வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாள்: ரூ.2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த மும்பை பெண்!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், தனது செல்ல வளர்ப்பு நாய்க்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை வாங்கி இணையத்தை அதிர வைத்திருக்கிறார் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் நாய்கள் எப்போதுமே கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்தான். அது திருப்பிக் காட்டும் பாசத்தினாலா, நன்றியுணர்ச்சியினாலா, அது தரும் பாதுகாப்பு உணர்வினாலா அல்லது அது செய்துதரும் உதவிகளினாலா, எதுவென்று தெரியாது, ஆனால், நாய்களை பல வீடுகளில் குடும்பத்தில் ஒருவராகத்தான் பாவிக்கும் அளவிற்கு அன்பைப் பொழிவார்கள்.
வீட்டில் உள்ளவர்களை வளர்ப்பு நாய்களுக்கு அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, பாப்பா, தம்பி என உறவுமுறைகளைச் சொல்லியே சுட்டிக் காட்டுவார்கள். சில வீடுகளில் நாய்களை சலூன்களுக்கு அழைத்துச் சென்று அழகுப் படுத்துவது, அழகழகான உடைகளை அணிவிப்பது என வேற லெவலில் கவனிப்பதும் உண்டு.
வளர்ப்பு நாய்க்குப் பிறந்தநாள் கொண்டாடுவது, தங்களைப் போலவே அந்த நாய்களுக்கும் ஒரே மாதிரியான உடை அணிவிப்பது என தங்களது அன்பை அந்த நாய்களுக்கு எவ்வளவு காட்ட முடியுமோ அந்தளவிற்கு வெளிப்படுத்துவார்கள். பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய்களுக்கு சிகிச்சையளிக்க என, மும்பையில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றையே கட்டி இருக்கிறார்.
ஆனால், தற்போது இவர்களையெல்லாம் ஆச்சர்யப்படுத்தும் வகையில் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், நாய்க்கென தனி தங்கச்சங்கிலி வாங்கி அணிவித்துள்ளார். அந்தச் சங்கிலின் மதிப்பு ரூ.2.5 லட்சம் என்பதுதான் நெட்டிசன்களை மேலும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
டைகருக்கு பிறந்தநாள்
மும்பை செம்பூர் பகுதியைச் சேர்ந்த சரிதா என்ற பெண் தான், இப்படி தனது நாய்க்கு தங்கச் சங்கிலி வாங்கிப் பரிசளித்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் தனது வளர்ப்பு நாயான டைகரை அதே பகுதியில் உள்ள நகைக்கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நாய் ஒன்று உள்ளே வருவதைப் பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், அதனுடன் கடையின் வாடிக்கையாளர் இருந்ததால், ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டனர்.
கடைக்குள் வந்ததும் சரிதா, பெரிய அளவிலான தங்கச் சங்கிலிகளாக காட்டச் சொல்லி பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் ஏன் இவ்வளவு பெரிய சங்கிலிகளாக அவர் பார்க்கிறார் என கடைக்காரர்களுக்குப் புரியவில்லை. பிறகுதான் தனது நாயின் பிறந்தநாளுக்காக அதற்கு தங்கச் சங்கிலி வாங்க வந்திருப்பதைக் கூறியுள்ளார் சரிதா.
ரூ. 2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி
அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் பல்வேறு விதமான தங்கச் சங்கிலிகளை அப்பெண்ணிடம் காட்டியுள்ளனர். அதில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள ஒரு சங்கிலியைத் தேர்வு செய்த சரிதா, அதனை கடையில் வைத்தே தனது நாயின் கழுத்தில் அணிவித்து அழகு பார்த்துள்ளார்.
இந்தக் காட்சிகளை அப்போது கடையில் இருந்த ஊழியர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கூடவே,
“எங்கள் வாடிக்கையாளர் சரிதா தனது அன்பான நாய் டைகரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்தார். இந்த நிகழ்வைக் குறிக்க, அவர் அனில் ஜூவல்லர்ஸுக்குச் வந்து ஒரு அழகான சங்கிலியைத் தேர்ந்தெடுத்தார். அதை டைகருக்குப் பரிசளித்தபோது, அவனது வால் உற்சாகத்துடன் அசைந்தது. மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் அழகான நட்பைக் கொண்டாடுகிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
வைரலான வீடியோ
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. ‘தனது அன்பை தங்கம் வாங்கிக் கொடுத்து அப்பெண் வெளிப்படுத்தியுள்ளார்’,
‘‘நாயைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என இந்த வீடியோவிற்கு பலர் கமெண்ட் செய்து வரும் நிலையில், ‘தங்கம் விற்கும் விலையில், ஏழைகள் தங்கத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியாத சூழலில், நாய்க்கு இப்படி தங்கச் சங்கிலி வாங்கிப் பரிசளிப்பதெல்லாம் டூ மச்’ என்ற கண்டனக் குரல்களும் எழுந்து வருகின்றன.