பாரம்பரிய சங்கேதி உணவு வகைகளை தயாரிக்கும் நிறுவனம் தொடங்கி வெற்றி ப்ராண்ட் ஆக்கிய ஒரே குடும்ப நிறுவனர்கள்!
மாலதி ஷர்மா, அவரின் சகோதரர் ரவீந்திரா, அவரின் மனைவி நாகரத்னா, இணைந்து தொடங்கிய ’Adukale’ பிராண்ட் பாரம்பரிய சங்கேதி மசாலாக்கள், நம்கீன், தயார்நிலை உணவு வகைகளை வழங்குகிறது.
சாம்பார் என்பது ஒரு முக்கிய உணவு வகை மட்டுமல்ல, அது தென்னிந்தியாவின் வாழ்க்கைமுறையில் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம். இந்தப் பகுதியின் உணவு வகைக்கு பரிச்சியமான அனைவருமே இதை நன்கறிவார்கள். அதேசமயம் இதில் பல வேறுபாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் சாம்பாரில் ஃப்ரெஷ்ஷாக அரைக்கப்பட்ட மசாலாக்களுடன்கூடிய சாம்பார் பொடி சேர்க்கப்படும். கேரள சாம்பாரில் தேங்காய் இடம்பெற்றிருக்கும். கர்நாடக சாம்பாரில் சிறிதளவு வெல்லம் சேர்க்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் அவர்களுக்கே உரிய சிறப்பு மூலப்பொருட்கள் சேர்க்கப்படும்.
சங்கேதி சமூகத்தினர் வித்தியாசமான முறையில் சாம்பார் தயாரிப்பார்கள். இவர்களது மசாலா தயாரிப்பில் லவங்கப்பட்டை சேர்க்கப்பட்டிருக்கும். இந்த சமூகத்தின் பின்னணியைப் போன்றே இவர்களது உணவுவகைகளும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகும். எனவே இது தனித்துவமானது. இவர்கள் சங்கேதி சமூகமாக உருவாகி நாச்சாரம்மா என்கிற பெண்ணைத் தொடர்ந்து கேரளா மற்றும் தமிழக எல்லையான செங்கோட்டையிலிருந்து மாற்றலாகி ஹசன் அருகே உள்ள கௌசிகா, கர்நாடகா, மைசூரு மாவட்டத்தில் உள்ள பெட்டடபுரு ஆகிய பகுதிகளில் குடியேறியதாக கூறப்படுகிறது.
சங்கேதி உணவுவகைகள்
பிரபல பிராண்டான ‘அடுக்களே’ (Adukale) - சங்கேதியில் சமையலறை என்று பொருள்) தனித்துவமான உணவுவகையை வழங்குகிறது. தயார் நிலை உணவுகள், கலந்த மசாலாக்கள், நம்கீன் என அடுக்களேவின் பல்வேறு தயாரிப்புகள் பதப்படுத்தப்படும் பொருட்களோ செயற்கை நிறங்களோ இன்றி தயாரிக்கப்படுகிறது. இவை பெங்களூருவில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான அவுட்லெட்களில் கிடைக்கிறது. உப்புமா, அவல் வகைகள், கொடுபலே, சாம்பார் பொடி, ரசப்பொடி, அனைத்து வகையான சட்னி பொடிகள் போன்றவை இவர்களது தயாரிப்புகளில் அடங்கும்.
”எங்களது தயாரிப்புகள் இத்துடன் முடிந்துவிடவில்லை,” என்கிறார் அடுக்களே இணை நிறுவனர் மாலதி ஷர்மா. அவர் மேலும் கூறுகையில்,
”வெவ்வேறு கலாச்சாரங்களை இணைத்துத் தயாரிப்பதால் எங்களது உணவு தனித்துவமானதாக உள்ளது. சாம்பார் பொடி, ரசப்பொடியைப் பொறுத்தவரை அதிலுள்ள மசாலாக்கள் மட்டுமின்றி அவற்றை வறுக்கும் வெப்பநிலையும் அரைக்கப்படும் பதமும் முக்கியம்,” என்றார்.
மாலதியின் சகோதரர் ரவீந்திராவும் அவரது மனைவி நாகரத்னாவும் அடுக்களே நிறுவனத்தின் மற்ற இணை நிறுவனர்கள் ஆவர்.
பெரியளவில் வளர்ச்சி
அடுக்களே நிறுவனம் பாரம்பரிய சங்கேதி ரெசிபிக்களை நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து வழங்கியது. தோசை மாவில் சிறிது பெருங்காயமும் வெந்தியமும் சேர்க்கப்பட்டது. இவ்வாறான சிறு மாற்றங்களும் சுவையைக் கூட்டியது.
பெங்களூருவில் உள்ள மாலதியின் 10X10 அளவு கொண்ட சிறு அறையில் அடுக்களே தொடங்கப்பட்டது. ரவீந்திரா அந்த சமயத்தில் ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தில் தனது பணியை விட்டு விலகி முழு நேரமாக விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்.
