மண்புழு உரம் தயாரிப்பு மூலம் வருமானம் ஈட்ட உதவும் இயற்கைக் காதலர்!
கிராமப்புறப் பெண்கள் வேலைவாய்ப்பு பெறவும் விவசாய நிலத்தின் வளத்தை மீட்டெடுக்கவும் மண்புழு உரம் உற்பத்தி மற்றும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் வேலூரைச் சேர்ந்த வேளாண் அதிகாரி ராமமூர்த்தி.
திருமணத்திற்கு பிறகு பெண்கள் வீட்டு வேலைகளிலேயே மூழ்கி தங்களை தொலைத்துக் கொண்டு இருந்தனர். வெளியே வந்தால் தான் வேலை என்று இருந்த காலம் மாறி ஐடி கம்பெனி முதல் இன்று பல்வேறு துறைகளிலும் இருக்கும் வொர்க் ஃபர்ம் ஹோம் வாய்ப்பு பெண்களை நல்ல இல்லத்தரசிகளாகவும் அதே சமயம் பகுதி நேர பணியாற்றி வருமானம் பெறுபவர்களாகவும் மாற்றி இருக்கிறது.
இந்த வாய்ப்புகள் எல்லாம் நகர்ப்புற பெண்களுக்கு மட்டும் தானே என்று நீங்கள் நினைக்கலாம். கிராமப்புற பெண்களும் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டே வருமானம் ஈட்ட முடியும் என புதிய வாய்ப்புக்கள் தற்போது வரத்தொடங்கியுள்ளது.
அதில் ஒன்றாக மண்புழு உரம் தயாரிப்பதில் பயிற்சி எடுத்து செய்து வந்தால் மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் நிச்சயம் சம்பாதிக்கலாம் என்று ஆணித்தரமாக கூறுகிறார் இதற்கான பயிற்சியை வழங்கும் அரசு அதிகாரி ராமமூர்த்தி.
வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தியின் குடும்பம் விவசாயக் குடும்பம். மானாவரிப் பயிர் விவசாயம் பார்த்து வந்த தந்தை விவசாயத்தில் சந்தித்த இடர்பாடுகளை களைய விஞ்ஞான அறிவியலும் தேவை என்பதை உணர்ந்து விவசாயத்தில் டிப்ளமோ படித்து முடித்து தமிழக அரசின் வேளாண்துறையில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார்.
விவசாயம் படித்தோம் அரசுப் பணி கிடைத்துவிட்டது செட்டில் ஆகிவிடலாம் என்று வாழ்க்கையை குறுகிய வட்டத்திற்குள் நிறுத்திக் கொள்ளாமல் படிப்பறிவையும், அனுபவத்தையும் வைத்து இயற்கை விவசாயத்திற்கு உரமூட்டும் விதமாக மண்புழு உரம் தயாரிப்பை ’வெர்மிரிச்’ (Vermirich) என்ற நிறுவனத்தின் பெயரில் உற்பத்தி செய்து வருகிறார்.
இயற்கை விவசாயத்திற்கான புரட்சியை தமிழக மண்ணில் ஏற்படுத்திய நம்மாழ்வாருடன் விவசாயம் காக்கும் நடைப்பயணத்தில் நானும் பங்கேற்றிருக்கிறேன். விவசாயம் தான் நம் மூச்சு அதனை மறந்து வாழ்தல் என்பது முடியாத காரியம் எனவே இயற்கை விவசாயத்தில் என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதாலேயே மண்புழு உரம் தயாரிப்பை கையில் எடுத்தேன் என்கிறார் ராமமூர்த்தி.
2006ம் ஆண்டு வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் சிறிய அளவில் மண்புழு உரம் தயாரிப்பு யூனிட்டை தொடங்கியுள்ளார். பசுவின் சாணம், எருக்கை இலை, ஆவாரை இலை, பசுமைக்கழிவுகளை பதப்படுத்தி அவற்றில் மண்புழுக்கள் உருவாக்கி உரத்தை அறுவடை செய்வது என ஒவ்வொன்றையும் கருவில் இருக்கும் குழந்தை முழு வளர்ச்சியடைந்து மண்ணிற்கு வந்து சேருவது போல கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார் ராமமூர்த்தி. மண்புழு உரத்தை 30 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்து இந்த பசுமை உரத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கிறார்.
