‘பெண்ணாக மாறிய ஆண்கள்’ - கேரளாவின் வினோத திருவிழா பற்றி தெரியுமா?
பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில், ஆண்கள், பெண் வேடமிட்டு கலந்து கொண்ட கேரள வினோத திருவிழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
நீங்கள் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் என்றால், நிச்சயம் கடந்த சில நாட்களாக அழகான சில பெண்களின் புகைப்படங்கள் வைரலாகப் பகிரப்படுவதை பார்த்திருப்பீர்கள்.
’பெண்ணே பொறாமைப்படும் பேரழகு’ என கமெண்ட்டுகளைக் குவிக்கும் அந்தப் புகைப்படங்களில் ஒன்றில், நேர்த்தியாக புருவங்கள் திருத்தப்பட்டு, அழகிய ஒப்பனையுடன், கையில் பூக்கள் நிரம்பிய விளக்கு ஏற்றப்பட்ட தட்டுடன் அப்பெண் காட்சியளிக்கிறார்.
சமூகவலைதளங்களில் பகிரப்படும் அனைத்து தகவல்களையும் கண்களை மூடிக் கொண்டு நம்பக்கூடாது என்பதற்கு, இந்தப் புகைப்படமும் ஒரு நல்ல உதாரணம். காரணம் வைரலாகும் அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் நிஜத்தில் ஒரு பெண்ணல்ல...
கேரளாவில் நடைபெற்ற வினோதத் திருவிழா ஒன்றில் அவர் பெண் வேடமிட்டுக் கலந்து கொண்டபோது, எடுத்த புகைப்படம்தான் அது.
ஆண்கள் பெண் வேடமிட்டு கலந்து கொள்ளும் திருவிழாவா? கேட்கும்போதே வியப்பாக இருக்கிறதல்லவா? வாருங்கள் இந்த வினோதத் திருவிழா பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ளலாம்...
சமயவிளக்கு திருவிழா
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது கோட்டங்குலங்கரா தேவி கோயில் (Kottankulangara Devi Temple). இந்தக் கோயிலில் பகவதி தேவி சுயம்புவாக தோன்றியதாகக் கூறப்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் நடைபெறும் சமயவிளக்கு (Chamayavilakku) திருவிழாவில், ஆண்கள், பெண் வேடமிட்டு பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு வருடங்கள் களையிழந்திருந்த இந்தத் திருவிழா, கடந்தாண்டு மீண்டும் விமர்சையாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் கோலாகலமாக நடந்து முடிந்த இந்தத் திருவிழாவில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த, ஆண்கள், பெண் வேடமிட்டு உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.
பெண் வேடமிட்டு ஆண்கள் பகவதி தேவியை வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. எனவே, பெண் வேடமிட்ட ஆண்கள், பாரம்பரிய விளக்குகளை ஏந்தி, பூக்களால் சிறப்பு பூஜை செய்து தேவியை வழிபடுகின்றனர்.
கையில் விளக்கோடு நேர்த்திகடன்
ஆரம்ப காலத்தில் மூங்கில் கூரையால் அமைக்கப்பட்ட இந்தக் கோயில், பின்னர் பக்தர்களின் வருகை அதிகமானதால் பெரிதாக கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு, பெண்கள் மட்டுமே இங்கு வழிபட்டு வந்துள்ளனர். பின்னர், அந்த முறையையும் மாற்றி, ஆண்கள் பெண் வேடமிட்டு இந்தக் கோயிலில் வழிபாடு செய்யும் முறை தொடங்கியுள்ளது.
ஒவ்வோரு ஆண்டும் இத்திருவிழாவில் பங்கேற்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்கள், இந்தக் கோயிலுக்கு வரும் ஆண்களுக்கு, பெண் வேடமிட என்றே, இந்தக் கோயிலின் வாசலில் ஒப்பனைக் கலைஞர்களும் இருக்கிறார்கள். இவர்கள் ஆண்களை அப்படியே தத்ரூபமாக பெண்கள் போன்று தங்கள் ஒப்பனையால் மாற்றி விடுகின்றனர். சில ஆண்கள் வீட்டில் இருந்தே, பெண் வேடத்துடனேயே இந்தக் கோயிலுக்கு வருகின்றனர்.
பெண் வேடமிட்ட ஆண்கள், கைகளில் ஐந்து திரிகள் கொண்ட சமயவிளக்கை ஏந்தி மலர்களுடன் பகவதி தேவியை வழிபடகோயிலுக்குள் செல்கின்றனர். பெண் வேடத்தில் கையில் விளக்கு மற்றும் மலர்களோடு ஊர்வலமாகச் செல்வது, தங்கள் வேலையிலும், தொழிலும் வளத்தைச் சேர்க்கும் என்பது இவர்களது நம்பிக்கை.