”நாங்கள் மூவரும் யதேச்சையாக உரையாடியபோது அடுக்களே உருவாக்கும் எண்ணம் தோன்றியது. என் கணவர் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவர் சங்கேதி உணவு வகைகளையே அதிகம் விரும்புவார். இந்த எண்ணத்தை செயல்படுத்துவதில் அவர் ஆர்வம் காட்டினார். நானும் மாலதியும் அப்போது முழுநேரமாக பணிபுரிந்து வந்தபோதும் இதில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருந்தோம். ஒரு சிறு கடாயையும் அடுப்பையும் கொண்டு முதலில் ரசப்பொடி தயாரிக்கத் துவங்கினோம்,” என்று நாகரத்னா நினைவுகூர்ந்தார்.
இது 2009-ம் ஆண்டு நடந்தது. முதலில் தயாரித்த ரசப்பொடி பேக் செய்யப்பட்டு குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. விரைவிலேயே பரிந்துரை வாயிலாக பொடி பிரபலமாகி ஸ்டோர்களில் இருந்து விசாரணைகள் வரத் தொடங்கியது.
”சமையலைப் பொறுத்தவரை என்னுடைய மாமியாரின் வழிகாட்டலையே பின்பற்றினோம். மூலப்பொருட்கள் எந்தவித பதப்படுத்தும் பொருட்களும் கலக்கப்படாமல் ஃப்ரெஷ்ஷாக அரைக்கப்பட்டது. இதனால் பாரம்பரிய சுவையைத் தக்கவைக்கமுடிந்தது. மக்கள் எங்கள் தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு பாராட்டத் தொடங்கினார்கள்,” என்றார்.
ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்ட அடுக்களே 30 டன் திறன் கொண்ட 3,000 சதுர அடி தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள மேலும் பெரிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இது 100 டன் திறன் கொண்ட 7,000 சதுர அடி தொழிற்சாலையாகும்.
”எங்களது உற்பத்தித் திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளபோதும் எங்களது செயல்முறையில் எந்தவித மாற்றமும் இல்லை. எங்களது பார்ட்னர்களில் ஒருவர் ஒவ்வொரு நிலையையும் மேற்பார்வையிட்டு தயாரிப்பை சோதனை செய்கிறார். இதனால் ஒவ்வொரு நிலையிலும் தொடர்ந்து தரத்தை சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது,” என்றார் மாலதி.
சிறந்த பாரம்பரியம் மற்றும் சுவை
பெங்களூருவில் உள்ள 100 அவுட்லெட்கள் தவிர இந்த பிராண்ட் மல்லேஸ்வரம் நகரில் அனுபவ மையம் ஒன்றையும் திறந்துள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவதற்கு முன்பு அவற்றை சுவைத்துப் பார்க்கலாம். வருங்காலத்தில் கூடுதல் அனுபவ மையங்களை திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குடும்பத்தினர் ஒன்றுசேர்ந்து தொடங்கிய ஒரு எளிய முயற்சி தற்போது மிகப்பெரிய உணவு பிராண்டாக உருவெடுத்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பிரபலமாகியுள்ளது.
”நாங்கள் இந்த முயற்சியை சுயநிதியிலேயே தொடங்கினோம். வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளை சிறப்பாக ஏற்றுக்கொள்வதை உணர்ந்தபோது எங்களது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டோம். தேசிய வங்கிகள் மூலம் உதவி கிடைத்தது. கடந்த ஆண்டு 72 டிகிரிஸ் கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்திடமிருந்து நிதி பெற்றோம். Sequoia நிறுவனத்துடன் முன்பு இணைந்திருந்த முதலீட்டாளர் ஒருவரிடமிருந்தும் முதலீடு பெற்றுள்ளோம்,” என்று தெரிவித்தார் மாலதி.
ஆரம்பத்தில் இருந்தே அடுக்களே லாபகரமாக செயல்படுவதாக அதன் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர். 2020 நிதியாண்டின் இறுதியில் 7-8 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்சமயம் அமெரிக்க மற்றும் யூகே சந்தைகளுக்கு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. விரைவில் இந்த நாடுகளில் செயல்பாடுகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
”மக்கள் சிறுதானியங்களை விரும்பத் தொடங்கியிருப்பதால் சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் பொங்கல், பிசிபெலாபாத் போன்ற உணவு வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார் நாகரத்னா.
மையாஸ், எம்டிஆர் போன்ற மிகப்பெரிய பிராண்டுகள் போட்டியாளர்களாக இருப்பினும் அடுக்களே எப்போதும் பாரம்பரிய சுவையிலேயே கவனம் செலுத்தும் என்றார். மேலும் “வாடிக்கையாளார்கள் எங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். சங்கேதி சுவையில் சற்றும் சமரசம் செய்துகொள்ளாமல் தரத்தை நிர்வகிப்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா