Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் 'ட்ரோன் தீதி திட்டம்'

கிராமப் பெண்களுக்கு விவசாயத்திற்கு உதவும் வகையான ட்ரோன் பயிற்சி அளித்து, அவர்களை ட்ரோன் பைலட்டாக மாற்றி பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்த உதவுகிறது ட்ரோன் தீதி திட்டம். ட்ரோன் திதித்திட்டம் வருமானம் மட்டும் அளிக்கவில்லை. அது ஒரு சமூக அந்தஸ்து. திட்டத்தால் பலன் பெற்ற பெண்களின் பகிர்வு இது...

கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் 'ட்ரோன் தீதி திட்டம்'

Tuesday June 04, 2024 , 5 min Read

கிராமப் பெண்களுக்கு விவசாயத்திற்கு உதவும் வகையான ட்ரோன் பயிற்சி அளித்து, அவர்களை ட்ரோன் பைலட்டாக மாற்றி பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்த உதவுகிறது 'ட்ரோன் தீதி' திட்டம். ட்ரோன் தீதிகளுக்கு, இந்தத்திட்டம் அவர்களின் குடும்பத்திற்கான கூடுதல் வருமானம் மட்டுமல்ல. சமூகத்தில் ஒரு தனித்துவமான அந்தஸ்து. திட்டத்தால் பலன் பெற்ற பெண்களின் பகிர்வு இது...

ஷாலூ ராணி, படோலி கிராமம், பல்வால் மாவட்டம், ஹரியானா மாநிலம்- என்று ராணி தன்னை பெருமையுடன் அறிமுகப்படுத்தி கொண்டதன்பின் ஒருசேதியுண்டு. ஏனெனில், முதுகலைப் பட்டம் பெற்றும் அதற்கான வேலை கிடைக்காமலிருந்த அவர், அரசின் திட்டத்தால் 'ட்ரோன் தீதி'யாகி அவருக்கான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

உள்ளூர் சுயஉதவிக் குழுவின் உறுப்பினரான ராணிக்கு, 'விக்சித் சங்கல்ப் பாரத் யாத்ரா' (அரசின் திட்டங்களை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாடு தழுவிய பிரச்சாரம்) மூலம் ட்ரோன் தீதி திட்டத்தைப் பற்றி தெரிய வந்துள்ளது. அதைப் பற்றி அறிந்தவுடன் அதில் இணைய வேண்டும் என்ற முனைப்போடு விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பமும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பின், ட்ரோன் டெஸ்டினேஷன் மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் ஏற்பாடு செய்த பயிற்சி அமர்வுகளில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் ட்ரோன் தொழில்நுட்பத்தின் கோட்பாட்டையும் களத்தில் அதன் நடைமுறை பயன்பாடுகளையும் கற்றுக்கொண்டார். கருடா ஏரோஸ்பேஸ் இதுவரை நைனி, ராஞ்சி, குருகிராம், மசிகா மற்றும் தாழம்பூர் போன்ற பல்வேறு இடங்களைச் சேர்ந்த 445 பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

Drone Didi

வேளாண் தொடர்பாக பணியாற்றி வரும் எந்தவொரு சுய உதவிக்குழுக்களுக்கும், அவர்களது உறுப்பினர்களை ட்ரோன் பைலட்களாக்குவதற்காக நமோ ட்ரோன் தீதி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். "நமோ ட்ரோன் தீதி" திட்டமானது 2023ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. அதன் நோக்கமே நாடு முழுவதும் உள்ள 15,000 சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு விவசாயத்திற்கு உதவும் வகையான ட்ரோன் பயிற்சி அளித்து, அவர்களை ட்ரோன் பைலட்டாக மாற்றுவதே.

இதன் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 'சஷக்த் நாரி விக்சித் பாரத்' திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 1,000 ட்ரோன்களை பெண்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் தங்களின் ட்ரோன் இயக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர். அதிலொரு ட்ரோன் தீதி தான் ஷாலுா ராணி.

"நிகழ்ச்சியில் பிரதமருடன் நாங்கள் நன்கு உரையாடினோம். ட்ரோன் தொழில்நுட்பத்தின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று அவர் எங்களிடம் கேட்டார். நாங்கள் பயிற்சியின் போது கற்றுக்கொண்டதையும் செய்துக்காட்டினோம்," என்று பெருமையுடன் பகிர்ந்தார் ராணி.

விவசாயிகளின் எதிர்கால நண்பன் ட்ரோன்...

