முகேஷ் அம்பானி உலகின் 6வது பணக்காரர் ஆனார்!
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் லேரி பேஜ், செர்ஜி பிரின், எலன் மஸ்க் ஆகியோரையும் பின்னுக்குத் தள்ளி 6வது இடத்தைப் பிடித்த முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலகின் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த வாரம் வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளிய நிலையில் தற்போது இவரது சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலர் என ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முகேஷ் அம்பானி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் லேரி பேஜ், செர்ஜி பிரின், எலன் மஸ்க் ஆகியோரையும் பின்னுக்குத் தள்ளி 6-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
இந்தியாவில் துரிதமான வளர்ச்சியை சந்தித்து வரும் டிஜிட்டல் வணிகத்தில் கவனம் செலுத்த பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் முகேஷ் அம்பானியின் எரிசக்தி சாம்ராஜ்யம் மெல்ல மின்வணிக துறைக்கு மாறி வருகிறது.
உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா அதன் பொருளாதாரத்தில் அந்நிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது. குறிப்பாக சிலிக்கான் வேலியில் இருந்து முதலீடுகள் பெறப்படுகின்றன. அத்துடன் நாட்டின் டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடுகளை முடுக்கிவிட உதவும் வகையில் வரும் ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர் செலவிட உள்ளதாக கூகுள் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை அன்று அமெரிக்க தொழில்நுட்பப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து லேரி பேஜின் தற்போதைய சொத்து மதிப்பு 71.6 பில்லியன் டாலராகவும் செர்ஜி பிரினின் சொத்து மதிப்பு 69.4 பில்லியன் டாலராகவும் டெஸ்லா நிறுவனத்தின் எலன் மஸ்க் சொத்து மதிப்பு 68.6 பில்லியன் டாலராகவும் உள்ளது.
வாரன் பஃபெட் தனது சொத்து மதிப்பில் 2.9 பில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக அளித்ததைத் தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
தகவல் உதவி: என்டிடிவி