கேரளாவில் பீடி சுற்றிய சுரேந்திரன் அமெரிக்க நீதிபதி ஆன உத்வேகக் கதை!

டெக்சாஸில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞரான சுரேந்திரன் கே பட்டேல் என்பவர் அமெரிக்க நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது அனைத்து தரப்பிலும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், அவரது இந்த இமாலய வெற்றிக்குப் பின்னால் உள்ள ஊக்கம் தரும் கதை வெளியாகியுள்ளது.

கேரளாவில் பீடி சுற்றிய சுரேந்திரன் அமெரிக்க நீதிபதி ஆன உத்வேகக் கதை!

Monday January 09, 2023,

3 min Read

டெக்சாஸில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞரான சுரேந்திரன் கே பட்டேல் என்பவர் அமெரிக்க நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது அனைத்து தரப்பிலும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், அவரது இந்த இமாலய வெற்றிக்குப் பின்னால் உள்ள ஊக்கம் தரும் கதை வெளியாகியுள்ளது.

ஜனவரி 1ம் தேதி, டெக்சாஸின் ஃபோர்ட் பெண்ட் கவுண்டியில் அமைந்துள்ள 240வது நீதித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக 51 வயதான சுரேந்திரன் கே பட்டேல் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

Surendran

குழந்தைப் பருவ வறுமை:

சுரேந்திரன் கே பட்டேல், கேரளாவின் காசர்கோட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர் இருவரும் கூலித்தொழிலாளிகளாக இருந்ததால் சுரேந்திரன் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் காலத்திலேய வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 10ம் வகுப்பில் சேர பணம் சேர்ப்பதற்காக தனது சகோதரியுடன் சேர்ந்து பீடி தொழிற்சாலையில் பீடி சுற்றும் வேலையில் செய்துள்ளார்.

அதன் பின்னர், கல்லூரி சென்ற பிறகும் அதே தொழிற்சாலையில் பகுதி நேரம் பீடி சுற்றும் கூலித்தொழிலாளியாக பணியாற்றிக்கொண்டே வேலை செய்து வந்துள்ளார்.

வழக்கறிஞர் கனவு:

சுரேந்திரனுக்கு சிறிய வயதில் இருந்தே தான் ஒரு வழக்கறிஞராக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், குடும்பத்தின் வறுமையான சூழ்நிலை காரணமாக ஈ.கே. நாயனார் நினைவு அரசுக் கல்லூரியில் பொலிட்டிக்கல் சயின்ஸ் படத்தை தேர்வு செய்து படித்தார்.

கல்லூரிப் படிக்கும் காலத்தில் தனது வேலை காரணமாக அவர் அடிக்கடி வகுப்புகளுக்கு வர முடியாமல் போனது. எனவே சக மாணவர்கள் அவருடன் பாடக்குறிப்புகளை பகிர்ந்து கொண்டாலும், வருகைப்பதிவு குறைந்ததால் சுரேந்திரனை செமஸ்டர் தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளனர்.

"நான் பீடி சுற்றும் வேலை பார்த்துக்கொண்டு தான் படிக்கிறேன் என்பதை யாரிடமும் நான் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் என் மீது அனுதாபம் காட்டுவதை நான் விரும்பவில்லை. எனவே, எனது பேராசிரியர்களிடம் எனக்கு தேர்வு எழுத ஒரு வாய்ப்பு தருமாறு கெஞ்சினேன். ஒருவேளை நான் நல்ல மதிப்பெண்களை ஸ்கோர் செய்யவில்லை என்றால், படிப்பதையே நிறுத்திவிடுகிறேன்,” என மன்றாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் சொன்னது போலவே அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று ஃபர்ஸ்ட் கிளாஸில் பட்டம் பெற்றார்.

