சென்னையில் மாட்டுப் பண்ணை: பால், சாணம் விற்பனை; மாதம் ரூ.1.5 லட்சம் சம்பாதிக்கும் ஐடி தம்பதி!
நாட்டு மாடுகள் வளர்ப்பு மற்றும் சாணத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மூலம் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பாதித்து அசத்தி வருகின்றனர் சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் - ப்ரீதா தம்பதி.
சென்னையிலேயே பிறந்து வளர்ந்து, படிப்பு, ஐடி வேலை, திருமணம், வார இறுதி நாட்களில் ஹோட்டல், தியேட்டர், மால் என வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தான் மணிகண்டன் - ப்ரீதா தம்பதி. கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் இவர்களது வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்தப் போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வினால் ஐடி வேலையோடு, மாதம் ரூ.1.5 லட்சம் வருமானம் தரும் நாட்டு மாடுகள் வளர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். புதிய தொழில் தொடங்குவதென்றால் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுத்தான் ஆக வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து ஒரே நேரத்தில் இரண்டிலும் வெற்றிகரமாகச் செயல்படமுடியும் என்று காட்டிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஜோடி.
அதிலும் குறிப்பாக சாணத்திலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து பலருக்கு புதிய தொழில் தொடங்க பயிற்சிகளையும் அளித்து வருகிறார் ப்ரீதா.
“ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடக்கறவரைக்கும் பால் பத்தி நாங்க ரொம்ப யோசிச்சது இல்ல. அதுக்கு அப்புறம் தான் நாட்டு மாடுகள் பற்றி தெரிஞ்சிக்க ஆசைப்பட்டோம். அப்போதான் நாம குடிக்கற பாக்கெட் பாலால் உடலுக்கு ஏற்படும் கெடுதல்கள் பத்தி தெரிஞ்சு அதிர்ச்சி அடைந்தோம்.
என் மகளுடைய ஆரோக்கியத்திற்காக நாமே வீட்டில் பால் தேவைக்கு ஒரு மாடு வளர்க்கலாம் என முடிவெடுத்தோம். ஆனால் நாங்கள் இருவருமே ஐடி கம்பெனியில் வேலை பார்த்ததால், மாடு வாங்கினால் கவனித்துக் கொள்ள முடியுமா என்ற பயம் உள்ளுக்குள்ளேயே இருந்தது. ஒருவேளை, வாங்கிய மாட்டை சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை என்றால் என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றித் தான் முதலில் யோசித்தோம்.
கார், பைக் மாதிரி காசு கொடுத்து மாட்டை வாங்கி, பயன்படுத்தாவிட்டாலும் அப்படியே ஒரு மூலையில் இருக்கும் என மாட்டை நினைக்க முடியாது. அது ஒரு உயிரினம். நம்முடைய தேவைக்காக வாங்கிவிட்டு சரியாக கவனிக்க முடியாமல் போய் விட்டால் மாட்டை யாரிடம் ஒப்படைப்பது என்பது பற்றி தெளிவான முடிவெடுத்தோம். அதன் பிறகு தான் முதல் மாட்டை வாங்கினோம்,” என்கிறார் ப்ரீதா.
கிராமத்தில் உள்ள தங்களுடைய நண்பர் ஒருவரைச் சந்தித்து இது பற்றி முதலில் பேசியிருக்கிறார்கள் மணிகண்டனும், ப்ரீதாவும். ஒருவேளை மாட்டை அவர்களால் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் தான் பார்த்துக் கொள்வதாக அவர் அளித்த நம்பிக்கையிலேயே முதல் நாட்டுமாட்டை அவர்கள் வாங்கி இருக்கிறார்கள்.
தாங்கள் வாங்கிய மாட்டில் இருந்து கறந்த பாலை, வீட்டுக்குத் தேவையான அளவு போக, அக்கம்பக்கத்தாருக்கும் மீதமுள்ள பாலை விற்பனை செய்துள்ளனர். நல்ல தரமான பாலுக்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது.
மேலும் சிலர் தங்களுக்கும் பால் வேண்டும் எனக் கேட்கவே, இன்னும் சில மாடுகளை வாங்கினால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துள்ளது. அப்படி உருவானது தான் அவர்களது மாட்டுப்பண்ணை. தற்போது அதில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. அவற்றில் இருந்து தினமும் சுமார் 80 லிட்டர் பால் கிடைக்கிறது.
