'தேசிய ஸ்டார்ட் அப் தினம்' - இந்திய ஸ்டார்ட் அப் சூழல் வளர்ச்சிக்கு உதவிய திட்டங்கள்!
ஏஐ, தூய நுட்பம், பிக் டேட்டா, விண்வெளி நுட்பம் உள்ளிட்ட வளரும் வாய்ப்புள்ள துறைகளில் புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடுகளும் ஸ்டார்ட் அப் சூழல் வளர்ச்சிக்கு உதவியுள்ளது.
தேசிய ஸ்டார்ட் அப் தின வாழ்த்துகள்!
கடந்த 2016ம் ஆண்டில் சில நூறு ஸ்டார்ட் அப்களில் இருந்து, இப்போது 1,58,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்களோடு, இந்த ஸ்டார்ட் அப் சூழல், இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
இந்த தொழில்முனைவு வேட்கையை ஊக்குவிக்க, 2016ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி இந்திய அரசு, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை அறிவித்தது.
கடந்த பத்தாண்டு காலத்தில் இந்திய ஸ்டார்ட் அப் சூழல் பெரும் மாற்றத்தை சந்தித்து, புதுமையாக்கம், தொழில்முனைவுக்கான சர்வதேச மையமாக உருவெடுத்துள்ளது. ஸ்டார்ட் அப் சூழல் ஏற்ற இறக்கங்கள் மற்றும், நிதி வறட்சி, முன்னணி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளது.
ஏஐ, தூய நுட்பம், பிக் டேட்டா, விண்வெளி நுட்பம் உள்ளிட்ட வளரும் வாய்ப்புள்ள துறைகளில் புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடுகளும் ஸ்டார்ட் அப் சூழல் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை, ஸ்டார்ட் அப்கள் இடையிலான கூட்டு முயற்சியை ஊக்குவிக்கும் திட்டங்களும் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.
2024ல் அறிவிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் சூழல் மேம்பாடு தொடர்பான முக்கிய கொள்கை மாற்றங்களும் இதற்கு உதவியுள்ளன. சீரான கட்டுப்பாடுகள், நிதி அணுகல் மேம்பாடு, வரிச்சலுகைகள், துறை சார்ந்த கொள்கை முடிவுகள் இதில் அடங்கும்.
நம்முடைய ஸ்டார்ட் அப்களை கொண்டாடும் வேளையில், ஸ்டார்ட் அப் சூழல் வளர்ச்சிக்கு உதவிய சில முக்கிய கொள்கை முடிவுகளை இங்கே பார்க்கலாம்:
ஏஞ்சல் வரி நீக்கம் (July 2024)
2024-25 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் சூழலுக்கு மேலும் நிதி வருவதை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட் அப்`களில் முதலீடு செய்பவர்களுக்கான ஏஞ்சல் வரியை நீக்குவதாக அறிவித்தார்.
துணை நிறுவனங்கள் மூலம், வரி ஏய்ப்பு செய்யும் வகையில், வரி அமைப்பில் இருந்த ஓட்டைகளை தவறாக பயன்படுத்திக்கொண்ட முயற்சியை கட்டுப்படுத்தும் வகையில் 2012ல் ஏஞ்சல் வரி அறிமுகம் செய்யப்பட்டது. வருமானவரிச் சட்டம் 56(2) பிரிவின் கீழான இந்த நடவடிக்கை ஆரம்ப நிலை முதலீடு நாடும் ஸ்டார்ட் அப்கள் மீது தாக்கம் செலுத்தியது.
பெறப்பட்ட நிதி அளவுக்கு ஏற்ப பங்குகளின் நியாயமான சந்தை மதிப்பு (FMV) எனும் முறையை அதிகாரிகள் பின்பற்றியது இதற்குக் காரணமாக அமைந்தது. இந்த மதிப்பிற்கு மேல் இருந்தால் பெறப்பட்ட நிதியில் 30 சதவீத வரி விதிக்கப்பட்டது.
ஐபிஓ காணும் ஸ்டார்ட் அப்'களுக்கான கட்டுப்பாடு முறை (October 2024)
நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை தளர்த்தும் வகையில், வெளிநாட்டு நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் இணையும் போது, தேசிய கம்பெனி சட்ட வாரிய அனுமதி பெற வேண்டும் எனும் நிபந்தனையை அரசு நீக்கியது.
இந்த நடவடிக்கை ஓராண்டு செயல்முறையை மூன்று மாதங்களாக குறைத்து, வெளிநாட்டை மையமாகக் கொண்டு செயல்பட்ட ஸ்டார்ட் அப்கள் இந்தியாவுக்கு திரும்புவதை ஊக்குவித்தது. அண்மையில், ஜெப்டோ நிறுவனம் தனது ஐபிஓ செயல்முறையை வேகமாக சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்பியது.
