'நான் கொடுப்பதெல்லாம் 100% கைத்தறி துணிகள்’– ஐடி பணியை விட்டு நெசவுத் தொழிலை மீட்டெடுக்கும் சுதா முரளி!
சுதா தொடங்கிய ‘முத்ரா ட்ரெண்ட்ஸ்’ கைத்தறி மற்றும் இயற்கை துணிவகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பெண்களுக்கான ஆடை வகைகளை நேரடியாக கைவினைஞர்களிடமிருந்து வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது.
’100% இயற்கையான பொருட்களால் தயாரான…’ இப்படி எல்லாப் பொருட்களுக்கும் விளம்பரம் செய்யப்படுவதைப் பார்க்கமுடிகிறது. ஏன் இப்படி விளம்பரப்படுத்துகிறார்கள்? நவீனமயமாக்கல், தாராளமயமாக்கல், தொழில் நுட்பமயமாக்கல் போன்ற நேர்மறை மாற்றங்களுக்கிடையில் கலப்படமயமாக்கல் அதிகரித்ததுதான் இதற்குக் காரணம்.
இதனால் ஒரிஜினல், சுத்தமான, இயற்கையான, ஆர்கானிக், நேச்சுரல் போன்றவை ஒவ்வொரு தயாரிப்பிற்கும் இனிஷியலாக போடப்பட்டு அவை அசலானது என்கிற கருத்து மக்கள் மனதில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது.
ஆனால் இப்படி விளம்பரப்படுத்தப்படுத்தப்படும் பொருட்களும் உண்மையிலேயே அதில் குறிப்பிட்டுள்ளபடி இயற்கையானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. இதுபோன்ற இனிஷியல்களுடன் கலப்படங்கள் அதிகரித்துள்ள நிலையில் உண்மையான, இயற்கையான பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புபவர்கள் கடும் போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இப்படித்தான் இயற்கையான துணிவகைகளை ’முத்ரா ட்ரெண்ட்ஸ்’ (Mudhra Trends) நிறுவனம் மூலம் ஊக்குவிக்கும் சுதா முரளி தனது பிராடக்ட்ஸ் இயற்கையானது என்பதை நிரூபிப்பதில் போராட்டங்களை சந்திக்கிறார்.
குடும்பம் மற்றும் படிப்பு
சுதா முரளி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரது அப்பா முரளி உணவுடன் சேர்த்து இவருக்கு சுதந்திர எண்ணத்தையும் தைரியத்தையும் ஊட்டி வளர்த்துள்ளார். இவரது அம்மா ரேவதி முரளி மிகவும் கணிவானவர். அவரிடமிருந்து சுதா பொறுமையையும் விடாமுயற்சியையும் கற்றுக்கொண்டார். ஸ்ரீகாந்த் முரளி இவரது அன்பான சகோதரர்.
இப்படி ஒரு அழகான குடும்பச் சூழலில் சுதா வளர்ந்துள்ளார். 2001ம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தார்.
பணி வாழ்க்கை மற்றும் அனுபவம்
சாஃப்ட்வேர் இன்ஸ்டிரக்டராக 2,500 ரூபாய் சம்பளத்தில் தொடங்கியது இவரது பணி வாழ்க்கை. தொடர் முயற்சிக்குப் பிறகு பொறியியல் படிப்பு முடித்த கல்லூரியிலேயே விரிவுரையாளர் பணி கிடைத்தது.
இதற்கிடையில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடிந்தது. ஓரண்டு லண்டன் வாழ்க்கை, அதன் பிறகு பெங்களூரு திரும்பினார்கள். அந்த சமயத்தில்தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தேர்வுகளில் தேர்ச்சி பெற சகுந்தலா தேவியின் புத்தகங்களைப் படித்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியும் கிடைத்தது. பெங்களூருவில் இருந்த சமயத்தில் சுதாவிற்கு ஒரு மகன் பிறந்தார். அவரது பெயர் ஷ்ரேயாஸ் பி கிருஷ்ணன்.
சுதா பெங்களூருவில் இருந்து சென்னை மாற்றலானார். ஐடி துறையில் 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம், மிகப்பெரிய பிராண்டுகளின் பண்டகசாலைகளைப் பார்வையிடுவது, லாஜிஸ்டிக்ஸ், விநியோகச் சங்கிலி என ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன.
“லாஜிஸ்டிக்ஸ் கம்பெனியில் பணியாற்றியபோது மேலாண்மை பயிற்சி நடந்தது. அந்த பயிற்சி முடிவில் ‘நான் வெற்றியடைந்துள்ளேன்; ஆனால் மகிழ்ச்சியாக இல்லை’ என்கிற புரிதல் எனக்கு ஏற்பட்டது. வெற்றி, மகிழ்ச்சி இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என்பதும் எனக்கு தெளிவானது,” என்கிறார் சுதா.
