கிரிஹலக்ஷ்மி-யை தொடர்ந்து பொது இடத்தில் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அம்மாக்கள்!
கிரிஹலக்ஷ்மி என்னும் கேரள இதழ் பொது இடங்களில் பாலூட்டுவது இயல்பு என காட்டும் நோக்கில் தனது மார்ச் மாதப் பதிப்பில் ஒரு தாய் குழந்தைக்கு பாலூட்டும் வகையில் முன் பக்கத்தை அமைத்திருந்தது.
இதழ் வெளி வந்த சில நிமடங்களில் உலகின் பெரும்பாலானோரின் பார்வையை தன் பக்கம் திருப்பி பல சர்ச்சைகளுக்கு ஆளாக்கியது. ஒரு கூட்டத்தினர் அதை ஆதரிக்க, பலர் இது இயற்கைக்கு புறம்பானது எனவும், பாலூட்டும் அந்த பின் நிஜ தாய் அல்ல, பெண்ணின் மார்பகம் தெறிவது ஆபாசமாக உள்ளது என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து, இந்த இதழை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தனர்.
இது ஒரு புறம் இருக்க, விலங்குகளுக்கு உதவும் பீட்டா நிறுவனம் சர்வதேச மகளிர் தினத்தன்று ’2018-ன் சிறந்த தாய்’ என விருது அளித்து கிரிஹலக்ஷ்மி இதழை கௌரவப்படுத்தியுள்ளது.
இதனையொட்டி ஊடகங்கங்களுக்கு பேட்டி அளித்த பீட்டா இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் நேஹா சிங்,
“அனைத்து பாலூட்டிகளும் தங்கள் குழந்தைகளுக்கு சரியான உணவை இயற்கையாகவே உற்பத்தி செய்கின்றன, ஆகவே தாய்ப்பால் கொடுக்கும் மனிதத் தாய்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் பெருமிதம் கொள்ளலாம்," என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் மனிதர்கள் பார்க்கும் தவறான பார்வைக்கு பயந்தே தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதில்லை, இது போன்ற முயற்சி அனைத்து அம்மாக்களுக்கு பெரும் உதவியாக அமையும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பது இயல்பு என ஆதரிக்கும் நோக்கில் பல முகநூல் பக்கம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் பல தாய்மார்கள் பொதுஇடத்தில் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் சமுக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஐந்து வருடத்திருக்கு முன் துவங்கப்பட்ட “Breastfeeding Support for Indian Mothers” என்னும் முகநூல் பக்கமும் இந்த இதழுக்கு ஆதரவு குரல் எழுப்பியுள்ளது. இந்த பக்கத்தில் 65,000 மேலான தாய்மார்கள் உள்ளார்கள். தாய்ப்பால் கொடுப்பதை குறித்து சித்தரிக்கப்பட்டுள்ள பல வதந்திகளை உடைக்கும் நோக்கில் துவங்கப்பட்டதே இது.
இப்பக்கத்தின் உரிமையாளர் மற்றும் இவ்வமைப்பின் நிறுவனர், அதுனிக்கா பிரிகாஷ் கூறுகையில்,
“தாய்மார்கள் எங்கு பாலூட்ட வேண்டும் என்பது அவர்களின் விருப்பத்திற்கு உரியது. இதில் குழந்தை மற்றும் தாயின் விருப்பத்தை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மறைக்க வேண்டுமா வேண்டாமா என்பதை கூட அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்,”
என கிரிஹலக்ஷ்மிக்கு ஆதரவாக பேசினார். மேலும் அவர்கள் வெளியிட்ட பத்திரிக்கை வெளியீட்டில், இது போன்ற துணிச்சலான செயலை தாங்கள் பாராட்டுவதாகவும், இந்த பிரச்சாரத்தை துவங்கி வைத்ததற்கு நன்றி எனவும் தெரிவித்தனர். இதனையோட்டி முகநூலில் #Breasts4Babies என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் துவங்கியுள்ளனர். பல தாய்மார்கள் இந்த ஹாஷ்டேகில் தங்கள் புகைப்படங்கள் வெளியிட்டு ஒற்றுமையை காட்டியுள்ளனர்.
“தாய்ப்பால் எப்படி ஒரு குழந்தைக்கு உரிமையோ அதே போல் எங்கு வேண்டுமானாலும் கொடுப்பது ஒரு தாயின் உரிமை,”
என தெரிவிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலூட்டும் தாய் வஹிதா சதீஷ் குமார்.