து கட் செய்து நேரடியாகவோ, ஆன்லைன் மூலமோ டெலிவரியோ செய்கிறோம்.
யுவர்ஸ்டோரி: ஆன்லைனில் செயல்பாடுகளைத் தொடங்கியபோது மேற்கொண்ட ஆயத்த நடவடிக்கைகள் என்ன?
நிஷாந்த்: மிகவும் உற்சாகமான தொடக்கமாகவே அமைந்தது. தொடங்கிய நான்கு மாதங்களில் ஒரு கடையில் மட்டும் 30 லட்ச ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது. ஓஎம்ஆர்-ல் தொடங்கியதால் ஆர்டர்கள் அதிகளவில் இருந்தது. இங்கு மட்டும் ஆன்லைன், ஸ்டோர் இரண்டு விதங்களிலும் விற்பனை செய்யும் வகையிலும் மற்ற இடங்களில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யும் வகையிலும் செயல்பட்டோம்.
2016-ம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை இரண்டு மாதிரியிலும் செயல்பட்டோம். ஒப்பீட்டளவில் ஸ்டோர் அதிக வளர்ச்சியை சந்தித்தது. ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது இறைச்சி எப்போது கட் செய்யப்பட்டிருக்கும் என்கிற கேள்வி வாடிக்கையாளர்கள் மனதில் எழுந்தது. எனவே வர்த்தக மாதிரியை மாற்றியமைத்தோம். அனைத்து வகையான ஆர்டர்களுமே ஸ்டோர்கள் மூலமாகவே வாடிக்கையாளர்களைச் சென்றடையும் விதங்களில் செயல்பட்டோம்.
ஆன்லைன் ஆர்டர்களைப் பொறுத்தவரை ஆர்டர் பெறப்பட்டதும் ஃப்ரெஷ்ஷாக கட் செய்து, பேக் செய்து டெலிவர் செய்யப்பட்டது. ஸ்டோர்களில் இறைச்சியைக் கையாளும் நிபுணர்கள் சுத்தமாக இறைச்சியைக் கட் செய்து கொடுப்பார்கள். வாடிக்கையாளர்கள் இதை நேரடியாகப் பார்க்கலாம்.
வழக்கமான கடைகளைக் காட்டிலும் எங்கள் ஸ்டோர்களில் வாங்குவது வசதியாக இருப்பதாக பெண் வாடிக்கையாளர்கள் பாராட்டுகிறார்கள். முதலில் ஒன்றிரண்டு முறை நேரடியாக வந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்ததும் ஆன்லைனிற்கு மாறுகின்றனர்.
கோவிட் தொற்று பரவலுக்கு முன்பு பொதுவாக வாடிக்கையாளர்கள் வார நாட்களில் ஒரு முறையும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முறையும் வாங்கும் போக்கு காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் நேரடியாக ஸ்டோர்களுக்கு வந்தும் வார நாட்களில் ஆன்லைனில் வாங்கினார்கள். இதுபோன்ற பல்வேறு போக்குகளை வாடிக்கையாளர்களிடையே கவனித்தோம்.
வாடிக்கையாளர்களை ஆன்லைனிலோ ஆஃப்லைனிலோ வாங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. ஃப்ரெஷ்ஷான இறைச்சி மற்றும் கடல் உணவு வகைகளை கொடுக்கும் சந்தையில் செயல்படும்போது இரண்டு விதங்களிலும் வழங்கத் தயாராக இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டோம்.
2017ம் ஆண்டு முதலே இவ்வாறு செயல்பட்டு வருகிறோம். சென்னையில் விரிவடைந்தோம். 2019ம் ஆண்டு தொடக்கத்தில் ஹைதராபாத்திலும் செயல்படத் தொடங்கினோம்.
யுவர்ஸ்டோரி: ஆன்லைனில் திட்டமிட்டு பின்னர் சில்லறை வர்த்தகத்திலும் ஈடுபடும்போது அதற்கான முதலீடு ஏதேனும் கிடைத்ததா?
நிஷாந்த்: முதலீட்டாளர்கள் சிலர் எங்கள் வணிகத்தில் முதலீடு செய்துள்ளனர். எங்களது விநியோகச் சங்கிலி அமைப்பு பல்வேறு செயல்முறைகளை உள்ளடக்கியது. உணவு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிசெய்த பின்னரே வாங்குகிறோம். இரண்டு முறையான விற்பனையிலுமே ஒரே மாதிரியான தரநிலைகள் பின்பற்றப்படுவதால் அதற்கான முதலீட்டில் பெரியளவில் வேறுபாடு இருக்காது.
கோவிட் பரவலுக்கு முன்பே 70% ஆர்டர் ஆன்லைன் மூலமாகவே பெறப்பட்டது. 30% மட்டுமே சில்லறை வர்த்தகம் பங்களித்தது.