தொழில்முனைவு - புரியாத புதிர்
மற்ற நிறுவனங்களில் பணிபுரிவது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்கிற புரிதல் ஏற்பட்ட பிறகு பெற்றோர் மறுப்பு தெரிவித்தும் பொருட்படுத்தாமல் வேலையை விட்டு விலகியுள்ளார். ஆனால் கணவர் பொன்னழகர் கிருஷ்ணன் மற்றும் புகுந்த வீட்டினரும் அவரது விருப்பத்தை மதித்து ஏற்றுக்கொண்டனர்.
“நல்ல வேலை, நல்ல சம்பளம். வேலையை விடவேண்டாம் என்று பலர் அறிவுறுத்தினார்கள். ஆனால் நான் பொருட்படுத்தவில்லை. வேலையை விட்ட கையோடு ‘தொழில்முனைவர்’ என்கிற வார்த்தையைதான் கூகுள் செய்தேன். அந்த அளவிற்கு தொழில்முனைவு என்பது எனக்கு சற்றும் பரிச்சயமில்லாத பகுதியாக இருந்தது. அதிர்ஷ்ட்டவசமாக சரியான நேரத்தில் சரியான நபர்களுடன் இணையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது,” என்கிறார்.
சுதா தனக்கு ஆர்வமுள்ள பகுதியில் செயல்படத் தீர்மானித்து ஷாப்பிங் பிரிவைத் தேர்வு செய்தார்.
“எந்தவித பார்ட்னர்ஷிப்பிலும் இணையாமல் தனித்து செயல்படணும் அப்படின்றது உறுதியாக இருந்தேன்,” என்கிறார் சுதா.
காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள்
மற்றவர்களைக் காட்டிலும் தனித்துவமாக செயல்படவேண்டும் என்கிற உந்துதலுடன் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது காஞ்சிபுரத்தில் நெசவாளர் ஒருவரை சுதா சந்தித்துள்ளார்.
காஞ்சிபுரம் பட்டுப்புடவை தயாரிப்பு செயல்முறையைக் கண்டு வியந்துள்ளார். தறி, பட்டு நூல் போன்றவற்றைப் பார்ப்பது உற்சாகமான அனுபவமாக இருந்துள்ளது.
“தறி உரிமையாளர் ஒருத்தரை சந்திச்சு பேசினேன். அப்பதான் நெசவாளர்கள் நிலை மோசமா இருக்கறதை தெரிஞ்சுகிட்டேன். மழைக் காலத்தில் ஈரப்பதம் இருக்கும்போது பட்டு நெய்யறது கஷ்டம். கைவினைஞர்கள் அவங்களோட வீட்டுல தறிகளை பத்திரப்படுத்திட்டு வயசானங்க, குழதைங்கள் இப்படி எல்லாரும் வெளியில படுத்துக்கறதை பார்க்கமுடிஞ்சுது. இது என்னை ரொம்பவே பாதிச்சுது. அதனாலதான் நெசவாளர்கள், கைவினைஞர்கள் அப்புறம் அவங்க தயாரிப்புகளையும் புரொமோட் பண்ணனுன்னு தீர்மானிச்சேன்,” என்றார் சுதா.
முத்ரா ட்ரெண்ட்ஸ் - தொடக்கம்
பெண்களுக்கான ஆடைகளில் கவனம் செலுத்தத் தீர்மானித்து ‘முத்ரா ட்ரெண்ட்ஸ்’ என்கிற பெயரைத் தேர்வு செய்தார்.
”முத்ரா என்றால் எண்ணங்களை வெளிப்படுத்துவது என்றும் தனித்துவமானது என்றும் பொருள். ‘ட்ரெண்ட்ஸ்’ என்பது லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்பதைக் குறிக்கிறது. அதேபோல் எங்கள் லோகோவும் நிறத்தையும் சுதந்திரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பட்டாம்பூச்சியைக் கொண்டுள்ளது,” என்று விவரித்தார் சுதா.
கைவினைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் “Bringing Magic from artisans’ hands to your hearts” என்கிற டேக்லைன் உருவாக்கினார்.
