40 சென்ட் நிலத்தில் 6 மாதத்தில் ரூ.50 ஆயிரம் வரை லாபம்: கலப்புப் பயிர் விவசாயி பாலாஜி!
இயற்கை விவசாய முறையில் கலப்பு பயிர் சாகுபடி செய்தால் குறைவில்லாத வருமானத்துடன் லாபகரமாக விவசாயம் செய்யமுடியும் என்கிறார் விவசாயத்தை கையில் எடுத்துள்ள இளைஞர் பாலாஜி.
கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி 'விவசாயி'. விவசாயியை நாம் மறந்ததால் விவசாயம் நம்மை மறந்துவிட்டது. இதன் விளைவாகத் தான் 40 வயதிலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் என்று மாத்திரைகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறோம். 94 வயதிலும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கும் பாட்டிக்கு இல்லாத வியாதிகள் இன்றைய தலைமுறைக்கு ஏன் சிறு வயதிலேயே வந்துவிடுகிறது? இந்த கேள்விக்கான தேடலில் செய்யூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இயற்கை விவசாயியாக மாறி இருக்கிறார்.
நான் விவசாயி என்று பெருமையோடு சொல்வதை சிறுமையாக நினைத்தவர்களுக்கு தக்க பதிலைத் தந்துள்ளன நோய்கள். அதிலும் குறிப்பாக எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவர்களையும் தாக்கி விடும் புற்றுநோய். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறவினர் ஒருவரை மருத்துவமனையில் பார்க்கச் சென்ற பாலாஜிக்கு அங்குள்ள மருத்துவர்கள் குழு சொன்ன விஷயம் பேரதிர்ச்சியை தந்துள்ளது.
புகையிலை பழக்கம் இருந்தால் மட்டுமல்ல ரசாயன உரம் தெளித்த உணவுகளை உட்கொள்வதன் மூலமும் புற்றுநோய் வரக்கூடும் என்று மருத்துவர்கள் கூறியது தூக்கத்தை தொலைக்கச் செய்ததே தான் இயற்கை விவசாயியாக மாறுவதற்கான ஆரம்பப் புள்ளி என்கிறார் பாலாஜி.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தான் எனது சொந்த கிராமம். எங்கள் குடும்பம் சாதாரண நடுத்தர வர்க்க குடும்பம், தாத்தா, பாட்டியைப் போல அப்பாவும் விவசாயம் செய்து வந்தார். ஆனால் விவசாயத்தை தொழிலாக செய்ய முடியாமல் வேறு தொழிலுக்கு அப்பா மாறிவிட விவசாய வாசம் எங்கள் குடும்பத்தை விட்டு மறைந்துபோனது. நான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு ஏற்றுமதி தொழிலிலில் இறங்க திட்டமிட்டேன்.
ஆனால் அதற்காக நெடுந்தூரம் பயணிக்க வேண்டி இருந்ததால் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்கள் குழுவை வைத்து ஊதுபத்தி தயாரிக்கும் சிறுதொழிலை 2014 முதல் செய்யத் தொடங்கினேன். 2015ம் ஆண்டில் தான் விவசாயத்திற்கு அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது என்கிறார் பாலாஜி.
94 வயதில் என்னுடைய பாட்டிக்கு வந்துள்ள சர்க்கரை நோய் 40 வயதிலேயே என்னுடைய அப்பா, அம்மாவிற்கு வந்துவிட்டது. உணவு நஞ்சானதே இதற்கான காரணம் என்று புரிந்ததால் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஒன்றையே கொள்கையாக வைத்து வேளாண்துறையில் நுழைந்தேன். விவசாயம் பற்றி எந்த அறிவும் இல்லாவிட்டாலும் முழுக்க முழுக்க ஆன்லைனில் இருந்து தகவல்களை அறிந்து விவசாயப் பணியைத்தொடங்கினேன் என்கிறார் பாலாஜி.