கடைகளில் கிடைக்கும் பாக்கெட் பாலை விட இவர்களது பால் விலை கொஞ்சம் அதிகம் தான். ஆனால், லிட்டர் ரூ.100க்கு விற்பனை செய்தாலும், தரமான நாட்டுப்பாலாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்காமல் வாங்கிச் செல்கின்றனர்.
“நாட்டுமாடு வளர்க்கப் போகிறோம் என்றவுடனேயே நான் கரூர் மாவட்டத்துல இருக்குற ’வானகம்’ பண்ணைக்குப் போய் பயிற்சி எடுத்துக்கிட்டேன். என் கணவரும் பக்கத்தில் இருந்த சில கோசாலைகளில் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
”முதலில் ஒரு மாடு எனும் போது பார்த்துக் கொள்வதில் அவ்வளவாக கஷ்டம் இருக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்து நாட்டு மாடுகள் வாங்கவும் வேலைக்கு ஆள் வைத்து விட்டோம். நாட்டு மாடுகளிலும் ஒரே மாதிரியான மாடுகளாக வளர்க்காமல் காங்கிரேஜ், கிர்னு பல வகைப்பட்ட நாட்டுமாடுகளை வாங்கி வளர்த்து வருகிறோம்,” என்கிறார் ப்ரீதா.
மாடுகளைப் பார்த்துக் கொள்வதற்கு இரண்டு பேர், பால் கறக்க ஒருவர், கறந்த பாலை வாடிக்கையாளர் வீடுகளுக்கு அளிக்க இரண்டு பேர் என மொத்தம் ஐந்து பேர் ப்ரீதாவிடம் வேலை பார்த்து வருகின்றனர். பால் மட்டுமின்றி பாலில் இருந்து கிடைக்கும் தயிர், வெண்ணெய், நெய் மற்றும் பன்னீர் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகின்றனர்.
மாடு வளர்க்கத் தொடங்கிய புதிதில் அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது அதன் கழிவுகளை சமாளிப்பது தான். அதிக சாணம் சேர்ந்தால் கொசு வருமே, நாற்றம் எடுக்குமே என யோசித்த போது தான், அதனை வறட்டிகளாகத் தட்டி விற்பனை செய்யலாம் என்ற யோசனை வந்துள்ளது. அப்போது அடிக்கடி அக்கம்பக்கத்தார் மாடித் தோட்டத்திற்கு உரமாக சாணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரித்த போதுதான் சாணம் எப்படியான இயற்கை உரம் என்பது தெரியவந்துள்ளது.
“ஆரம்பத்துல யாராவது சாணம் கேட்டு வந்தா, ரொம்ப சந்தோஷம் எவ்வளவு வேணுமோ எடுத்துட்டு போங்கனு சொல்லிடுவோம். ஏனென்றால் தொழுவத்தில் சாணம் குப்பையாக சேராமல் இருந்தால் சரி என்ற எண்ணம் தான் அப்போது இருந்தது. ஆனால் சாணம் எப்படிப்பட்ட இயற்கை உரம் என்பது எடுத்துச் சென்றவர்கள் சொல்லியதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. சாணத்தை எப்படி இயற்கை உரமாக மாற்றுவது என முறைப்படி பயிற்சிகள் எடுத்துக்கொண்டேன். அப்போது தான் சாணத்தை இயற்கை உரமாக மட்டுமல்ல, மேலும் பல நல்ல விசயங்களுக்குப் பயன்படுத்தலாம் என்பது தெரிய வந்தது,” எனக் கூறுகிறார் ப்ரீதா.
மாடு வாங்கிய முதல் இரண்டு வருடம் அதனை வளர்ப்பது பற்றிய தேடலிலேயே சென்று விட, கடந்த இரண்டு ஆண்டுகளாக சாணத்திலிருந்து புதுமையான, அதே சமயம் கெமிக்கல் இல்லாத மக்களுக்கு உபயோகமானப் பொருட்களை செய்து வருகிறார் ப்ரீதா. மணிகண்டன் மாடுகளைப் பார்த்துக் கொள்ள, ப்ரீதா கழிவு மேலாண்மையைப் பார்த்துக் கொள்கிறார்.
மாட்டு சாணத்தில் இருந்து சுமார் 30 வகையான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ப்ரீதா. தான் தயாரிக்கும் பொருட்களை ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்துகிறார்.