ஆரம்பத்தில் அவர்கள் வீட்டு கார் பார்க்கிங்கை ஸ்டோராக மாற்றியுள்ளனர். உடை மாற்றும் அறை உட்பட அனைத்து வசதிகளுடன்கூடிய ஸ்டோரை 150 சதுர அடியில் உருவாக்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் ரீடெயில் வணிகத்தில் தொடங்கிய சுதா, சமீபத்தில் பி2பி வணிகத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
தொடர் ஆய்வு
“அனுபவமிக்க நண்பர் ஒருவருடன் உரையாடியதில் இருந்து கைவினைஞர்களை நேரடியாக சந்திப்பது சிறந்தது என்பதை உணர்ந்தேன். முதலில் குஜராத்தில் 10 நாட்கள் செலவிட்டு கச்சு, புஜ், அஜ்ராக்பூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று அவர்களது வாழ்க்கைமுறையைத் தெரிந்து கொண்டேன்,” என்றார்.
இதைத் தொடர்ந்து ஔரங்காபாத், ஆரணி, ஸ்ரீகாலஹஸ்தி, மதுரை, ராஜ்கோட், ஜெய்பூர், சிறுமுகை, காரைக்குடி போன்ற பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார். நம் நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் உணர்த்தக்கூடிய ஹேண்ட்பிளாக் பிரிண்ட், ஆர்கானிக் கலர் டையிங், வெவ்வேறு நெசவு முறைகள் போன்றவற்றைத் தெரிந்துகொண்டார். இது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக இருப்பினும் சந்தைக்கு வராதது வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையே வணிகமாக மாற்றவும் அதேசமயம் வருவாய் ஈட்டவும் தீர்மானித்தார். சிறு குழுவை உருவாக்கி புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார். பலருடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
வாடிக்கையாளர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரைப்பது, வாடிக்கையாளர் அனுபவம், தயாரிப்புகளின் தரம் போன்றவையே நீண்ட கால அடிப்படையில் துணை நிற்கும் என்பதை திடமாக நம்புகிறார்.
முதலீடு மற்றும் வருவாய்
ஆரம்பத்தில் வீட்டின் கார் நிறுத்தத்தில் கடை அமைக்கப்பட்ட போது இண்டீரியர் பணிகள் உட்பட 3-4 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். இதுதவிர சரக்குகள் வாங்க 5 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். இப்போது ஆண்டு வருவாயாக 13-14 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறார்.
இதுவரை வெளியில் இருந்து நிதி திரட்டவில்லை. முத்ரா ட்ரெண்ட்ஸ் சுயநிதியிலேயே இயங்கி வருகிறது.
பிராடக்ட்ஸ்
’முத்ரா ட்ரெண்ட்ஸ்’ கைத்தறி மற்றும் இயற்கை துணிவகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஹேண்ட்பிளாக் பிரிண்டிங் மட்டுமே இவர்களது தயாரிப்புகளில் இடம் பெற்றுள்ளது. டிஜிட்டல் பிரிண்டிங் இருப்பதில்லை.
“நாங்க நேச்சுரல் பிராடக்ட்ஸை மட்டுமே புரொமோட் பண்றோம். சாடின், ஜார்ஜெட் மாதிரியான செயற்கை பிராடக்ட்ஸை புரொமோட் பண்றதில்லை. சிக்கன் வொர்க், ஹேண்ட் பிளாக் பிரிண்டிங், அஜ்ரக் முறையில் செய்யப்படற பிரிண்ட் இதெல்லாம் எங்க ஆர்டிசன்ஸ் பண்றாங்க,” என்று சுதா விவரித்தார்.
இயற்கை வகைகளை ஊக்குவிக்கும் சுதா,
“சுற்றுச்சூழல் பாதுகாப்பில் 3 R’s என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் நான் நான்காவது R இருக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறேன். அதாவது Refuse. தேவையில்லாதபோது ஷாப்பிங் செய்வதை மறுத்துவிடலாம். ஒரு புடவை தயாரிப்புக்கு எத்தனையோ வளங்கள் பயன்படுத்தப்படுது. இந்த வளங்கள் வீணாகாம இருக்கும்,” என்கிறார் சுதா.
ஃபேஷன் மற்றும் தயாரிப்பு முறை
இரண்டு வகையான ஃபேஷனில் இவர் கவனம் செலுத்துகிறார்.
“சுற்றுச்சூழலுக்கு உகந்த சஸ்டெயினபிள் ஃபேஷன். அடுத்தது ஸ்லோ ஃபேஷன் ரெண்டுலயும் நான் கவனம் செலுத்தறேன். பெரிய பிராண்டுகள்ல ஒவ்வொரு வாரமும் ஃபேஷன் மாறும். அவங்களோட பிராடெக்ஸ் மெஷின்ல தயாரிக்கப்படுது. இந்த வார ஃபேஷன் அடுத்த வாரமே அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிடும். இது ஃபாஸ்ட் ஃபேஷன். ஆனா ஸ்லோ ஃபேஷன் அப்படியில்லை.
