BYJU’S ஆலோசனைக் குழுவிலிருந்து மோகன்தாஸ் பாய், ரஜ்னீஷ் குமார் விலகல்!
BYJU'S- கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதன் ஆடிட்டர் டெலாய்ட் வெளியேறியதைத் தொடர்ந்தும் மூன்று முக்கிய குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்தும் மோகன் தாஸ் பாய் மற்றும் ரஜ்னீஷ் இருவரையும் அதன் ஆலோசனைக் குழுவிற்கு நியமித்தது - இந்நிலையில் இருவரும் விலகியுள்ளனர்.
முன்னாள் சி.இ.ஓ மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் போர்டு உறுப்பினருமான மோகன் தாஸ் பாய், இந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் ரஜ்னீஷ் குமார் ஆகியோர் கல்வித் தொழில்நுட்ப பைஜுஸ் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலிருந்து விலகுகின்றனர்.
இவர்களது பதவிக்காலம் ஜூனுடன் முடிவடைகிறது, இந்நிலையில் இருவரும் தங்கள் பணி ஒப்பந்தங்களை புதுப்பிக்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதன் ஆடிட்டர் டெலாய்ட் வெளியேறியதைத் தொடர்ந்தும் மூன்று முக்கிய குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்தும் மோகன் தாஸ் பாய் மற்றும் ரஜ்னீஷ் இருவரையும் அதன் ஆலோசனைக் குழுவிற்கு நியமித்தது. அதோடு, ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்ற முடிவை பரஸ்பரம் எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“பைஜுஸ் ஆலோசகர்களாக நிறுவனத்துடனான எங்கள் பொறுப்பு எப்போதும் ஓராண்டிற்கு என்ற நிலையான கால அடிப்படையில் இருந்தது. நிறுவனர்களுடன் நாங்கள் நடத்திய விவாதத்தின் அடிப்படையில், ஆலோசனைக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்று பரஸ்பரம் முடிவு செய்யப்பட்டது. முறையான பொறுப்பு முடிவுக்கு வந்துவிட்டாலும், நிறுவனர்களும் நிறுவனமும் எந்த ஆலோசனைக்கும் எங்களை அணுகலாம். நிறுவனர்களும் நிறுவனமும் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்,” என்று குமார் மற்றும் பாய் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தி ‘மின்ட்’ ஊடகத்தில் முதன் முதலில் வெளியானது. ஆலோசனைக் குழுவில் நிதி மற்றும் நிர்வாகத் தலைவர்கள் இருவரைச் சேர்ப்பது, BYJU's-இன் நிதி நிர்வாக வழிமுறைகளை வலுப்படுத்துவதையும், வளர்ச்சி மற்றும் வணிக உத்திகளில் முடிவுகளை எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
இருப்பினும், பெங்களூரை தளமாகக் கொண்ட பைஜுஸ் நிறுவனம் பெருகிவரும் சவால்கள், வழக்குகளுக்கு மத்தியில் மீட்டுருவாக்கம் செய்ய பாடுபடுவதால், பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறது.
ஆலோசகர்கள் இருவர் விலகுவது தொடர்பாக பைஜுஸ் சி.இ.ஓ. பைஜுரவீந்திரன் கூறும்போது,
“ரஜ்னிஷ் குமார் மற்றும் மோகன்தாஸ் பாய் ஆகியோர் கடந்த ஆண்டில் விலைமதிப்பற்ற ஆதரவை வழங்கியுள்ளனர். ஒரு சில வெளிநாட்டு முதலீட்டாளர்களால் தொடரப்பட்ட வழக்குகள் எங்கள் திட்டங்களை தாமதப்படுத்தியுள்ளன, ஆனால் இப்போது என் தலைமையில் மறுக்கட்டமைப்பில் தீவிரம் காட்டி வருவதால் அவர்களின் ஆலோசனையை நான் தனிப்பட்ட முறையில் நம்பியிருக்கிறேன்,” என்றார்.