முன்னதாக சிங்கப்பூரில் கிரானா கார்ட் துணை நிறுவனமாக இருந்த நிறுவனம், இந்த முடிவுக்கு சிங்கப்பூர் அனுமதியையும் பெற்றுள்ளது. மேலும், ரேஸர்பே, ஃபிளிப்கார்ட், மீஷோ ஆகிய நிறுவனங்களும் தங்கள் தலைமையகத்தை இந்தியாவுக்கு கொண்டு வர உள்ளன.
அந்நிய செலாவணி கட்டுப்பாடுகள் சீராக்கம் (November 2024)
வெளிநாட்டு பரிவர்த்தனை நிர்வாக கட்டுப்பாடுகளில் திருத்தம் செய்து, ஸ்டார்ட் அப்கள் அந்நிய செலாவணி கணக்கை அமைப்பதற்கான செயல்முறையை எளிதாக்க அரசு வழி செய்தது.
இந்த நடவடிக்கை மற்றும் ஸ்டார்ட் அப் வரைறை தொடர்பான அண்மை மாற்றம், இளம் ஸ்டார்ட் அப்கள் சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதை எளிதாக்கியுள்ளது.
ஸ்டார்ட் அப் கொள்கை அமைப்பு (டிசம்பர் 2024)
புதுமையாக்கம் மற்றும் கொள்கை சீர்திருத்தத்தை ஊக்குவிக்க இந்திய அரசு ஸ்டார்ட் அப் கொள்கை அமைப்பை (SPF) அறிவித்தது. முதல் கட்டத்தில், இந்த அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை 100 உறுப்பினர்களாக இருந்தது. ஸ்விக்கி, ரேஸர்பே, கிரெட், பைன்லேப்ஸ், குரோ, அக்கோ, ஓயோ உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் உள்ளன.
இந்த முயற்சி ஸ்டார்ட் அப் சூழல் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நிறுவனங்களுடனான பாலமாக அமையும், என எதிர்பார்க்கப்படுகிறது.
துறை சார்ந்த திட்டங்கள்
ட்ரோன் (திருத்தம்) விதிகள் 2024, உற்பத்தியாளர்கள் மற்றும் ட்ரோன் இயக்குனர்களுக்கான விதிகளை சீராக்கியுள்ளது. ட்ரோன் பதிவு மற்றும் விலகலுக்கு மாற்று வழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு வலு சேர்க்கும் வகையில், 2024 பட்ஜெட்டில் ட்ரோன் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி சார்ந்த சலுகைக்காக ரூ.57 கோடியை அரசு ஒதுக்கியது. ட்ரோன் நுட்பத்தில் உலக அளவில் இந்தியா முன்னிலை பெறுவதற்கான அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இது அமைந்தது.
புதுமையாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை வளர்க்கும் வகையில், நமோ ட்ரோன் தீதி திட்டத்திற்கு ரூ.1,261 கோடி ஒதுக்கப்பட்டது. கிராமப்புறங்களில் பெண்களை ட்ரோன் இயக்கத்தில் ஊக்குவிக்கும் நோக்கம் கொண்ட இந்த திட்டம், பெண்கள் தொழில்நுட்ப பிரிவில் பங்கேற்பதை உறுதி செய்யும் அதே நேரத்தில் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் அதிகாரம் அளிக்கிறது.
2024 பட்ஜெட்டில், நிதி அமைச்சர் வளர்ந்து வரும் இந்திய விண்வெளி பொருளாதாரத்திற்கு வென்சர் கேபிடல் நிதிக்காக ரூ.1,000 கோடி அறிவித்தார்.
அதே போல், 2024 மார்ச்சில் அறிவிக்கப்பட்ட இந்தியா ஏஐ மிஷின் திட்டம், உலகத்தரம் வாய்ந்த ஏஐ சூழலை இந்தியாவில் அமைக்க திட்டமிட்டுள்ளது. ஐந்தாண்டு காலத்திற்கான ரூ.10,300 கோடி பட்ஜெட்டில், 2024க்கு ரூ.551.75 கோடி, இந்த திட்டம் நவீன ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வரும் முக்கிய நவடிக்கைகள் வருமாறு: இந்தியா ஏஐ கம்ப்யூட், இந்தியா ஏஐ இன்னவேஷன் செண்டர், இந்தியா ஏஐ டேட்டா செண்டர், இந்தியா ஏஐ பியூச்சர் ஸ்கில்ஸ், இந்தியா ஏஐ பைனான்சிங். இந்த முயற்சிகள் ஏஐ ஏற்பு மற்றும் செயல்பாட்டில் இந்தியாவை முன்னிலை பெற உதவும்.
ஆங்கிலத்தில்: திரிஷா மேதி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan