'இதுதான் சரியான டைம், மிஸ் பண்ணிடாதீங்க' - மாணவர்களுக்கு தோனி கொடுத்த அட்வைஸ்!
ஒசூரில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தான் பள்ளியில் படிக்கும் போது 10ம் வகுப்பு கூட பாஸ் ஆக மாட்டேன் என தனது தந்தை கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.
ஒசூரில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி, தான் பள்ளியில் படிக்கும் போது 10ம் வகுப்பு கூட பாஸ் ஆக மாட்டேன் என தனது தந்தை கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.
ஒசூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர், மாணவர்களிடையே உரையாற்றிய தோனி, தனது பள்ளி நாட்கள் மற்றும் கிரிக்கெட் பயிற்சி குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
கிரிக்கெட் மைதான திறப்பு விழா:
ஓசூர் கசவகட்டா பகுதியில் உள்ள எம்.எஸ் தோனி குளோபல் பள்ளி என்ற தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, பள்ளியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் இந்த பள்ளி தனது அதிகாரப்பூர்வ இணைப்பை அறிவித்துள்ளது. பள்ளி நேரத்துக்கு பின் அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டில் தொழில் முறை பயிற்சி அளிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் இணைந்துள்ளது. இந்த இணைப்பு நிகழ்ச்சியையும் எம்.எஸ்.தோனி தொடங்கிவைத்தார்.
இது தவிர, கால்பந்து மைதானத்தில் டிஜிட்டல் முறையில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் மாற்றும் வகையில் சுமார் 1800 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் தோனி தொடங்கி வைத்தார். தோனி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அப்பா ஹேப்பி:
தோனி ஏழாம் வகுப்பில் இருந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பள்ளி கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்தார். ஆனால், அதன் பிறகு பயிற்சியாளரின் ஆலோசனைப்படி கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரானார்.
இந்நிலையில், பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி,
“ஏழாம் வகுப்பில் இருந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். அப்போது நான் சராசரி மாணவன். இதனிடையே, நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு வகுப்பில் என் வருகை மெதுவாகக் குறைந்தது. வருகைப்பதிவு பிரச்சினையைத் தவிர நான் மிகவும் நல்ல மாணவனாகவே இருந்தேன். பத்தாம் வகுப்புக்கு வந்தபோது பெரும்பாலும் மைதானத்தில் தான் இருந்தான். இதனால் 10ம் வகுப்பு பாடங்கள் குறித்து எனக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் தேர்வுகளில் எனக்கு புரியாத அத்தியாங்களில் இருந்து தான் அதிகமாக கேள்விகள் வந்தன,” எனத் தெரிவித்துள்ளார்.
தோனி அதிக நேரம் கிரிக்கெட் பயிற்சியிலேயே இருந்ததால் அவர் நிச்சயம் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற மாட்டார் என்றும், மீண்டும் ஒருமுறை பரீட்சை எழுத வேண்டும் என்றும் அவர் தந்தை கூறியதை நினைவுகூர்ந்துள்ளார்.
“நான் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறமாட்டேன் என்று என் தந்தை நினைத்தார். மீண்டும் தேர்வை எழுத வேண்டிய நிலை வரும் என எண்ணினார். ஆனால், நான் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். அதுவும் 66 சதவீத மதிப்பெண்களுடன். அதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என் அப்பாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்," என்றார் தோனி.
பள்ளி நண்பர்கள்:
பள்ளி மாணவர்கள் பலரது கேள்விக்கும் தோனி பதிலளித்தார். அதில் ஒரு மாணவன் உங்களுக்குப் பிடித்த பாடம் என்ன என கேள்வி எழுப்பினார். இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த தோனி,
“நான் 10-ம் வகுப்பில் 66 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தால், 12ம் வகுப்பில் 56 அல்லது 57 சதவீத மதிப்பெண்கள் பெற்றேன். சரியாக ஞாபகம் இல்லை...” என்று சொல்லி சிரித்தார்.
பள்ளி நாட்கள் குறித்தும் பள்ளி நண்பர்கள் குறித்தும் கூட தனது நினைவுகளை தோனி மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
“நான் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும், அது ஒரு டைம் மெஷின் போல... நான் என் பள்ளியில் கழித்த நேரத்துக்கு சென்றுவிடுவேன். படிப்பு, விளையாட்டு, என நீங்கள் பெறக்கூடிய சிறந்த தருணங்களில் இதுவும் ஒன்று என்று நான் எப்போதும் நம்புகிறேன். ஆனால், பள்ளியில் செலவழித்த நேரம் திரும்ப வராது. உங்களுக்கு எப்போதும் இனிமையான நினைவுகள் இருக்கும். நீங்கள் இங்கு உருவாக்கிக்கொள்ளும் நண்பர்கள், உங்களுடன் நீண்ட காலம் பயணிப்பார்கள்..." என்றார்.
மாணவர்களுக்கு தோனி அறிவுரை:
பள்ளியில் கற்கும் குணங்கள் தான் மாணவர்களுக்கு வலு சேர்ப்பதாகவும், அவை தான் வாழ்நாள் முழுவதும் வெளிப்படும் என்றும் மாணவர்களுக்கு மகேந்திர சிங் தோனி அறிவுரை கூறியுள்ளார்.
“முக்கியமான விஷயம் என்னவென்றால், பள்ளி என்பது உங்கள் குணாதிசயங்கள் வளரும் காலகட்டம். சிறுசிறு குணாதிசயங்கள்தான் உங்களை வலிமையாக்குகிறது. பள்ளிக்கு நேரத்துக்குச் செல்ல வேண்டும், ஒழுக்கமாக இருக்க வேண்டும், பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும், தினமும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுதும் பள்ளியில் கற்கும் நல்ல குணங்கள், உங்களுடன் நீண்ட காலம் தங்கியிருக்கும் மற்றும் உண்மையில் நீங்கள் யார் என்பதை உணரும் காலக்கட்டமும் இதுதான். இப்போது உங்களுக்கு இருக்கும் நேரத்தை அதிகமாகப் பயன்படுத்துங்கள். அனைத்து உள்கட்டமைப்பையும் அதிகமாகப் பயன்படுத்துங்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த தோனி, 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
கிரிக்கெட் உலகில் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்லில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றது.