யுவர்ஸ்டோரி: இறைச்சி மற்றும் கடல் உணவுகளை வாங்குவதற்கான நெட்வொர்க்கை எவ்வாறு அமைத்திருக்கிறீர்கள்?
நிஷாந்த்: ஃப்ரெஷ் இறைச்சி என்பது அதிகபட்சம் ஒரே நாளில் கெட்டுவிடக்கூடியது என்பதால் நாங்கள் அன்றாடம் வாங்குகிறோம். நாங்கள் இந்தத் துறையில் QTT என்பதை அறிமுகப்படுத்தினோம். அதாவது அளவு (Quantity), நேரம் (Timing), வெப்பநிலை (Temperature) ஆகியவற்றைக் கருத்தில் கொள்கிறோம்.
கடல் உணவைப் பொறுத்தவரை அனைத்தும் உள்ளூரிலேயே பெறப்படுகிறது. 100-150 கி.மீட்டருக்குள்ளேயே வாங்குகிறோம். அன்றாடம் வாங்கப்பட்டு அன்றைய தினமே விற்பனையாகிவிடுகிறது. எந்தெந்த காலகட்டத்தில் எவ்வளவு விற்பனையாகும் என்பதை முறையாக கவனித்து செயல்படவேண்டியது அவசியம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் தரவுகளைக் கையாள்கிறோம். நாங்கள் நேரடியாக மீனவர்களிடம் வாங்குவதால் ஃப்ரெஷ்ஷாக இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.
இறைச்சியைக் கையாளும் நிபுணர்கள் வழக்கமாக சுத்தமான சூழலில் பணிபுரியாததால் அவர்களுக்கு தொற்று ஏற்படுவதுண்டு. ஆனால் எங்களது ஸ்டோர்களில் பணியாற்றுபவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மை நிறைந்த தரமான உணவு பொருட்களை குறைந்த விலையில் வழங்குகிறோம்.
யுவர்ஸ்டோரி: இறைச்சி மற்றும் கடல் உணவுகளுக்கு எப்படி விலை நிர்ணயித்தீர்கள்?
நிஷாந்த்: விவசாயிகளுடன் நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுவதால் சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் எங்கள் விலை சற்றே அதிகமாக இருக்கக்கூடும். நாங்கள் அவர்களிடம் சந்தை விலையைக் காட்டிலும் அதிகம் கொடுத்து தரமான உணவுப் பொருளை வாங்குகிறோம். இதனால் 10 முதல் 15 ரூபாய் வித்தியாசம் இருப்பினும் மக்கள் சுகாதாரமான உணவுப் பொருளை சற்று கூடுதல் விலைக்கு வாங்கத் தயாராக இருக்கின்றனர். குறிப்பாக தற்போதைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று சமயத்தில் மக்கள் சுகாதாரமான உணவுப்பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
எங்களிடம் பணிபுரியும் நிபுணர்கள் ஏற்கெனவே பல கடைகளில் பணிபுரிந்தவர்கள். எந்தவித சலுகைகளும் இன்றி வாழ்வாதாரத்தை இழந்தவர்களைத் தேர்வு செய்தே எங்கள் ஸ்டோர்களில் நியமித்துள்ளோம்.
இதுதவிர வார இறுதி நாட்களில் கல்லூரி மாணவர்கள் பகுதி நேரமாக ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை வேலை பார்க்கின்றனர். ஒரு நாளைக்கு 600-700 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.
யுவர்ஸ்டோரி: 2019ம் ஆண்டில் உங்கள் டர்ன்ஓவர் எப்படி இருந்தது? 2020ல் கோவிட்-19 உங்கள் திட்டமிடலில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது?
நிஷாந்த்: கோவிட்-19 எங்கள் வணிக செயல்பாடுகளில் எந்தவித பாதிப்பையோ மாற்றத்தையோ ஏற்படுத்தவில்லை. நாங்கள் 2016 முதலே இப்போது புதிதாக பின்பற்றப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறோம்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உடன் அனைத்து ஸ்டாக்கும் புக் செய்யப்பட்டது. இத்தகைய தேவை இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மற்றொரு புறம் விநியோகம் தடைபட்டது. விவசாயிகளுடன் தொடர்பில் இருந்ததால் சிக்கன் மட்டும் எங்களுக்கு ஸ்டாக் கிடைத்தது. மட்டன் ஸ்டாக் கிடைக்க ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரை ஆனது. கடல் உணவுகள் மூன்று வாரம் வரை ஆனது.