அதில் முதலில் வருவது இயற்கை உரங்கள். இரண்டாவது விபூதி, ஊதுபத்தி போன்ற பூஜை சாமான்கள். மூன்றாவது சாணத்தில் இருந்து உருவாக்கப்பட்ட பிள்ளையார் சிலை போன்ற பரிசுப் பொருட்கள். நான்காவது தினமும் பயன்படுத்தும் பல்பொடி, தரை சுத்தப்படுத்தும் திரவம், சோப் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள். ஐந்தாவதாக தலைவலி மருந்து, பல்வலி மருந்து போன்ற மருந்துப் பொருட்கள்.
சாணத்தில் இருந்து இத்தனை பொருட்கள் தயாரிக்க முடியுமா என ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. வாங்கிப் பயன்படுத்தியவர்களின் வாய் வழி விளம்பரம் மூலமாகவே அதிக வாடிக்கையாளர்கள் உருவாகி வருகின்றனராம். சிலர் வெளியூரில் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்தப் பொருட்களை வாங்கி பரிசாகத்தான் தருகிறார்களாம். கொரோனா ஊரடங்கு காலத்தில் களப்பணியாளர்கள் 50 பேருக்கு ப்ரீதா தயாரித்த தலைவலி தைலத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாங்கி பரிசளித்துள்ளார்.
சாணத்தில் இருந்து நேரடியாக மேற்கூரிய பொருட்களைத் தயாரிப்பதோடு, மற்றவர்களுக்கு அது பற்றிய பயிற்சிகளையும் தருகிறார் ப்ரீதா. கிராமங்களில் மாடு வைத்திருப்போருக்கு மட்டுமின்றி, இதில் ஆர்வம் உள்ள அனைவருக்குமே இந்தப் பயிற்சியை அவர் அளித்து வருகிறார். இதுவரை அவரிடம் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தப் பயிற்சியைப் பெற்றுள்ளனராம்.
“அதிக முதலீடே இல்லாத நல்ல தொழில்வாய்ப்பு இது. வீட்டில் மாடு வைத்திருப்பவர்கள் தான் இந்தத் தொழிலில் ஈடுபட முடியும் என்றில்லை. மாடு வைத்திருப்பவர்களிடம் சாணத்தை வாங்கியும் இதைச் செய்யலாம். சில இடங்களில் சாணத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் இருப்பார்கள், அவர்களிடம் இலவசமாகவே சாணத்தை வாங்கி இந்தத் தொழிலைத் தொடங்கலாம். இதில் நம் உழைப்பு மட்டும் தான் பெரிய மூலதனம்,” என்கிறார் ப்ரீதா.
முதலில் மாடு வாங்கப் போகிறோம் என இவர்கள் கூறியதும் வீட்டுப் பெரியவர்கள் கொஞ்சம் கோபப்பட்டிருக்கிறார்கள். இருவருமே ஐடி நிறுவன ஊழியர்கள் மாட்டைப் பார்த்துக் கொள்ள எப்படி நேரம் இருக்கும் என்றெல்லாம் அறிவுரை கூறியிருக்கிறார்கள். ஆனால் முதல் மாடு வீடு வந்து சேர்ந்தபின் அவர்களது எண்ணம் மாறி விட்டது. இப்போது மாட்டைப் பார்த்துக் கொள்வதில் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்களாம்.
ரூ.30 லட்சம் மதிப்புள்ள நாட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர் மணிகண்டன் - ப்ரீதா தம்பதியினர். இதன் மூலம் மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. இன்னமும் சாணத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களின் விற்பனையை ப்ரீதா விரிவு படுத்தவில்லை. தனது பொருட்களுக்கு பெயர் கூட அவர் வைக்கவில்லை. கூடிய சீக்கிரம் இதனை மேலும் விரிவுப் படுத்த திட்டமிட்டு வருகிறார் ப்ரீதா.
“நான் நான்கு முக்கிய நோக்கங்களுக்காகத்தான் இந்தத் தொழிலை செய்து வருகிறேன். அதில் முதலாவது ஆரோக்கியம். இது ஒன்றும் புதிய விசயமல்ல. ஏற்கனவே நம் முன்னோர்கள் செய்ததுதான். காலப்போக்கில் நாம் மறந்து விட்டோம். இப்போது அதனை மீட்டெடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.”