Surendran K Pattel

ஹவுஸ் கீப்பிங் வேலை:

பட்டேல் கோழிக்கோட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படிக்க விரும்பினார். ஆனால், அவரிடம் போதுமான பணம் இல்லாததால் முதல் ஆண்டு நண்பர்களிடம் கடன் வாங்கி படிக்க ஆரம்பித்தார். இதையே நீண்ட நாட்களுக்கு தொடர முடியாது என்பதை புரிந்து கொண்ட அவர், கல்லூரியில் படித்துக்கொண்டே ஒரு ஓட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து படிப்பிற்கான பணத்தை தானே சம்பாதித்துள்ளார்.

1995ம் ஆண்டு சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற சுரேந்திரன், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஹோஸ்துர்க்கியில் ஓராண்டிற்கு வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். கிட்டதட்ட 10 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார்.

அமெரிக்காவில் வழக்கறிஞர் வாழ்க்கை:

செவிலியரான சுரேந்திரனின் மனைவிக்கு அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் வேலை கிடைத்ததை அடுத்து, குடும்பத்துடன் 2007ம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் குடியேறினர். அங்கு சுரேந்திரனின் மனைவி மருத்துவமனையில் அதிகமாக இரவுப்பணிகளில் இருந்ததால், மகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவருக்கு இருந்தது. இதனால் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வெற்றிகரமான வழக்கறிஞராக வலம் வந்த சுரேந்திரன் குடும்பத்திற்காக அமெரிக்காவில் விற்பனையாளராக பணியாற்றிய போது விரக்தி, மனச்சோர்வு போன்ற சிக்கல்களை சந்தித்தாக கூறியுள்ளார். அதேசமயம் இது அவருக்கு தனது கனவான வழக்கறிஞர் தொழிலை விட்டு விடக்கூடாது என்பதற்காக உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. எனவே, அமெரிக்க வழக்கறிஞராக பணியாற்றுவதற்கான பார் தேர்வில் பங்கு பெற முடிவெடுத்தார்.

முதல் முயற்சியிலேயே வழக்கறிஞர் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதும், சுரேந்திரனை எந்த ஒரு அமெரிக்க சட்டத்துறை நிறுவனமும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளத் தயாராக இல்லை. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தாலும், நேர்காணலுக்கு கூட அழைப்பு வராமல் இருந்துள்ளது.

Judge Surendran

இருப்பினும் மனம் தளராத சுரேந்திரன் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டப் படிப்பில் சேர்ந்து, 2011ம் ஆண்டு பட்டத்துடன், ஒப்பந்த அடிப்படையிலான வேலையையும் பெற்றார்.

2017ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற சுரேந்திரன், தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். 2020ம் ஆண்டு முதல் முறையாக மாவட்ட நீதிபதியாக போட்டியிட்ட போது தோல்வியைத் தழுவினார். மீண்டும் 2022ம் ஆண்டு மாவட்ட நீதிபதிக்கான முயற்சியை மேற்கொள்ள நினைத்த போது பலரும் அவரை சப்போர்ட் செய்யவில்லை.

“அமெரிக்கா ஒரு சிறந்த ஜனநாயக நாடு. ஒருவரின் தோற்றம் அல்லது உச்சரிப்பு, கலாச்சாரம் அல்லது தோற்றம் இங்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது என நான் நினைத்தேன். எனவே, இவை அனைத்தும் என்னைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் என முடிவெடுத்தேன்,” என்கிறார்.

ஜனநாயக கட்சி சார்பில் குடியரசுக் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட இந்தியரான சுரேந்திரன், அவரது உச்சரிப்பு, மொழி, இனம் போன்றவற்றிற்காக விமர்சனத்திற்கு ஆளானாலும் தேர்தலில் வென்று மாவட்ட நீதிபதியாக புத்தாண்டில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுள்ளார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வாழ்க்கையை ஆரம்பித்து, இன்று அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக அமர்ந்துள்ள சுரேந்திரனின் வாழ்க்கை இன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்ல உத்வேகம் தரும் பாடமாக அமைந்துள்ளது.

Montage of TechSparks Mumbai Sponsors