நோயாளிகள் வீடு தேடி வரும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம்!
தொற்று நோய்களை துரிதமாகக் கண்டறியும் நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை இன்று தமிழக அரசு துவக்கி வைத்துள்ளது.
கொரோனா பரவல் தொடங்கியதாலும், ஊரடங்காலும் மக்கள் பலரும் முக்கிய விஷயங்களுக்கூட வெளியே செல்லமுடியாத சூழலில் உள்ளனர். கொரோனா தொற்று பயம் காரணமாக மருத்துவமனைகளுக்குப் போகவும் சிலர் பயந்துள்ளனர். நாள்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துவருபவர்களும் தேவையான மருந்து-மாத்திரையை வாங்கிக் கொண்டு வீட்டிலேயே இருப்பதால் அவர்களுக்குத் தேவைப்படும் டெஸ்ட்கள் எடுப்பதும் குறைந்துள்ளன.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நலவாழ்வு குழுமத்தின் சார்பில், 5 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொற்றுநோய் மற்றும் கோவிட்-ஆல் ஏற்படும் தொற்று நோய்களை துரிதமாகக் கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தமிழக அரசு துவக்கி வைத்துள்ளது. அதன் அடையாளமாக 5 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன் பரிசோதனை முடிவினை மருத்துவர்கள் துரிதமாக கண்டறிந்து சிகிச்சை அளித்திடவும் இயலும்.
இன்னும் பிற நெஞ்சுக்கு நோய்களான ஆஸ்துமா நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள் தொழில்சார்ந்த நுரையீரல் நோய்களான சிலிகாஸிஸ் போன்றவை ஆரம்பத்திலேயே கண்டறிய இது பயன்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாள0 டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் மாநில நலவாழ்வுத்துறை இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இதில் கலந்து கண்டனர்.
தகவல்: டிஐபிஆர்