Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

CSK கேப்டன் பதவியிலிருந்து விலகிய ‘தல’ தோனி: ‘பிகில்’ டயலாக்கில் தெறிக்கும் தோனி வீடியோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதை அடுத்து புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

CSK கேப்டன் பதவியிலிருந்து விலகிய ‘தல’ தோனி: ‘பிகில்’ டயலாக்கில் தெறிக்கும் தோனி வீடியோ!

Thursday March 24, 2022 , 4 min Read

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதை அடுத்து புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டிகள் வரும் சனிக்கிழமை மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்க உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், ரன்னர் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அகமதாபாத், லக்னோ என இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 10 அணிகளும் 14 சூப்பர் லீக் போட்டிகளை ஆடவுள்ளன.

இன்னும் 2 நாட்களில் ஐபிஎல் போட்டி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியை சொல்லியிருக்கிறார் ‘தல தோனி’.

Dhoni

‘தல’ தோனியின் கேப்டன்சி இல்லாத சிஎஸ்கே:

சிஎஸ்கே என்றாலே கிரிக்கெட் மீது ஆர்வம் இல்லாத ரசிகர்கள் கண் முன்பு கூட மஞ்சள் ஜெர்சியில் நிற்கும் தல தோனியின் முகம் தான் நினைவுக்கு வரும். 40வது பிறந்தநாளை கொண்டாடி முடித்திருக்கும் தோனி, சிஎஸ்கே அணியை விட்டு பிரியா விடை தரப்போவதற்கான அறிகுறியை இன்று காட்டியுள்ளார்.

சர்வதேச போட்டிகள் உள்ளூர் போட்டிகள் என அத்தனை விதமான போட்டிகளிலிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தோனி ஐபிஎல்-இல் மட்டுமே ஆடி வந்தார். அதுவும் கடந்த சீசனின் போது தோனியின் பேட்டிங் சரியில்லை என அவரது ரசிகர்களே விமர்சிக்கும் அளவிற்கு விளையாடினார். தோனியிடம் பழைய ஸ்டாமினா இல்லை, நல்ல ஃபார்மில் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

Dhoni

இதனிடையே, இந்த ஆண்டு தான் தோனி சிஎஸ்கேவில் விளையாடப்போகும் கடைசி மேட்ச் என்றும் கூறப்பட்டது. 2020ம் ஆண்டு வரை ஓய்வைப் பற்றி கவலைப்படாமல் இருந்த தோனி, கடந்த ஆண்டு முதல் சிஎஸ்கேவை விட்டு பிரிய தயாராகி வருவதை அவரே சில சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார்.

சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கூட,

‘சென்னையில்தான் எனது கடைசி T20 ஆட்டத்தை விளையாடுவேன்’ என தெரிவித்திருந்தார்.

ஆனால் அது இந்த சீசனில் வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அனைத்து போட்டிகளுமே மும்பையைச் சுற்றியே திட்டமிடப்படுள்ளன, சேப்பாக்கத்தில் இந்த ஆண்டு போட்டி நடக்க வாய்ப்பில்லை எனக்கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே தோனி கேப்டன் பதவியை விட்டு விலகப்போவதாக தகவல்கள் வெளியாகின. அப்படி அவர் வெளியேறினார் அடுத்த கேப்டன் யார் என்றும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் விவாதித்து வந்தனர். இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தானாகவே தல தோனி விலகியிருக்கிறார்.

சிஎஸ்கேவில் தோனி படைத்த கேப்டன்சி சாதனைகள்:

சிஎஸ்கே அணியை 4 முறை வெற்றி கோப்பையுடன் அலங்கரித்த தோனி, இன்று அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க தோனி முடிவெடுத்துள்ளார். இனி அணியை ஜடேஜா வழிநடத்திச் செல்வார். 2012 முதல் சிஎஸ்கே அணியின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து வரும் ஜடேஜா, சிஎஸ்கேயை வழிநடத்தும் மூன்றாவது வீரராக மட்டுமே இருப்பார். இந்த சீசனிலும் அதற்கு அப்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தொடர்ந்து விளையாடுவார்,” எனக் குறிப்பிட்டுள்ளது.

