தமிழக அரசின் நடமாடும் டீ கடைகள்: தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் சார்பில் 20 நடமாடும் தேநீர் கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் சார்பில் 20 நடமாடும் தேநீர் கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
நடமாடும் தேநீர் கடைகளை திறந்து வைத்த முதல்வர்:
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் நடமாடும் தேநீர் கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு சிறப்புப் பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் மதிப்பிட்டிலான 20 இண்ட்கோ 20 நடமாடும் தேநீர் ஊர்திகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலப்படமற்ற தரமான தேயிலை மூலமாக சுவையான தேநீரை மக்களுக்குக் கொடுக்கும் நோக்கத்துடன் நடமாடும் தேநீர் கடைகளை தமிழ்நாடு அரசு ஆரம்பித்துள்ளது.
முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 20 கடைகளில் சென்னையில் 10, கோவையில் 4, திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தலா 3 கடைகள் ஆகிய எண்ணிக்கையில் கடைகள் செயல்பட உள்ளதாகவும், இவை அனைத்தும் தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் செயல்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசுடன் கரம் கோர்த்த இண்ட்கோசர்வ் நிறுவனம்:
இந்தியாவின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு கூட்டமைப்பான INDCOSERVE நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக நடமாடும் டீ விற்பனை கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனம் 30,000 சிறு தேயிலை விவசாயிகள் மூலமாக ஆண்டுக்கு சுமார் 13 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்து வருகிறது. INDCOSERVE நிறுவனம் 16 தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு மேல் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த Indcoserve நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரியா சாஹூ கூறியதாவது:
“தேயிலை விவசாயிகளின் நலன், Indcoserve-இன் வியாபாரத்தை விரிவாக்குதல், பழங்குடி மக்கள் & இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தல் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நடமாடும் டீ விற்பனை கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டாலும், விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
Cafe Coffee Day, Starbucks போல் ஒரு பிரபலமான Brand ஆக Indcoserve நடமாடும் டீ கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.