ஒன்றாகப் படித்து, ஒன்றாகவே டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி ஒன்றாகவே தேர்ச்சி பெற்ற அம்மா-மகள்!
ஒரே நேரத்தில் அரசுப் பணித்தேர்வு எழுதி, வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ள தேனியை சேர்ந்த தாய்-மகளின் உத்வேகக் கதை, அரசுப் பணி கனவோடு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கான ஸ்ட்ராங் பூஸ்ட்..
கடுமையான வறுமையினையும், விடாது துரத்திய துயரங்களையும் துட்சமாய் மதித்து, கணவர் இழந்த நிலையிலும் மும்மகள்களையும் படிக்க வைப்பதுடன், மூத்தமகளுடனே படித்து, அரசு பணித்தேர்வில் ஒரே சமயத்தில் மகளுடன் சேர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளார் தேனியை சேர்ந்த விடாமுயற்சியின் உருவடிவம் சாந்திலெட்சுமி ராமச்சந்திரன்!.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பங்கேற்ற அம்மா - மகள் இருவருமே வெற்றி பெற்று, பொது சுகாதாரத் துறையில் சாந்தி லட்சுமியும், இந்து அறநிலையத் துறையில் மகள் தேன்மொழியும் சேர்ந்துள்ளனர்.
மலைகள் சூழ இயற்கை எழில்மிகு தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி அருகே உள்ள அழகிய குட்டி கிராமத்தைச் சேர்ந்த சாந்திலெட்சுமி ராமச்சந்திரனுக்கு கல்வி மீதொரு அலாதி காதல். ஆனால், கனவு வாழ்வை கலைப்பதே ரியாலிட்டியின் வழக்கமாயிற்றே. சாந்திக்கும் அதுவே நடந்தது.
ஆசையாய் கற்ற கல்விக்கு முட்டுக்கட்டை போட்டது அவருடைய திருமணம். ஆம், பத்தாம் வகுப்பு முடித்த 15 வயதிலே ராமச்சந்திரன் என்பவருக்கு மணம் முடிக்கப்பட்டார் அவர். குடும்ப வாழ்வு, விவசாயி கணவனுக்கு ஆதரவாக இருத்தல் என்று அவர் இருந்தாலும், ஆழ்மனதில் இருந்த அவரது உயர்கல்வி ஆசை மட்டும் குறையவே இல்லை. அதனால் தான், தேன்மொழி, அழகுசித்ரா, மற்றும் தீபஹரிணி என மூன்று பெண் குழந்தைக்கு தாயான பிறகும், கல்வி கற்க தொடங்கினார்.
“எனக்கு படிக்கனும்னா ரொம்ப இஷ்டம். எப்படியாச்சும் நாமும் வாழ்க்கையில முன்னேறிட மாட்டோமா என்று என்னைப்போன்ற ஏக்கம் கொண்டவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கல்வி தான். அதனால், படிக்குறதுக்கு வயது ஒரு தடையாக பார்க்கமால், கல்யாணமாகி 6 வருஷங்களுக்கு அப்புறம் 12ம் வகுப்பு தேர்வு எழுதி பாசானேன். தொடர்ந்து பி.ஏ. தமிழ் பட்டம் படித்தேன்,” என்றார்.
2010ம் ஆண்டு இளங்கலை தமிழ் பட்டம் முடித்த சமயத்தில், வறுமை வாட்டும் வீட்டில் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. உடல் நிலைக் குறைவால் இரு கால்களும் செயலிழந்த நிலைக்குள்ளான அவருடைய கணவர், திடீர் ஹார்ட் அட்டாக்கினால் காலமாக, திசைதெரியாது தவித்தது குடும்பம். மூன்று குழந்தைகளுக்குத் தாயான சாந்தி, பிள்ளைகளை கூட்டிக் கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டில் அவர்களுடைய ஆதரவில் வாழத் தொடங்கினார். பின்னர், டைப் ரைட்டிங் கோர்ஸ் முடித்து, பி.எட் படித்துள்ளார்.
“கணவர் இறந்தபிறகு அம்மா வீட்டிலே வசிக்க ஆரம்பித்துவிட்டேன். வீட்டில் சமையல் வேலைக்கூட அம்மா பார்க்கவிடமா, படிக்கச் சொல்லுவாங்க. பெரிய பொண்ணு தேன்மொழி, திண்ணை பயிற்சி பட்டறைக்கு சென்று படிப்பாள். வீட்டுக்கு வந்தபிறகு அனைத்து வேலையும் முடித்தபின், இரவு பத்து மணிக்கு மேல், அன்றைய பாடத்தினை என்மக சொல்லி தருவாள். இரண்டு பேரும் நைட் 12 மணி வரைக்கும் படிப்போம்,” என்று தேர்வுக்கான பயிற்சிக்காலங்களை பற்றி பகிர்ந்து கொண்டார் சாந்தி.
ஆனால், இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு சாந்தி; சந்திக்கும் முதல் முயற்சி அல்ல. கடந்த நான்கு ஆண்டுகளாக சாந்தியும் அவருடைய மகள் தேன்மொழியும் டிஎன்பிஎஸ்சி தேர்வினை தொடர்ந்து எழுதி வருகின்றனர். இதில், இதற்கு முன்பாக மூன்று முறை தேர்ச்சியும் பெற்று, காலியிடம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டுள்ளார். தோல்விகளை கண்டும், கேலிக் கிண்டல்களை கண்டும் துவண்டு போகிறவரல்ல சாந்தி.
“திண்ணை பயிற்சிப் பட்டறையிலே சனி, ஞாயிறு வகுப்புகளுக்கு மட்டும் செல்வேன். அங்கு டீன் ஏஜ் பிள்ளைகள் தான் அதிகம். எனக்கு நிறைய கேள்விகளுக்கு சந்தேகம் வரும். நான் எழுந்து என் சந்தேகங்களை கேட்கும் போதெல்லாம் கிண்டல் பண்ணி சிரிப்பார்கள். அவங்க சிரிப்பாங்கனு வெட்கப்பட்டு படிக்கமா இருக்கமுடியுமா? நம்ம குடும்பச் சூழ்நிலை தான் தெரியுமா? நான் அதை பத்திலாம் கவலையே படமா என் டவுட்டை கேட்டுவிடுவேன்” என்றார்.
விடாதஉழைப்பால் அம்மா- மகள் இருவரும் குரூப் ஸ்டடி செய்து கடந்தாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பங்கேற்றுள்ளனர். தேர்வில் அம்மா - மகள் இருவருமே வெற்றி பெற்று, சாந்தி லட்சுமி பொது சுகாதாரத்துறையிலும் தேன்மொழி இந்து அறநிலையத் துறையிலும் பணியில் சேர்ந்துள்ளனர்.
“எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். இன்று அரசு வேலையில் இருப்பதற்கான காரணமும் தமிழ் தான். தொலைநிலைக்கல்வியில் எம்.ஏ. தமிழ், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். அடுத்து எம்.பில், பி.ஹெச்.டி படித்து தமிழ் பேராசிரியராக வேண்டும் என்பதே என் லட்சியம்” என்றார் சாந்தி.
பலகட்ட போராட்டத்திற்கு பின் கிடைத்த வெற்றிக் களிப்பில் உள்ள தாய்- மகள் இருவருக்கும் வாழ்த்துகள்...