கோபத்தில் கொந்தளித்த ‘மிஸ்டர் கூல்’ - தோனி பற்றி ரகசியம் பகிர்ந்த முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர்!
‘மிஸ்டர் கூல்’ என கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி ஒருமுறை தனது கேப்டன்சியில் விளையாடிய வீரர்களை சகட்டுமேனிக்கு கோபத்தில் விளாசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
‘மிஸ்டர் கூல்’ என கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி ஒருமுறை தனது கேப்டன்சியில் விளையாடிய வீரர்களை சகட்டுமேனிக்கு கோபத்தில் விளாசிய சம்பவம் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
‘மகேந்திர சிங் தோனி’ இந்த பெயரைக் கேட்டாலே இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலும் ‘மிஸ்டர் கூல்’, ‘கேப்டன் கூல்’ என சொல்வது உண்டு. இதற்குக் காரணம் எதையும் கூலாக ஹேண்டில் செய்யக்கூடிய தல தோனியின் கேப்டன் சியும், முகத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் புன்னகையும் தான்.
அப்படிப்பட்ட ‘மிஸ்டர் கூல்’ தோனியே ஒருமுறை டிரஸ்ஸிங் ரூமில் தனது சக விளையாட்டு வீரர்களிடம் கோபப்பட்டதாக இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது பயோகிராபியில் குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி, மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்களைப் பற்றிய பல ரகசியங்களை தனது சுயசரிதையான ‘கோச்சிங் பியாண்ட் - மை ஜர்னி வித் தி இந்திய கிரிக்கெட் டீம்’ என்ற நூலில் வெளிப்படுத்திய ஆர் ஸ்ரீதர். 2014-ம் ஆண்டு இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கூல் இழந்த ‘தல’ தோனி
2014ம் அண்டு மேற்கிந்திய தீவுகள் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டது. டெல்லியில் உள்ள ஃபெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த சர்வதேச அளவிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர்களின் கவனக்குறைவான பீல்டிங்கைப் பார்த்து தோனி கடுப்பாகியுள்ளார்.
7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது, இருப்பினும், தனது அணி பீல்டிங்கில் சொதப்பியதை கேப்டன் தோனியால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
"இந்திய அணியுடனான எனது ஆரம்ப நாட்களை திரும்பிப் பார்க்கிறேன்... இது எம்.எஸ்.தோனியைப் பற்றியது. நாங்கள் அக்டோபர் 2014ல் ஃபெரோஸ் ஷா கோட்லாவில் மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் எளிதாக வெற்றி பெற்றோம், ஆனால் களத்தில் நாங்கள் மிகவும் மோசமாக விளையாடியிருந்தோம். வீரர்கள் முயற்சியின்மை மற்றும் உடல் வலிமை இல்லாதது போல் நடந்து கொண்டதைப் பார்த்து எம்.எஸ்.தோனி கோபமடைந்தார்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் உடற்தகுதி தரம் எவ்வளவு மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை அவர் கவனித்தார். அந்த போட்டிக்கு பிறகு டிரஸ்ஸிங் ரூமில் இருந்த அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தினார். உடற்தகுதி தரத்தை பூர்த்தி செய்யாத எந்த வீரரும் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்கள் என்று எச்சரித்துள்ளார்.
போட்டிக்குப் பிறகு தோனி, "இன்று நிறைய விஷயங்கள் சரியாக இல்லாதது போல் உணர்கிறேன். வெற்றியை வலுக்கட்டாயமாக இழுக்க வேண்டியிருந்தது. இந்த ஆட்டம் நமது கண்களை திறக்க வைத்திருக்கிறது. வெற்றிப் பக்கத்தில் இருந்தாலும், அதனை இழக்க இருந்தோம்,” என கோபமாகப் பேசியுள்ளார்.
யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பீல்டிங் எவ்வளவு மோசமாக இருந்தது என மிகவும் கோபமாக தோனி டீமில் இருந்தவர்களிடம் பேசியுள்ளார். அந்த சம்பவத்திற்கு பிறகு இந்திய அணியின் பீல்டிங் தரம் மிகவும் மேம்படுத்தப்பட்டு, அனைவரும் உடற்தகுதியில் கவனம் செலுத்தியதாகவும் ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.
தொகுப்பு: கனிமொழி
'இதுதான் சரியான டைம், மிஸ் பண்ணிடாதீங்க' - மாணவர்களுக்கு தோனி கொடுத்த அட்வைஸ்!