ட்ரோன்கள் மூலம் விவசாய நிலங்களில் உரங்கள் தளிர்க்க, விதைகளை போட மற்றும் கண்கானிக்க பயன்படுத்தப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால், விவசாயிகளின் இப்பணிகள் எளிமையாகவும் விரைவாகவும் செயல்படுத்தும் அதே வேளை, அதை கையாளும் தொழில்நுட்ப நபர்களை உருவாக்குவதும் அவசியம். நமோ ட்ரோன் தீதி திட்டமானது அதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனியார் சுய உதவி குழுவான கருடா ஏரோஸ்பேஸின் நிபுணர்களால் நடத்தப்படும் பயிற்சி அமர்வுகளில், ட்ரோன் பைலட்டாக இருப்பது எப்படி, தொழில்நுட்பத்தை எப்படி கையாளுவது மற்றும் கூடுதல் வருமானம் ஈட்ட ட்ரோனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பெண்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. கருடா ஏரோஸ்பேசில் பயிற்சி கொண்ட மற்றொரு ட்ரோன் தீதியான குமாரி அவரது பயிற்சியை முடித்தவுடன், சொந்தமாக ட்ரோனைப் பெற்று அவரது அரை ஏக்கர் நிலத்தில் சிவப்பு ஓக்ராவை பயிரிட்ட இடத்தில் உரங்களை தெளிக்க ட்ரோனை வெற்றிகரமாக பயன்படுத்தி உள்ளார்.

"ட்ரோனைக் கட்டுப்படுத்துவது ஒரு சிறந்த உணர்வு. அதை இயக்கும்போது விமானத்தில் பறப்பது போல் உணர்கிறேன். வருடம் முழுவதும் வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன்ம்" என்றார் குமாரி.
Drone didis at a training session

பயிற்சியின்போது ட்ரேன் தீதிகள்

கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில்,

"ட்ரோன் பைலட் பயிற்சித் திட்டமானது வகுப்பறை அமர்வுகளுடன் தொடங்குகிறது. முதலில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள் கற்பிக்கப்படுகின்றன. ட்ரோனின் டிரான்ஸ்மிட்டர், கன்ட்ரோலர் மற்றும் முனைகள் போன்ற பகுதிகளின் செயல்பாடு வரைபட விளக்கக்காட்சிகள் மற்றும் வீடியோக்கள் மூலம் விளக்கப்படுகிறது. பேட்டரிகள் முதல் ஜிபிஎஸ் செயல்பாடு வரை அனைத்தையும் பற்றி அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, அவர்கள் சிமுலேஷன்களில் ட்ரோன்களை பறக்க பயிற்சி செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து ஆன்-பீல்டில் பயிற்சி அளிக்கப்படுகிறதும்," என்று விளக்கினார் அவர்.

"இதுவரை ஒரு பட்டம் கூட பறக்கவிட்டதில்லை...!"

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சு நாக்புரே, 9 கிராமங்களைச் சேர்ந்த 1,300 பெண்களை இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவித்துள்ளார். இயற்கை விவசாயத்தில் முதன்மை பயிற்சியாளராக ஆன அவருக்கு, 2023 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் டிஜிட்டல் பண்ணை பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு செயல்விளக்க நிகழ்ச்சியின் போது, ட்ரோன்களைப் பற்றி தெரியவந்துள்ளது.

அந்நிகழ்ச்சியானது ட்ரோன்களின் பயன்பாடு மற்றும் நன்மைகள் குறித்து பெண்களுக்கு கல்வி கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டது. முதலில் டிஜிட்டல் பேமெண்ட்டுகள் பற்றி கற்றுக் கொண்ட சஞ்சு பின்னர், ட்ரோன்களை கையாளவும் கற்றுக்கொண்டார்.

"நான் இதுவரை ஒரு பட்டம் கூட பறக்கவிட்டதில்லை. ஆளில்லா விமானத்தை இயக்குவது எப்படி என்று காட்டியபோது மெய்மறந்து போனேன். நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் மூலம் இந்தூரில் நடந்த ட்ரோன் பயிற்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அங்கு உரம் மற்றும் தண்ணீரை எவ்வாறு கலக்க வேண்டும், உரத்தினை தெளிப்பதற்காக ட்ரோனை இயக்குவது எப்படி என்று கற்றுக்கொண்டேன். பின்னர் போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூடுதல் பயிற்சிகளை பெற்றேன். அப்போது எனக்கு சொந்தமாக ட்ரோனும் வழங்கப்பட்டது," என்றார் சஞ்சு.
 Kumari

ட்ரோன் தீதி குமாரி.

வாரனாசியின் கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா படேல் மற்றும் பிஸ்னுபூரைச் சேர்ந்த ஊர்மிளா தேவி ஆகிய இரு ட்ரோன் தீதிகளும் ஹைதராபாத்தில் உள்ள மாருட் ட்ரோன் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். முதுகலை பட்டம் அனிதா பட்டேல் பெண்கள் அமைப்பு ஒன்றில் குடும்ப வன்முறை வழக்குகளுக்கான ஆலோசகராக பணிபுரிகிறார். அவரது கணவர் நோய்வாய்ப்பட்ட பிறகு, அவர்களின் விவசாய நிலத்தை பொறுப்பேற்க வேண்டிய கடமையினை பெற்றார். சூழ்நிலையினால், விவசாயியானார். அவர் உறுப்பினராக இருக்கும் சுயஉதவி குழு, அவரது பெயரை நமோ தீதி திட்டத்திற்கு பரிந்துரைத்தது.

