'அடுத்து 2 ஆண்டுகளுக்கு ரொம்ப கஷ்டம் தான்' - மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா எச்சரிக்கை!
தொழில்நுட்பத்துறையில் அடுத்த 2 ஆண்டுகள் என்பது மிகவும் சிரமமானதாக இருக்கும் என, மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்பத்துறையில் அடுத்த 2 ஆண்டுகள் என்பது மிகவும் சிரமமானதாக இருக்கும் என, மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா எச்சரித்துள்ளார்.
உலக அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்கனவே தகவல் தொழில் வட்ட நிறுவனங்கள் வருவாய் இழப்பு, பணி நீக்கம் போன்ற சிரமங்களை அனுபவித்து வருகின்றன. இந்நிலை தொழில்நுட்பத்துறையைப் பொறுத்த வரை அடுத்த இரண்டு ஆண்டுகள் கடும் வலி நிறைந்ததாகவே இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா கூறியுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.
நாதெல்லா பிரதமர் சந்திப்பு :
5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து மும்பையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், தொழில் நுட்பத்துறை வளர்ச்சி சம்பந்தமான கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
"உலகம் குறிப்பாக தொழில்நுட்பத் துறை - மீண்டும் வளர்ச்சியைக் காண்பதற்கு முன் இன்னும் இரண்டு வருட போராட்டத்திற்கு தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட தேவை அதிகரிப்பு தற்போது தணியத் தொடங்கியுள்ளது. இது உலகின் பல பகுதிகளில் மந்தநிலையுடன் சேர்த்து, தொற்றுக்கு முந்தைய சூழலில் இருந்த இயல்புநிலையையும் மீண்டும் கொண்டு செல்கிறது," எனத் தெரிவித்தார்.
இந்தியா குறித்து பெருமிதம் :
திறமை மற்றும் வாய்ப்புகள் நிறைந்த இந்தியாவைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக நாதெல்லா தெரிவித்துள்ளார்.
"உலகில் உள்ள அனைத்து மென்பொருள் உருவாக்கும் நாடுகளையும் உற்று நோக்கும் போது இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்கள் என்று வரும்போது, இந்தியா நம்பர் 1 இடத்தில் உள்ளது. அப்படியானால், தொழில்நுட்பதுறையில் அடுத்த யுகமாக செயற்கை நுண்ணறிவு திறன் இருக்கும். எனவே இந்தியா மீது நீண்ட காலத்திற்கு கவனம் செலுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பற்றிய அவரது நம்பிக்கையை அதிகரிக்க மூன்று காரணிகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
"ஸ்டார்ட்-அப்’களுக்கு இந்தியா மையமாக உள்ளது, ஸ்டார்ட்-அப்’களின் அடிப்படையில் இது உலகின் நம்பர் 2 என்று நான் நினைக்கிறேன். இரண்டாவதாக இந்தியாவில் மக்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்வது உலக விகிதத்தை விட இரட்டிப்பாக உள்ளது. இறுதியாக இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6 முதல் 7 சதவீதமாக வளர்ச்சி அடைந்து வருவது கூடுதல் சிறப்பம்சமாகும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய தனியார் துறையின் கண்டுபிடிப்பு மற்றும் பொதுத்துறையின் பங்களிப்பும் தேவை என நாதெல்லா கூறியுள்ளார்.
டிஜிட்டல் உலகில் மொழி சார்ந்த தடைகளை நீக்க, செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (நேச்சுரல் லேங்குவேஜ் பிராசசிங்) ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அரசு ’பாஷிணி’ என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. அதுகுறித்தும் சத்யா நாதெல்லா புகழ்ந்துரைத்துள்ளார்.
"பாஷினி திட்டம் அருமையாக உள்ளது. அடிப்படையில் ஒவ்வொரு இந்திய நிறுவனமும், ஒவ்வொரு இந்திய குடிமகனும் Ai மாடல்களை அணுக வேண்டும் என்று கூறுகிறது. அதனால், நான் ஹிந்தியில் இருந்து தெலுங்கு, தமிழில் இருந்து கன்னடம், அல்லது எதை வேண்டுமானாலும் மொழிபெயர்க்க முடியும். எந்தவொரு பயன்பாட்டிலும் எந்த தடையும் இல்லாமல் வைத்திருக்கிறீர்கள்," எனத் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம், மந்தநிலை போன்ற பல நாடுகளைத் தாக்கும் சவால்களுக்கு இந்தியா விதிவிலக்காக இருக்காது என நாதெல்லா தெரிவித்துள்ளார்.
‘இந்தியா என்னில் ஒரு அங்கம்’ - பத்ம பூஷன் விருது பெற்ற கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை உருக்கம்!