குறிப்பாக கொரோனா பிரச்சினைக்குப் பிறகு மக்களிடம் ஆர்கானிக் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மற்றவர்கள் எல்லாம் ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட போது தான், உண்மையில் எங்கள் தொழில் நன்றாக நடந்தது என்று கூற வேண்டும். பால் மட்டுமல்ல சாணத்தில் உருவானப் பொருட்களையும் அப்போது மக்கள் அதிகம் விரும்பி வாங்கத் தொடங்கியுள்ளனர், என்கிறார் ப்ரீதா.
நாட்டு மாடு வளர்ப்பு மற்றும் சாணத்தில் இருந்து பொருட்கள் தயாரிப்பு என பிஸியாக உள்ள போதும், இன்னமும் ஐடி வேலையையும் மணிகண்டனும், ப்ரீதாவும் தொடர்ந்தே வருகின்றனர். வார இறுதி நாட்களில் பயிற்சி முகாம்களையும் நடத்தி வருகின்றனர்.
“சுற்றுலா தனியாக முகாம் தனியாக என நாங்கள் பிரித்துக் கொள்வதில்லை. முகாம்களுக்கு செல்வதையே எங்களது சுற்றுலாவாக மகிழ்ச்சியோடுதான் செய்து வருகிறோம். விருப்பப்பட்டு செய்தால் நிச்சயம் அந்த வேலை பளுவாக இருக்காது. எங்களுக்கும் அப்படித்தான். அதனால் தான் ஐடி வேலையும், நாட்டு மாடு வளர்ப்பும் எங்களால் ஒரே நேரத்தில் வெற்றிகரமாகச் செய்ய முடிகிறது. இதற்கு குறிப்பாக எனது மகளுக்கும், குடும்பத்தாருக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவர்களது ஒத்துழைப்பால் தான் என்னால் வெற்றிகரமாக இவற்றை செய்ய முடிகிறது,” எனச் சந்தோசமாகக் கூறுகிறார் ப்ரீதா.
கெமிக்கல் அதிகம் கலக்கப்பட்ட பால், சிக்கன் உள்ளிட்ட பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் சமீபகாலமாக பெண் குழந்தைகள் மிகக் குறைந்த வயதிலேயே பூப்பெய்தும் நிகழ்வு நடந்து வருகிறது. அதற்கு நல்ல தீர்வு இது போன்ற ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவது தான் என்கிறார் ப்ரீதா. மக்களிடம் இது பற்றி மேலும் நல்ல விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே ப்ரீதாவின் ஆசையாம். அப்போது தான் நாட்டுமாடுகளை அழிவில் இருந்து காக்க முடியும் என்கிறார்.
பெற்றோர் எட்டடி பாய்ந்தால், அவர்களது மகள் நேத்ரா 16 அடி பாய்கிறார். 13 வயதான நேத்ரா மாதம் ஒருமுறை தனது தோழியுடன் சேர்ந்து ‘கன்னுக்குட்டி’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சிறுகுழந்தைகளுக்காக நடத்தப்படும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு கன்னுக்குட்டிகளுக்கு உணவு கொடுப்பது, நாட்டுமாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வது, அவற்றுடன் செல்பி எடுத்துக் கொள்வது போன்ற சுவாரஸ்யமாக நிகழ்வுகள் உள்ளன. குழந்தைகளுடன் வரும் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்காக சாணத்தில் செய்யப்பட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என நாட்டுமாடுகளைப் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுகிறது. தனது பொருட்களுக்கு விளம்பரம் மற்றும் வியாபாரத்தையும் நடத்தி விடுகின்றனர் மணிகண்டன் -ப்ரீதா தம்பதியினர்.
இவர்களைப் பார்த்து தற்போது சென்னையில் மேலும் சில குடும்பங்களும் தங்களது வீட்டு உபயோகத்திற்கென தனியாக மாடு வளர்க்கத் தொடங்கி விட்டார்களாம். கிராமங்களில் மட்டும் தான் மாடு வளர்க்க வேண்டும், வீட்டிலேயே மாடு வளர்ப்பது கடினம் போன்ற பிம்பங்கள் உடைந்து வருகிறது. இதுவே தங்களது முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என பெருமிதத்துடன் கூறுகிறார் ப்ரீதா.