தற்போது ட்ரோன் பயிற்சியினை முடித்துள்ள அவர், ட்ரோன் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றும் என்று உற்சாகமாக எதிர்பார்த்து இருக்கிறார். 'நமோ ட்ரோன் திதி' திட்டத்தின் கீழ், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தில் பாலின இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்தில், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த 85 சுய உதவிக் குழு பெண்களுக்கு மாருட் ட்ரோன்கள் பிரத்யேகப் பயிற்சியை அளித்துவருகின்றன.

வாழ்க்கையில் மாற்றத்திற்காக காத்திருக்கும் ட்ரோன் தீதிகள்!

ட்ரோனை பெற்றவுடன், அனிதா அவரது பண்ணையில் உள்ள காய்கறிகளுக்கு தண்ணீர் தெளிக்க அதைப் பயன்படுத்தினார். அதிக வேலைக்காகவும் பருவமழைக்காகவும் காத்திருக்கும் அவர், ஒரு ஏக்கர் நிலத்தில் உரம் தெளித்து ரூ.400 சம்பாதிக்கலாம் என நம்புகிறார். தான் இன்னும் வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும், வரவிருக்கும் சீசன் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஊர்மிளா தேவி கூறுகிறார். குமாரி ட்ரோனை அனைவரின் நன்மைக்காகவும் பயன்படுத்த வேண்டும்என்றார்.

"அருகில் உள்ள வயல்களுக்கு ட்ரோனில் உரங்களை தெளித்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு 300-400 ரூபாய் வசூலிக்கிறேன். பல்வேறு பயிர்களை பயிரிடுவதால், ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ட்ரோனைப் பயன்படுத்துவது எப்படி ட்ரோன் உரங்களைத் திறம்பட தெளிக்க எவ்வாறு உதவுகிறது மற்றும் ட்ரோன் நிறைய தண்ணீரைச் சேமிக்கிறது என்பதையும் விவசாயிகளுக்கு விளக்குகிறேன். மேலும், பல ட்ரோன்களை வாங்கி ட்ரோன் தீதி பயிற்சி பெற்ற பெண்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளேன்," என்றார் குமாரி.
Sanju Nagpure with her drone

ட்ரோனுடன் சஞ்சு நாக்புரே

அதே போல், சஞ்சுவிற்கு சொந்தமாக உள்ள நான்கு ஏக்கர் நிலத்தில் அவர் ட்ரோன்களை பயன்படுத்துவதுடன், மற்ற நிலங்களில் மருந்து தெளிப்பதற்கான பல ஆர்டர்களைப் பெறத் தொடங்கியுள்ளார். ஜூன்-ஜூலை மாதங்களில் விதைப் பருவம் தொடங்கும் போது, ​​அவரது சொந்த நிலத்திலும் மற்ற விவசாயிகளின் நிலத்திலும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க ட்ரோனைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் ராணி. அவர் மேலும் பகிருகையில்,

"ட்ரோனைப் பயன்படுத்தி, ஒரு ஏக்கர் நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க 7-8 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு நாளில், 20-25 ஏக்கருக்கு எளிதாக மருந்து தெளித்து, சராசரியாக மாதம் 75,000 ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். ஆனால், இதில் சவால்களும் உள்ளன. இந்த புதிய தொழில்நுட்பத்தினை பற்றிய புரிதலை விவசாயிகளிடம் ஏற்படுத்தி அவர்களது எண்ணங்களை மாற்றவேண்டும். அத்துடன் பெண்கள் தாங்களாகவே கையாள முடியாத தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன," என்றார்.

ராணி, குமாரி, சஞ்சு, ஊர்மிளா தேவி, அனிதா படேல் மற்றும் அவர்களைப் போன்ற நூற்றுக்கணக்கான ட்ரோன் திதிகளுக்கு, இந்தத்திட்டம் அவர்களின் குடும்பத்திற்கான கூடுதல் வருமானம் மட்டுமல்ல. சமூகத்தில் ஒரு தனித்துவமான அந்தஸ்தையும் பெற்றுதந்துள்ளது.

"நாங்கள் ட்ரோன்களை இயக்கும் போது மற்ற பெண்கள் எங்களை பிரமிப்புடன் பார்க்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உதவியுடன், பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். அதன்மூலம், எங்களது வாழ்க்கையும் சிறப்பாக மாறும்," என்றார்.

தமிழில்: ஜெயஸ்ரீ