ரத்தக்கறை படிந்த பணம் ஈட்டும் 'முகுந்தன் உன்னி'-களுக்கு ஏன் குற்ற உணர்வே இல்லை?
‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ நாயகன் மீது நமக்கு வெறுப்பும் கோபமும் அதிகம் இருந்தால், அதே அளவிலான வெறுப்பும் கோபமும் நம் சமூகம் மீதும், நாம் வாழும் நாட்டின் சிஸ்டம் மீதும் நிச்சயம் ஏற்பட வேண்டும். ஏன்?
‘Mukudan Unni Associates' நாயகன் மீது நமக்கு வெறுப்பும் கோபமும் அதிகம் இருந்தால், அதே அளவிலான வெறுப்பும் கோபமும் நம் சமூகம் மீதும், நாம் வாழும் நாட்டின் சிஸ்டம் மீதும் நிச்சயம் ஏற்பட வேண்டும். ஏன்?
கொழுத்த பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு உதவும் ‘ராபின்ஹுட்’ பாணி படங்களை மக்கள் ரசிப்பது இயல்பு. இங்கே நாயகன் நல்லது செய்வதன் அடிப்படையில் ‘எத்திக்ஸ்’ கண்டுகொள்ளப்படுவது இல்லை.
ஆனால், எந்த எத்திக்ஸும் இல்லாமல் சட்டத்தை வளைத்து பணம் சுருட்டும் ஒரு ‘கிரிமினல்’ வழக்கறிஞரைக் கொண்டாடும் மக்களின் மனநிலையை என்னவென்று சொல்வது? - வாருங்கள் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ (Mukundan Unni Associates) என்னும் மலையாள திரைப்படம் பற்றி கொஞ்சம் பேசுவோம்.

பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த முகுந்தன் உன்னி 36 வயது வழக்கறிஞர். ஒரு மூத்த வழக்கறிஞரின் ஜூனியர்களில் ஒருவராக இருக்கிறார். வாழ்க்கையில் வெற்றிக்காக போராடுபவர். வெற்றிக்குத் தேவையானதாக காலம் காலமாகச் சொல்லப்படும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விடா முயற்சி மற்றும் ஒழுக்கம் ஆகிய நான்குமே முகுந்தன் உன்னியிடம் உள்ளன. ஆனாலும் அவரால் ஒரு வெற்றியாளர் ஆக முடியவில்லை. இதுவரையிலான பூப்பாதையால் பயனில்லை என்று சிங்கப் பாதையை, அல்ல... நரிப் பாதையை தேர்ந்தெடுக்கிறார் முகுந்தன் உன்னி.
தன் தாயின் திடீர் மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாதபோதுதான் முகுந்தன் உன்னிக்கு அந்த நரிப்பாதை தென்படுகிறது. வாகன விபத்துடன் தொடர்புடய வழக்கறிஞர்கள், போலீஸ், மருத்துவர்கள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ‘கிரிமினல்’ நெட்வொர்க்கை கட்டமைக்கிறார் வழக்கறிஞர் முகுந்தன் உன்னி. சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
இந்த ‘நெட்வொர்க்’ குறித்த அறிமுகத்தையும் பாடத்தையும் தந்த வழக்கறிஞரை முதலில் காலி செய்கிறார். அதன்பின், போட்டியில்லா தனி சாம்பிராஜ்ஜியத்தைக் கட்டமைத்து கல்லா கட்டுகிறார்.
தன் நேர்மையான காதலியைக் கழட்டிவிட்டு, தனக்கு ஈடானவரும், தன் கள்ளத் தொழிலுக்கு நேர்த்தியானவருமான பெண்ணைக் கரம்பிடிக்கிறார். எந்த அளவுக்கு இருவரும் பொருத்தம் என்றால், தேனிலவுப் பயணத்தின்போது விபத்துக்குள்ளாகும் பஸ் ஒன்றில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை வைத்து காப்பீடு கறந்து காசு பார்க்கும் அளவுக்கு கச்சிதப் பொருத்தம்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கும் இப்படம், ‘ப்ளாக் காமெடி’ வகையைச் சேர்ந்தது. நம் சமூகத்தையும், சிஸ்டத்தையும் ஆரம்பம் முதல் இறுதி வரை பகடி செய்கிறது.
ஆனால், இந்த திரைப்படத்தின் வகைமை குறித்த புரிதலின்றி பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இப்படம் அதிர்ச்சி தரும். ‘பார்ப்பதற்கு ஜெண்டில்மேன் போல் காட்சியளிக்கும் இவர்தான் சைக்கோத்தனமான கொடூரச் செயல்களிலும் அவ்வப்போது ஈடுபடுகிறார்’ எனத் திகைக்கக் கூடும்.