உதாரணத்துக்கு அஜ்ரக் டையிங் பார்த்தீங்கன்னா, ஆர்கானிக் கலர் தயாரிச்சு, ஊறவைச்சு, மண்ல காயவைப்பாங்க. கால்ல மிதிச்சுதான் சாயம் ஏத்துவாங்க. சாயம் ஏத்தினதும் காய வைச்சு, பதப்படுத்தி, ஹேண்ட் பிளாக் பிரிண்ட் பண்ணி, திரும்பவும் காய வைச்சு பதப்படுத்தி கைக்கு வரும். இந்த பிராசஸ் முடிய 7-9 நாட்கள் ஆகும், என்று தயாரிப்பு முறையை விளக்கினார்.
இயற்கை வகைகள்ல ஒருமுறை பார்த்த அதே கலர் மீண்டும் கிடைப்பது கடினம் என்கிறார் சுதா. அதனால் கைத்தறி வகைகளைப் பொருத்தவரை ஒரு துணி பிடிந்திருந்தால் உடனே வாங்கிடுங்க என்பதுதான் இவரது அட்வைஸ்.
வணிக ரீதியான சவால்கள்
வாடிக்கையாளர்களுக்கு ஒரிஜினல் தயாரிப்பிற்கும் மற்றவைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை என்பதே சுதாவின் முக்கிய சவாலாக உள்ளது.
“ஆன்லைனில் லினென் வகைகள் 700 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது சாத்தியமே இல்லை. இந்த மாதிரி விளம்பரங்கள் மக்களை தவறா வழிநடத்துது. இதில் மாற்றத்தை கொண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்துறது மிகப்பெரிய சவாலா இருக்கு,” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
அவர் மேலும் விவரிக்கும்போது,
“கைவினைஞர்கள் கையால பிரிண்ட் செய்யறப்ப துணியில ஒரு சில இடங்கள்ல பிரிண்ட் லேசாவும் சில இடங்களில் டார்க்காகவும் பதியும். ஹேண்ட் பிளாக் பிரிண்டின் அழகே இதுதான். ஆனால் இதை மக்களுக்கு புரியவைக்க முடியாது. அவங்களோட கண்ணோட்டமே வேற மாதிரி இருக்கும். இதை குறைபாடாகவே பார்க்கறாங்க. சொல்லப்போனா இதுதான் ஒரிஜினல் ஹேண்ட் பிரிண்ட் அப்படிங்கறதுக்கான உண்மைத்தன்மையை காட்டுதுன்னு நான் சொல்லுவேன்,” என்றார்.
மேலும் ஊழியர்களை தக்கவைத்துக்கொள்வதும் இவருக்கு சவாலாக உள்ளது. இவை தவிர பிரபல பிராண்டுகளும் போட்டியிட்டு இவர்களது தயாரிப்புகளின் உண்மைத்தன்மை குறித்து விவரித்து பிராண்ட் அவேர்னெஸ் ஏற்படுத்துவது கடினமாக இருப்பதாக விவரிக்கிறார்.
அதேபோல் மக்கள் பேரம் பேசி பொருட்களை வாங்கி பழகிவிட்டதால் அந்த மனநிலையை மாற்றுவதும் சவாலாக உள்ளது என்கிறார்.
கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள்
முத்ரா ட்ரெண்ட்ஸ் சமீபத்தில் பிரத்யேகமாக வெட்டிங் கலெக்ஷன்ஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு வெட்டிங் கலெக்ஷன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை நேரடியாக தறிக்கே கூட்டிச்சென்று புடவைகளை கொடுத்து வந்தனர். தற்போதைய சூழல் காரணமாக இந்த முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த சரக்குகள் இந்த பெருந்தொற்று காரணமாக தேக்கமடைந்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது,
“ஆடை வகைகள் கெட்டுப்போகும் பொருள் இல்லை என்று நாம் நினைப்போம். ஆனா சில ஆர்கானிக் வகைகளுக்கு ஷெல்ஃப்லைப் இருக்கு. உணவுப்பொருட்கள் மாதிரியே சில இயற்கையான துணிவகைகளுக்கும் ஷெல்ஃப் லைப் இருக்கு,” என்கிறார் சுதா.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவைகளையும் சௌகரியத்தையும் கருத்தில் கொண்டு செயற்கை துணிவகைகளைத் தேர்வு செய்தாலும் அவர்களது ஆடைத்தொகுப்பில் குறைந்தபட்சம் பத்தில் மூன்றாவது இயற்கையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறார்.
வலைதள முகவரி: Mudhra Trends