எங்களுக்குச் சொந்தமாக செய்யூர் தாலுகா, விராலூர் கிராமத்தில் 6 ஏக்கர் நன்செய் நிலமும் 6 ஏக்கர் புன்செய் நிலமும் இருந்தது.
கிணற்றுப்பாசனத்தை நம்பி இருந்த இந்த 12 ஏக்கரில் முதன்முதலில் காய்கறிகளை விதைத்து வளர்க்கச் செய்தேன். தொடக்கத்தில் இயற்கை விவசாயம் பற்றி எனக்கோ என்னுடன் பணிசெய்த விவசாயிகளுக்கோ எந்த புரிதலும் இல்லை.
யூடியூப்பில் நம்மாழ்வார் வீடியோக்களைப் பார்த்தே 90 சதவிகிதம் இயற்கை விவசாயம் கற்றேன். மேலும் முன்னோடி இயற்கை விவசாயிகள் ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், மதுராந்தகம் சுப்பு இரண்டு பேரிடம் இருந்து விவசாயம் சார்ந்த சந்தேகங்களுக்கு தீர்வு கேட்பேன் என்று தான் இயற்கை விவசாயம் பயின்ற விவரத்தை விவரிக்கிறார் பாலாஜி.
இயற்கை விவசாயத்தில் தற்போது முழு அனுபவம் பெற்றுவிட்ட நிலையில் பாலாஜி எடுத்த முதல் முயற்சி கலப்புப் பயிர் விவசாய முறை. காய்கறிகளை பயிர் செய்வதன் மூலம் நிரந்தர வருமானம் கிடைக்காது ஏனெனில் அவற்றின் விலை தினசரி மாற்றத்திற்கு உரியது என்பதால் லாப நஷ்டம் இருக்கும். எனவே ஒரே பயிர் விவசாயத்தில் கவனம் செலுத்தாமல் கிடைக்கும் நீருக்கு ஏற்ப நிலத்தை விவசாயம் செய்ய பிரித்துக் கொண்டு விவசாயத் திட்டமிடல்களைச் செய்துள்ளார்.
6 ஏக்கர் புன்செய் நிலத்தில் 3.5 ஏக்கர் வரை நெல், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட சாகுபடிக்காக ஒதுக்கி இருக்கிறேன். கிணற்றுப் பாசன நீரை பயன்படுத்தி சுழற்சி முறையில் இந்த பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. எஞ்சிய நிலத்தில் தொடக்கத்தில் பேபி உருளைக்கிழங்கு, ஊசி மிளகாய் சாகுபடி செய்தேன். வெறும் 10 சென்ட் இடத்தில் ஒன்றரை டன் சுரைக்காய் சாகுபடி செய்தேன்.
முற்றிலும் இயற்கை விவசாய முறையில் இவை சாகுபடி செய்யப்பட்டன. இடுபொருள்கள் செய்முறை வீடியோக்களைப் பார்த்து நானே உரங்களையும் தயார் செய்தேன். என்னுடைய பாட்டி 10 நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார் அதன் சாணம் மற்றும் கோமியத்தை வீணாக்காமல் அவற்றை வைத்து இடுபொருள்களை தயாரித்தேன்.
ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யா, புண்ணாக்கு கரைசல், முட்டை அமிலம், ஐந்து இலை கரைசல் பூச்சி விரட்டி என 8 வகையான மருந்துகளை தயாரித்து வைத்துக் கொண்டு தேவையான நேரத்தில் நிலத்தில் பயன்படுத்துவேன். இவற்றை பயன்படுத்துவதனால் சாகுபடியில் எந்தக் குறையும் இன்றி நல்ல விளைச்சல் கிடைக்கிறது என்கிறார் இளம் இயற்கை விவசாயி பாலாஜி.