அதேபோல் நாங்கள் ரெடி-டு-குக் பொருட்களையும் வழங்கினோம். உதாரணத்திற்கு யூட்யூபில் ஒரு வீடியோ பார்த்து சமைக்க ஆசைப்பட்டால் அதன் மூலப்பொருள் கிடைக்காது. ஒருவேளை கிடைத்தாலும் மிகக்குறைந்த அளவு பயன்படுத்துவதற்காக பெரிய பாக்கெட் வாங்கவேண்டியிருக்கும். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக மேரினேட் செய்து கொடுக்கிறோம். வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப அதைக் கொண்டு சமைத்துக்கொள்ளலாம்.
கோவிட்-19 தொற்றுக்கு முன்பு இதற்கான தேவை 4-5% இருந்தது. தற்போது மும்மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு 150 கோடி டர்ன்ஓவர் எதிர்நோக்கியுள்ளோம். வளர்ச்சியும் லாபமும் ஒருசேர சாத்தியமாகியுள்ளது. இதுவரை ஆண்டு வளர்ச்சி விகிதம் நூறு சதவீதமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு சுகாதாரமான இறைச்சி குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் தேவை மேலும் அதிகரித்துள்ளது.
யுவர்ஸ்டோரி: ஊரடங்கு சமயத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது?
நிஷாந்த்ன்: ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் தேவை அதிகரித்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் மக்கள் இறைச்சி வாங்கத் தொடங்கியுள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில்லறை விற்பனையை முழுவதுமாக நிறுத்தினோம். இந்தியாவிலேயே முதல் முறையாக தொடர்பற்ற சில்லறை வணிக (காண்டாக்ட்லெஸ் ரீடெயில்) முறையை அறிமுகப்படுத்தினோம்.
இதில் ஆப் மூலம் பிராடெக்டை தேர்வு செய்துகொண்டு பணத்தையும் செலுத்திவிடலாம். நாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம். இதனால் கடைக்கு வெளியில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் பிரச்சனை தவிர்க்கப்பட்டது. அதேபோல் காத்திருந்து ஸ்டாக் இல்லை என்று திரும்ப செல்லும் நிலையும் தவிர்க்கப்பட்டது. மக்களிடையே இந்த முறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
யுவர்ஸ்டோரி: ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சூழல் எப்படி உள்ளது?
நிஷாந்த்: சுகாதாரமான இறைச்சி வாங்காத பலரும் தற்போது எங்களைத் தேடி வரத் தொடங்கியுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது மக்களை டிஜிட்டல் உலகிற்கு திடீரென்று மாற்றியது போன்றே இறைச்சி சந்தையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே எங்கள் நிறுவனத்தில் 400 ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் மேலும் 500 ஊழியர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
யுவர்ஸ்டோரி: உங்களது தொழில்முனைவுப் பயணம் குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்?
நிஷாந்த்: நான் 16 வயதில் என்னுடைய தொழில்முனைவுப் பயணத்தைத் தொடங்கினேன். கல்லூரி நாட்களிலேயே மாதத்திற்கு 300-400 டாலர் சம்பாதித்தேன். படிப்படியாக 2-3 லட்ச ரூபாய் வரை சம்பாதித்தேன். வெற்றி என்பது லாபம், நஷ்டம் இரண்டையும் உள்ளடக்கியது. சமூகத்தில் வெற்றியைக் கொண்டாடுவது போன்றே தோல்வியையும் கொண்டாடவேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
யுவர்ஸ்டோரி: தோல்வியையும் கோவிட் போன்ற எதிர்பாராத சூழலையும் நீங்கள் எதிர்கொள்ள ஊக்கமளிப்பது எது?
நிஷாந்த்: கோவிட் சூழல் இதுவரை யாரும் சந்திக்காத ஒரு புதிய இக்கட்டான சூழல். இதுபோன்ற சூழல்களில் நம் பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பிடவேண்டும். நம் பலவீனத்தை சரிகட்டக்கூடிய பார்ட்னரை இணைத்துக்கொண்டு செயல்படுவது சிறந்தது.
இந்தச் சூழலையும் ஏற்றுக்கொண்டு நாம் அதற்கேற்ப செயல்பட்டு முன்னேறி வருகிறோம். மிகப்பெரிய டீல்களை வெப் மீட்டிங் மூலம் கையாள்கிறோம். இதுபோன்ற நெருக்கடி புது விதமான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கிறது. பாரம்பரிய வணிகங்களையும் டிஜிட்டல்மயமாக்கவேண்டிய கட்டாயத்தை கோவிட் ஏற்படுத்தியுள்ளது.
தன்னம்பிக்கையே ஒரு தொழில்முனைவரின் மிகப்பெரிய சொத்து என்பது என் கருத்து. அந்த தன்னம்பிக்கையே எத்தகைய மோசமான சூழலையும் எதிர்கொள்ள உதவும். நாம் நம்முடைய வசதியான வட்டத்தை விட்டு வெளிப்பட்டால் மட்டுமே புதுமையும் சாதனையும் படைக்கமுடியும்.