ஸ்மோக்கிங் உயிரைக் கொல்லும், விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை என டிஸ்க்ளைமர் கார்டிலேயே பகடி ஆரம்பிக்கிறது. குறிப்பாக, முதன்மைக் கதாபாத்திரமான முகுந்தன் உன்னி நம்மிடம் மைண்ட் வாய்ஸில் உரையாடுவது ஈர்க்கும் முக்கிய அம்சம். நமக்கு மட்டுமே தெரிந்த நம்மை அப்படியே வெளிப்படுத்தினால் எப்படி இருக்குமோ அத்தகைய தாக்கம் தரவல்லது இந்த உத்தி.
பணம் ஈட்டவும், தொழிலில் வெற்றி பெறவும் எத்தகைய பயங்கர விளையாட்டையும் விளையாடத் தயங்காத அந்தக் கதாபாத்திரம் எந்தக் குற்ற உணர்வும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், தான் புரியும் குற்றங்கள ரசித்துச் செய்வதையும் காணும்போது நமக்கு நெருடல் ஏற்படாமல் இல்லை.
சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் கட்டுக்கட்டாக நோட்டுகளுடன் வெற்றிபெறும் ஒரு குற்றவாளியை ப்ரொட்டாகனிஸ்டாக காணும் நாம், பல நாள் திருடன் ஒருநாள் சிக்குவான் என்று கணித்து காத்திருக்கும்போது நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஆம், முகுந்தன் உன்னி உச்சத்தை எட்டுவதாக படம் முடியும்போது பேரதிர்ச்சி மிஞ்சும்.
ஆனால், இங்குதான் இப்படம் வித்தியாசப்படுகிறது. உண்மையைச் சொல்லப்போனால் யதார்த்தத்துக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது. நம் சமூகத்தில் குறுக்கு வழிகளில் எந்த எத்திக்ஸும் பார்க்காமல் சம்பாதிக்கிறவர்கள்தான் கடைசி வரை வெற்றியாளராக வலம் வருகிறார்கள் என்று கசப்பான உண்மையை அப்பட்டமாக பதிவு செய்கிறது இப்படம்.
இப்படத்தின் நாயகன் மீது நமக்கு வெறுப்பும் கோபமும் அதிகம் இருந்தால், அதே அளவிலான வெறுப்பும் கோபமும் நம் சமூகம் மீதும், நாம் வாழும் நாட்டின் சிஸ்டம் மீதும் நிச்சயம் ஏற்பட வேண்டும். ஏன்?
முகுந்தன் உன்னியின் 36 வயதுக்குப் பிறகான வாழ்க்கையைத்தான் நாம் படத்தில் 99 சதவீத அளவில் பார்க்கிறோம். ஆனால், அவரது 35 ஆண்டு கால வாழ்க்கையை நாம் கவனிக்கத் தவறுகிறோம். படத்திலும் ஆரம்பத்தில் ஒரு நிமிடம்தான் அவரது பின்னணி விவரிக்கப்படுவதால் அது நம் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது.

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து விடாமுயற்சி, கடின உழைப்பு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு என அனைத்துப் பாசிட்டிவ் குணாதிசயங்களையும் கொண்டு பள்ளி, கல்லூரி, தொழிலில் ஈடுபாடு காட்டும் முகுந்தன் உன்னிக்கு 35 ஆண்டு கால வாழ்க்கையில் என்ன கிடைத்தது?
மருத்துவமனையில் தாய் அனுமதிக்கப்பட்டபோது, அங்கே கட்டணம் செலுத்தக் கூட காசு இல்லாத மோசமான நிலையைதான் இந்தச் சமூகமும் சிஸ்டமும் கொடுத்திருக்கிறது. இதற்குப் பிறகும் இச்சமூகம் மீது கருணை காட்ட விரும்பாமல், மாற்றுப் பதையை நாடியதன் விளைவுதான் நாயகனின் புது அவதாரம்.
‘அந்த நாயகன் இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம்?’ என்ற கேள்விக்கு விடைதேடத் தொடங்கினால், நாம் வாழும் இந்தச் சமூகம் குறித்த புரிதல் இன்னும் மிகுதியாகும்.
ஆக, ரத்தக்கறை படிந்த பணம் ஒருபோதும் முகுந்தன் உன்னிகளுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தப் போவதில்லை, முகுந்தன் உன்னிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமானவை அனைத்தும் கிடைக்கும் வரை.
Edited by Induja Raghunathan