ரூ.592 கோடி டீல்: பிரிட்டனின் அழகிய ஸ்டோக் பூங்காவை வாங்கிய அம்பானி!
டிரம்ப் முயன்றும் கிடைக்காத சொத்து!
பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பிரிட்டனின் சின்னமான கன்ட்ரி கிளப் மற்றும் ஸ்டோக் பார்க் எனும் சொகுசு கோல்ஃப் ரிசார்ட்டை 57 மில்லியன் பவுன்டுகளுக்கு (சுமார் ரூ.592 கோடி) வாங்கியுள்ளது.
இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷைரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள ரிசார்ட் தான் இந்த ஸ்டோக் பார்க். 49 லக்ஸுரி ரூம்கள், பார்க், ஹோட்டல், மனதை கொள்ளைக் கொள்ளும் தோட்டங்கள், கோல்ப் மைதானம் என பல வசதிகள் கொண்டுள்ளது ஸ்டோக் பார்க்.
புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களும் படம் பிடிக்கப்பட்டதும் இங்கே தான். ஆம், ஸ்டோக் பார்க் எப்போதும் பைன்வுட் ஸ்டுடியோஸ் மற்றும் பிரிட்டிஷ் திரைப்படத் துறையுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. இரண்டு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் - கோல்ட்ஃபிங்கர் (1964) மற்றும் டுமாரோ நெவர் டைஸ் (1997) ஆகியவை ஸ்டோக் பூங்காவில் படமாக்கப்பட்டன.
இங்கிலாந்து அரசக் குடும்பத்துக்கு சொந்தமான, இன்டர்நேஷனல் குரூப் நிறுவனம் தான் இந்த ரிசார்ட் சொத்தை இதுவரை வைத்து வந்தது. தற்போது இதனை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கி இருக்கிறது. 2016 வாக்கிலேயே இந்த சொத்து விற்பனைக்கு வந்தது. அப்போது அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இதை வாங்க ஆர்வம் காட்டியதாகவும், ஆனால் பேரம் ஒத்துவரவில்லை என்பதால் அதை அவர் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முகேஷ் அம்பானி இதை கைப்பற்றியுள்ளனர்.
ஸ்டோக் பார்க் லிமிடெட் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள ஸ்டோக் போஜஸில் விளையாட்டு மற்றும் ஓய்வு நேர வசதிகளை நிர்வகிக்கிறது. இந்த வசதிகளில் ஒரு ஹோட்டல், மாநாட்டு வசதிகள், விளையாட்டு வசதிகள் மற்றும் ஐரோப்பாவில் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட கோல்ஃப் மைதானங்கள் உள்ளன. இதை இனி ரிலையன்ஸ் நிறுவனமே நிர்வகிக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
முன்னதாக 2019 ஆம் ஆண்டில் ஹாம்லேஸை வாங்கிய முகேஷ் அம்பானி, அதன் தொடர்ச்சியாக இந்த பூங்காவை வாங்கியிருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், ரிலையன்ஸ் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியிருக்கிறது. 14 சதவீத சில்லறை விற்பனை, தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொலைத் தொடர்பு (டிஎம்டி) துறையில் 80 சதவீதம் மற்றும் எரிசக்தி துறையில் 6 சதவீதம் என சொத்துக்களை வாங்கியிருக்கிறது.