இயற்கை விவசாயத்தை பொருத்தவரையில் பொறுமை மிகவும் அவசியம். நம் மண்ணை நாம் நேசித்தால் நிச்சயம் அதற்கு உண்டான நற்பலன் கிடைக்கும். அளவு கடந்த வருமானம் எனக்குத் தேவையில்லை என் தோட்டத்தில் விளையும் பயிர்கள் நஞ்சில்லாதவை ஒரு நாளைக்கு 15 கிலோ தக்காளி தோட்டத்தில் விளைந்தால் அவை அனைத்தையும் தேடி வந்து என்னிடம் இருந்து வாங்கிச் செல்ல மக்கள் இருக்கின்றனர்.
சந்தை விலையை விட குறைத்தே நான் விற்பனை செய்கிறேன், லாபம் எனது நோக்கமல்ல முதலீட்டை விட 3 சதவிகிதம் லாபம் கிடைத்தாலே போதும் அதற்கு மேல் எனக்கு வருமானமும் தேவையில்லை என்று தெள்ளத் தெளிவாக பேசுகிறார் பாலாஜி.
மூணேகால் ஏக்கர் நிலத்துல கடலை போட்டிருக்கேன். நிலத்தைச் சுத்தி தேக்கு மரங்கள் இருக்கு. எல்லாப்பயிர்களுக்கும் வாரம் ஒரு தடவை பாசனம் செய்யும்போது தண்ணீரில் ஜீவாமிர்தத்தைக் கலந்து விட்டுவிடுவேன். தேவைப்படும்போது, உயிர் உரங்களையும், பூச்சிகள் தாக்குனா வேப்பெண்ணெய்க் கரைசல் பயன்படுத்துறேன். சாமந்திப்பூக்களை ஊடுபயிரா சாகுபடி செஞ்சுருக்குறதால, பிரதானப்பயிர்கள்ல பூச்சித்தாக்குதல் குறைவாத்தான் இருக்கு.
நிறையப் பயிர்களைக் கலந்து சாகுபடி செய்றதுனாலயும், நோய், பூச்சித்தாக்குதல் குறையுது. அதில்லாம தொடர் வருமானமும் கிடைக்குது என்று இயற்கை விவசாயம் பற்றிய தனது அனுபவங்களை மடை திறந்த வெள்ளம் போல கொட்டுகிறார் பாலாஜி.
கலப்புப் பயிர் விவசாயம் செய்தால் மட்டுமே ஒரு பயிர் கைவிட்டாலும் மற்றொரு பயிர் வருமானம் கொடுக்கும். கடலையை ஆட்டி எண்ணெய் எடுத்து விற்பனை செய்கிறேன். இப்போது பலரும் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதே போன்று கீரை வகைகளையும் கேட்டு வருகின்றனர். இயற்கை விவசாயத்திற்கு இப்போது உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வு இருப்பதால் அவர்களின் தேவைக்கு ஏற்ப சாகுபடி செய்து வருவதாகக் கூறுகிறார் பாலாஜி. இவரின் விவசாயப் பண்ணைக்கு ’இண்டியானா ஃபார்ம்ஸ்’
(Indiana farms) என்று பெயர் வைத்துள்ளார் பாலாஜி.
இயற்கை விவசாயத்தில் மகசூல் குறைவாக இருக்கலாம் ஆனால் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. 40 சென்ட் நிலத்தில் 6 மாதம் சரியான முறையில் இயற்கை விவசாயம் செய்தால் ரூ.40 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை நிச்சயம் சம்பாதிக்க முடியும் அதைத்தான் நான் செய்து வருகிறேன் என்று உறுதியாகச் சொல்கிறார் பாலாஜி.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் எனக்கு இயற்கை விவசாயத்தில் கிடைக்கிறது. எதிர்காலத் தலைமுறைக்கு நஞ்சில்லா உணவைக் கொடுக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்ன ஆனாலும் நிச்சயம் இயற்கை விவசாயப் பாதையில் இருந்து தடம் மாற மாட்டேன் என்று ஆணித்தரமாக கூறுகிறார் இந்த இளம் இயற்கை விவசாயி பாலாஜி.