GOOGLE TRENDS 2023: கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் - ஜெயிலர், லியோவுக்கு எந்த இடம்?
இந்தாண்டு கூகுளில் ரசிகர்கள் அதிகம் தேடிய திரைப்படங்களில் பட்டியலில், முதல் பத்து இடங்களில் மூன்று தமிழ்ப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இன்னும் இரண்டு வாரங்களில் 2023ம் ஆண்டு முடிவடைந்து, 2024ம் ஆண்டு பிறக்க இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், உலகின் முன்னணி தேடுதள நிறுவனமான கூகுள், அந்தாண்டு அதிகம் கூகுளில் தேடப்பட்ட விசயங்களை ஒவ்வொரு பிரிவின் கீழும் பட்டியலிடுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள், நிகழ்வுகள், சம்பவங்கள், திரைப்படங்கள் எனப் பல பிரிவுகளின் கீழ், பல பட்டியல்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலானது சர்வதேச அளவில் மட்டுமின்றி, இந்தியாவில் மட்டும் தேடப்பட்ட விசயங்களையும் கொண்டு தனியாகக் தொகுக்கப்பட்டுள்ளது.
அதில், 2023ம் ஆண்டு ’கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்’ பற்றிய தொகுப்பில், இந்த பத்து படங்களில் ஜெயிலர், லியோ மற்றும் வாரிசு என மூன்று தமிழ் படங்கள் இடம் பெற்றுள்ளன. முதலிடத்தில் ஷாரூக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் உள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, பெரும்தோல்வியை அடைந்த படங்களைக்கூட கூகுளில் மக்கள் வலை தேடியுள்ளனர் என்ற ஆச்சர்யத் தகவல் இந்தப் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது. அதோடு, இந்தாண்டு பெரும்பாலும் ஆக்ஷன் படங்களையே மக்கள் அதிகம் விரும்பிப் பார்துள்ளனர் என்பது இந்தப் பட்டியல் மூலம் தெரிய வருகிறது.
இதோ, அந்தப் பட்டியலில் என்னென்ன படங்கள் எந்தெந்த இடங்களைப் பெற்றுள்ளன என்பதை இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
1. ஜவான் (Jawan)
இந்தாண்டு கூகுளில் அதிகளவில் தேடப்பட்ட இந்திய படங்களின் பட்டியலில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளார். அப்பா, மகன் என ஷாரூக்கான் டபுள் ஆக்ஷனில் கலக்கி இருந்த இந்தப் படத்தில், நயன்தாரா நாயகியாக பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார். தமிழ் இயக்குநர் அட்லீ இந்தப் படத்தை இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்த போதும், வசூலில் இப்படம் சாதனை படைத்ததோடு, தற்போது கூகுள் டாப் 10லும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2. கடார் 2 (Gadar 2)
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை 'கடார் 2' என்ற பாலிவுட் படமே பிடித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக 80-களின் பிரபல ஹீரோவான சன்னி தியோல் நடித்திருந்தார். இப்படம் 2001-இல் வெளியான ‘கடார் - ஏக் ப்ரேம் கதா’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். அப்போதைய ஹிட் படமான கடார், மீண்டும் தற்போது ப்ளாக் ப்ளஸ்டர் ஹிட் அடித்தது.
3. ஒப்பன்ஹெயிமர்(Oppenheimer)
அணுகுண்டின் தந்தை என அறியப்படும் ’ராபர்ட் ஓப்பன்ஹைமர்’ போரின் போக்கை எப்படி தனது புத்திசாலித்தனத்தின் மூலம் மாற்றினார். அவரின் கண்டுபிடிப்பு ஓர் பெரும் அழிவுக்கு அடித்தளம் போட்டது என்பதை சொல்லும் இந்த ஹாலிவுட் திரைப்படம் Oppenheimer, இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரபல ஹாலிவுட் ஹீரோ கிறிஸ்டோபர் நோலனின் ’ஓப்பன்ஹைமர்’ சினிமா ரசிகர்களிடத்தில் அப்படம் குறித்த அறிவிப்பு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, உலகம் முழுவதும் பேசப்பட்டது.
4. ஆதிபுருஷ் (Adipurush)
இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான இப்படம், மோசமான தோல்வியைச் சந்தித்தது. ஆனாலும் இப்படத்தைப் பற்றிய விவரங்களை ரசிகர்கள் கூகுளில் அதிகம் தேடி உள்ளனர் என்பது இந்தப் பட்டியல் மூலம் தெரிய வருகிறது.
5. பதான் (Pathan)
இந்தாண்டு ஜவானுக்கு முன்னதாக ஷாரூக் நடிப்பில் வெளியான ’பதான்’ திரைப்படம் இந்தப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இதுவும் ஒரு சூப்பர் ஆக்ஷன் படம் என்பதால், ஷாருக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
6. தி கேரளா ஸ்டோரி (The Kerala Story)
இந்தாண்டு வெளியான திரைப்படங்களில் அதிக சர்ச்சையில் சிக்கிய திரைப்படமான 'தி கேரளா ஸ்டோரி', கூகுளின் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் படத்தை சுதிப்தோ சென் இயக்கி இருந்தார்.
7. ஜெயிலர் (Jailer)
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீசான, ஜெயிலர் திரைப்படம் இந்தப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதும், வசூலில் இப்படம் மாபெரும் சாதனை படைத்தது. ரஜினியின் ஆக்ஷன் படங்களின் வரிசையில் முக்கிய படமாக அமைந்துள்ள இப்படத்தை கூகுளில் ரசிகர்கள் அதிகம் தேடியுள்ளனர் என்பது இந்தப் பட்டியல் மூலம் தெரிய வருகிறது.
8. லியோ (Leo)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் இந்தப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்த இப்படம் கடந்த அக்டோபர் மாதம் ரிலீசானது.
9. டைகர் 3 (Tiger 3)
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த டைகர் 3 திரைப்படம் இந்த பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது.
10. வாரிசு (Varisu)
இந்தப் பட்டியலில் 10வது இடத்திலும் தமிழ் படம் தான் உள்ளது. லியோவிற்கு முன்னதாக விஜய் நடிப்பில் இந்தாண்டு ஜனவரியில் ரிலீசான வாரிசு படம், கூகுள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.
Google Trends 2023: கூகுள் தேடலில் இந்தியாவில் இடம் பிடித்த டாப் 10 செய்திகள் எவை?