உலகின் பிரபலமான தலைவர் ‘நரேந்திர மோடி’ - பட்டியலில் மீண்டும் முதலிடம்!
உலகிலேயே பிரபலமான தலைவர்கள் குறித்த தரவரிசைப் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகிலேயே பிரபலமான தலைவர்கள் குறித்த தரவரிசைப் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
உலக அளவில் பிரபலமான புலனாய்வு அமைப்பான மார்னிங் கன்சல்ட் சர்வே உலக அளவில் பிரபலமான தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 75 சதவீத வாக்குகளுடன் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் கணக்கெடுப்பில் உலகத் தலைவர்கள் 22 பேர் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டாப் 10 தலைவர்கள் யார்?
உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் 75 சதவீத மக்களின் ஆதரவை பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலகளாவிய செல்வாக்கு ஒப்புதல் மதிப்பீட்டின் படி, மோடிக்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்டர்ஸ் இமானுவேல் 63 சதவீத மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தோனி அல்பனிஸ் 58 சதவீத மக்களின் ஆதரவுடன் மூன்றாவது இடத்திலும், இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி 54 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
சுவிட்சார்லாந்து அதிபர் இக்னாசியோ காசிஸ் 52 சதவீத மக்கள் ஆதரவுடன் 5வது இடத்திலும், ஸ்வீடன் அதிபர் மாக்டலேனா ஆண்டர்சன் 50 சதவீத வாக்குகளுடன் 6வது இடத்திலும் உள்ளனர்.
பெல்ஜியம் அதிபர் அலெக்சாண்டர் டி குரூ 43 சதவீத மக்கள் ஆதரவுடன் 7வது இடத்திலும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 42 சதவீத மக்கள் ஆதரவுடன் 8வது இடத்திலும் உள்ளனர்.
பின்னுக்குத் தள்ளப்பட்ட வல்லரசு நாடுகள்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 சதவீத மக்கள் ஆதரவை மட்டுமே டாப் 10 பட்டியலில் கூட இல்லாமல் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 25% ஆதரவை மட்டும் பெற்று பின் தங்கியுள்ளார். ஜப்பான் பிரதமரான ஃபுமியோ கிஷிடா 38 சதவீத மக்களின் ஆதரவையும், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவீத மக்கள் ஆதரவையும் மட்டுமே பெற்றுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் 34 சதவீத மக்கள் ஆதரவையும், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் 30 சதவீத வாக்குகளையும் பெற்று பின்னடவை சந்தித்துள்ளனர்.
உக்ரைன் மீதான போர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோரின் ஒப்புதல் மதிப்பீடுகளை பாதித்துள்ளது. மறுபுறம் கொரோனா தொற்றின் போது மாஸ்க் மற்றும் தடுப்பூசி விவகாரங்களில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்ததும் மக்களிடம் ஆதரவை இழக்க காரணமாக இருக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி முதலிடம் பிடிக்கக் காரணம்:
கடந்த ஜனவரி மற்றும் கடந்த 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பிலும், பிரதமர் மோடி பிரபல உலகத் தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் முதலிடம் பிடித்ததற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் போது பாதிப்பு மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகப்பெரிய உச்சங்களை பதிவு செய்தது. இந்த காலக்கட்டத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டதற்காக அதிக மதிப்பீடுகளை பெற்றுள்ளதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோயைக் கையாண்டது குறித்து விமர்சனங்கள் இருந்த போதும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொரோனா நோய்க்கு எதிராக வலுவான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இந்திய மக்கள் கருதுகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தனது கோரதாண்டவத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்த ஏப்ரல் 2020ல் மோடியின் அப்ரூவல் ரேட்டிங் 83 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் போது கூட பிரதமர் மோடிக்கு ஆதரவாக 65 சதவீத மக்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில், 72% க்கும் அதிகமான இந்தியர்கள், பிரதமர் நரேந்திர மோடி நாட்டை சரியான திசையில் வழி நடத்தி வருவதாக நம்புகின்றனர்.
தொகுப்பு - கனிமொழி