லண்டனுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்து விட்டாரா முகேஷ் அம்பானி? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிலையன்ஸ்!
300 ஏக்கர் சொத்தை வாங்கியதன் நோக்கத்தை தெளிவுபடுத்திய ரிலையன்ஸ்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனுக்கு குடிபெயர இருப்பதாக நேற்று தகவல் வெளியாகி தீயாகப் பரவியது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பிரிட்டனின் சின்னமான கன்ட்ரி கிளப் மற்றும் ஸ்டோக் பார்க் எனும் சொகுசு கோல்ஃப் ரிசார்ட்டை 57 மில்லியன் பவுன்டுகளுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.592 கோடிக்கு சமீபத்தில் வாங்கியது.
இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷைரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள ரிசார்ட் தான் இந்த ஸ்டோக் பார்க். 49 லக்ஸுரி ரூம்கள், பார்க், ஹோட்டல், மனதை கொள்ளைக் கொள்ளும் தோட்டங்கள், கோல்ப் மைதானம் என பல வசதிகள் கொண்டுள்ளது ஸ்டோக் பார்க்.
புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களும் படம் பிடிக்கப்பட்டதும் இங்கே தான். இங்கிலாந்து அரசக் குடும்பத்துக்கு சொந்தமான, இன்டர்நேஷனல் குரூப் நிறுவனம் தான் இந்த ரிசார்ட்டின் உரிமையாளராக இருந்து வந்த நிலையில் தான் அம்பானி வாங்கினார்.
பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த எஸ்டேட் அரண்மனைக்கு தான் அம்பானி குடும்பம் குடிபெயர இருப்பதாக நேற்று முழுவதும் தகவல் பரவியது. ஆனால், இந்தத் தகவலை மறுத்து ரிலையன்ஸ் குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
“அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டன் அல்லது உலகில் வேறு எங்கும் இடம்பெயரவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். சமூக ஊடகங்களில் தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற ஊகங்கள் வெளியாகி வருகின்றன.”
ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை முதன்மையான கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். வழிகாட்டுதல்கள் மற்றும் உள்ளூர் விதிமுறைகளுடன் விரைவில் அது செய்யப்படும். ரிலையன்ஸ் குழுமத்தின் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் வணிகத்தை அதிகரிக்க, அதே நேரத்தில், இந்தியாவின் புகழ்பெற்ற விருந்தோம்பல் துறையின் தடத்தை உலகளவில் விரிவுபடுத்த இந்த ரிசார்ட் வாங்கியது உதவும், என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்டோக் பார்க் விளையாட்டு மற்றும் ஓய்வு எஸ்டேட் 1908 வரை ஒரு தனியார் இல்லமாக பயன்படுத்தப்பட்டது. ஸ்டோக் பார்க்கில் 49 சொகுசு படுக்கையறைகள் மற்றும் அறைகள், 27 கோல்ஃப் மைதானம், 13 டென்னிஸ் மைதானங்கள் உடன் 14 ஏக்கர் தனியார் தோட்டங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.