அக்டோபர் 2012ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக்கில் யார்க்ஷயர் அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா ஒருமுறை அணியை வழிநடத்தியுள்ளார். இதனால் சிஎஸ்கேவை வழிநடத்தும் 3வது வீரராக ஜடேஜா குறிப்பிடப்படுகிறார்.

கேப்டனாக தோனி இருந்த போது ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி பல சாதனைகளை படைத்துள்ளது அவற்றில் சில,


  • பிப்ரவரி 2008ல் நடைபெற்ற தொடக்க ஐபிஎல் ஏலத்தில் மிகவும் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமை தோனியையே சாரும். அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் சிஎஸ்கே கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையில் CSK ஐபிஎல்லில் 204 போட்டிகளில் 121 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

  • ஐபிஎல் தொடங்கியதிலிருந்து, எம்எஸ் தோனி தனது அற்புதமான கேப்டன்சி மூலம் தனது சொந்த முத்திரையை பதித்து வந்தார். 2010ல், ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.

  • தோனி கேப்டனாக இருந்த போது, 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய போட்டிகளில் சிஎஸ்கே நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றதுள்ளது. மேலும், 2008, 2012, 2013, 2015 மற்றும் 2019 ஆகிய ஐந்து போட்டிகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

  • 4 முறை ஐபிஎல், 2 முறை CLT20 வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

  • தோனியின் தலைமையில் 2010 மற்றும் 2014-ல் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களையும் வென்றுள்ளது.

  • ஒன்றுக்கு மேற்பட்ட ஐபிஎல் பட்டங்களை வென்ற மூன்று இந்திய கேப்டன்களில் தோனியும் ஒருவர், மற்ற இருவர் ரோஹித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர்.

  • ஐபிஎல் அணிகளில் 200+ போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ஒரே வீரர் தோனி மட்டுமே.

  • 2018ம் ஆண்டு மீண்டும் பாமுக்கு திரும்பிய சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. சிஎஸ்கே அணி 455 ரன்களை குவித்து அசத்தியது.

புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா:

ரவீந்திர ஜடேஜா 2008 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய U-19 கிரிக்கெட் அணியில் இடம்பெற்று மலேசியாவில் உலகக் கோப்பையை வென்றார். பிப்ரவரி 8, 2009ல் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் சர்வதேச (ODI) போட்டியில் களமிறங்கிய ஜடேஜா, 77 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார்.

அதன் பின்னர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 13, 2012 அன்று, முதன் முறையாக நாக்பூரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

Dhoni

ஜனவரி 22, 2017 அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் சாம் பில்லிங்ஸைத் அவுட்டாக்கியதன் மூலமாக, ஜடேஜா 150 ஒரு நாள் சர்வதேச விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்ற ரவிச்சந்திரன் அஸ்வினின் ரெக்கார்டை 2017ம் ஆண்டு முறியடித்தார்.

2012 ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் முறையாக ஜடேஜாவை வாங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல்லில் இருந்து இரண்டு சீசன்களுக்கு தடை செய்யப்பட்ட பிறகு, 2016 ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் குஜராத் லயன் அணியில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா, இந்த ஆண்டு மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டி ஒன்றில்,

"எனக்கு எந்த கவலையும் இல்லை. தோனி உடன் இருக்கப்போகிறார். எனக்கு எதுவும் கேள்விகள் இருந்தால் பதிலளிக்க அவர் கூடவே இருப்பார். அதனால் எனக்கு பயமோ கவலையோ இல்லை!" எனத் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, தோனி கேப்டனாக விடைப்பெறுவதை குறிக்கும் வகையில், நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் டயலாக்குடன் தோனியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அது ரசிகர்கள் பரவலாக ஷேர் செய்து தோனி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.