திருவிழாவின் வராலாறு :
இந்தத் திருவிழா உருவானதற்கு பின்னணியில் சுவாரஸ்யமான ஒரு வரலாறு உள்ளது. கேரள நாட்டுப்புற கதைகளின்படி, பழங்காலத்தில் இப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் ஒரு கல்லில் தேங்காயை உடைத்துள்ளனர். அப்போது அந்தக் கல்லில் இருந்து தண்ணீருக்குப் பதில் ரத்தம் பீறிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதைக் கண்டு பயந்து போன அந்த சிறுவர்கள், உடனடியாக ஓடிப் போய், ஊராரிடம் நடந்ததைச் சொல்லி இருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக ஊரார் உள்ளூர் ஜோசியரை அணுகியுள்ளனர். அப்போது அவர், சிறுவர்கள் தேங்காயை உடைத்த கல், வனதுர்கா என்றும் அதற்கு பூஜைகள் செய்து கோயில் எழுப்பி வணங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது அறிவுரையின் பேரில், அங்கு ஊரார் கோயில் ஒன்றை எழுப்பியுள்ளனர்.
தென்னை மரத்தின் தூண்கள், இலைகள் மற்றும் இளஞ்சிவப்பு இலைகளைப் பயன்படுத்தி கல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டியுள்ளனர் இப்பகுதி மக்கள். ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே இங்கு வழிபாடு செய்ய அனுமதி அளித்துள்ளனர் ஊரார். ஆனால், முதன்முதலில் வனதுர்கா கல்லைக் கண்டறிந்த மாடு மேய்க்கும் சிறுவர்களும், கோயிலுக்குள் செல்ல விரும்பியுள்ளனர். எனவே, அவர்களுக்கும் பெண் வேடமணிந்து அந்தக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர் பெண்கள்.
இந்த நடைமுறை, அப்படியே வழக்கமாகிப் போக, ஆண்டுதோறும் ’சமயவிளக்குப் பூஜை’ என்ற திருவிழாவைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். கோயிலுக்குள் செல்ல விரும்பும் ஆண்கள், பெண் வேடமிட்டு நேர்த்திக்கடன் செய்யும் முறை இப்படித்தான் ஆரம்பமாகியுள்ளது.
வழக்கம்போலவே, இந்தாண்டும் ஏராளமான ஆண்கள், பெண் வேடமிட்டு இந்த திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் சமூகவலைதளங்களில் பகிர, அவை வைரலாகி விட்டன.
குருத்தோலா பந்தல்
இந்த வினோதத் திருவிழா ஆண்டுதோறும் மலையாள மாதமான மீனத்தின் 10 மற்றும் 11-ம் தேதிகளில் மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் கொண்டாடப்படுகிறது. முதல் கோவில் நினைவாக ஒவ்வொரு ஆண்டுத் திருவிழாவின் போதும் 'குருத்தோலா பந்தல்' அமைக்கப்படுகிறது.
மென்மையான தென்னை இலை, குருத்தோலை , வாழைப்பழம் மற்றும் பானை ஆகியவற்றால் இன்றைய கோவில் சிறிய அளவிலான மாதிரி ஒன்று செய்யப்படும். இந்த குருத்தோலா பந்தல் கோவிலில்தான் திருவிழா நாட்களில் தெய்வத்தின் சிலை வைக்கப்படும். திருவிழா முடிந்ததும் மீண்டும் கோவில் கட்டிடத்திற்கு தெய்வ சிலை மாற்றப்படும்.
19 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவின் இறுதி இரண்டு நாட்களில் மாலையில் தொடங்கி விடியும் வரை இந்த சிறப்பு நிகழ்வு நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தத் திருவிழா நடைபெற்றது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கிய திருவிழா பாரம்பரிய சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளுக்குப் பிறகு, சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. புகழ்பெற்ற சமயவிளக்கு சடங்கின்போது ராட்சத யானை திடம்பு எனும் தெய்வ சிலையை சுமந்து ஊர்வலம் செல்லும் காட்சியை இரவு முழுவதும் காணலாம்.
அழகில் அசர வைக்கும் ஆண்கள்
பெண்களே அசந்து போகும் அளவிற்கு, ஆண்கள் அழகாக புருவங்களைத் திருத்தி, ஒப்பனை செய்து, சேலை கட்டி, பளபளக்கும் நகைகள் அணிந்து ஒய்யாரமாக இந்தத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். சேலை மட்டுமின்றி, நவநாகரீக உடைகள் அணிந்தும் சில ஆண்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.
இந்த முறை வந்தவர்களில், ஆணாக பிறந்து பெண்ணாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு திருநங்கை, மிக நேர்த்தியான மேக்-அப் போட்டுக்கொண்டு அழகாக புடவையில் தோற்றமளித்ததால் கோவிலுக்கு வந்தவர்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது போட்டோ வைரலாக பரவியது.
கேரள சுற்றுலாத் துறை வலைத்தளத்திலும் இந்தத் திருவிழாப் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்தத் திருவிழா பெண் வேடமிட்டு ஆண்கள் வழிபாடு நடத்தும் ஒன்றாக மட்டுமல்லாமல், கேரளாவில் திருநங்கைகளின் மிகப்பெரிய திருவிழாவாகவும் மாறியுள்ளது. தங்களின் அடையாளத்தை கொண்டாடும் ஒரு திருவிழாவாக திருநங்கைகள் இதனைக் கருதுகின்றனர்.
தமிழகத்தில் குலசேகரபட்டின திருவிழா எப்படியோ, அதேபோல் கேரளாவில் இந்த சமயவிளக்கு திருவிழா கருதப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக, இந்தாண்டு பொதுமக்களும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.