நோய்எதிர்ப்பு சக்தி குறைவு, எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாத ஆரோக்கியம் என இந்தத் தலைமுறை ஆரோக்கிய போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் விஷத்தன்மையுள்ள உணவுகளை நாம் உட்கொள்ளத் தொடங்கியதே. களைக்கொல்லி, பூச்சிக்ககொல்லி, ரசாயன உரம் போட்டு உருவாகும் விளைபயிர்கள் தந்த பரிசு கட்டுக்கடங்காத நோய்களும், கட்டுபாடுகளில்லாத மருந்து, மாத்திரைகளையுமே. இந்த நிலை மாற வேண்டுமானால் இயற்கை வழி விவசாயம் மட்டுமே ஒரே வழி, என்கிறார்.
இயற்கை வழியில் நிலத்தை பண்படுத்த மண்புழு உரமே ஆதாரம், ஏனெனில் மண்ணிற்கான தாய்ப்பால் மண்புழு உரம் மட்டுமே புட்டிப்பாலான உரங்களை தவிர்த்து பசுமை உரத்தை விவசாயிகள் பயன்படுத்தி மண்ணுக்கான ஆக்சிஜனை கொடுக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்தே வெர்மிரிச் உற்பத்தி மையத்தை தொடங்கியதாகக் கூறுகிறார் ராமமூர்த்தி.
2006ம் ஆண்டில் சிறு யூனிட்டாக தொடங்கி மாதத்திற்கு 5 டன் மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்த ராமமூர்த்தி. தொடர்ந்து 13 ஆண்டுகளாக இதே பணியை கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கம் செய்து தற்போது திருப்பத்தூரில் மட்டும் 3 யூனிட், ஏலகிரியில் 1 யூனிட் என மொத்தம் 4 யூனிட்களில் மாதத்திற்கு 22 டன் மண்புழு உரம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அளித்து மண்வளம் காத்து வருகிறார். ராமமூர்த்தி மனைவியின் மேற்பார்வையில் இந்த யூனிட்டுகளில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் மண்புழு உரம் உற்பத்தியை செய்து வருகின்றனர்.
பிறந்த குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் முக்கியமோ அப்படித் தான் மலட்டுத் தன்மையான மண்ணிற்கு மண்புழு உரம் முக்கியம். இயற்கை உரத்திற்கு மாற்றாக எந்த செயற்கை உரத்தை போட்டாலும் மண்ணின் வளத்தை காக்க முடியாது என்று தீர்க்கமாகச் சொல்கிறார் ராமமூர்த்தி.
வளமான மண்ணிற்கு மண்புழு உரம் அவசியம் இதனோடு இடுபொருள்களாக வேம்புச் சாறு, பஞ்சகவ்யா உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் மண்ணை நிச்சயம் வளப்படுத்தலாம், மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களை ஊக்கப்படுத்தினாலே அதன் மலட்டுத்தன்மை மாறிவிடும் என்று தீர்மானமாக கூறுகிறார் ராமமூர்த்தி.
இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மண்புழு உரம் தயாரிக்கும் மையத்தை அமைத்த ராமமூர்த்தி, இதனை ஒரு பயிற்சி மையமாகவும் செயல்படுத்தி வருகிறார். இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள், பட்டப்படிப்பு படிக்கும் விவசாய மாணவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பது எப்படி என்ற பயிற்சியை அளித்து அவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்குகிறார். இந்த பயிற்சிகளை கட்டணமின்றி சேவையாக செய்து வரும் ராமமூர்த்திக்கு கிடைக்கப் போகும் அங்கீகாரம் விரைவில் இந்த மையம் அரசின் பயிற்சி மையமாக மாற்றப்பட இருக்கிறது.
கிராமங்கள் தோறும் மண்புழு உரம் தயாரிப்பு மையங்களை அமைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறார் ராமமூர்த்தி. கிராமப்புற பெண்களும் மண்புழு உரம் தயாரிப்பதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்று சொல்லும் அவர், கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் பசு மாடுகள் இருக்கின்றன. இவற்றின் சாணத்தை எருவாக்கி பயன்படுத்துவதை விட பச்சை சாணத்தை வைத்து மண்புழு உரம் தயாரித்தால் விவசாயத்திற்கும் பயனாக இருக்கும் அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைப்பதோடு, உபரி வருமானமாகவும் இருக்கும் என்கிறார்.
மண்புழு தயாரிப்பு கிடங்கு அமைக்க 30 அடி நீளம், 22 அடி அகலம் இடம் தேவைப்படும், இந்த கிடங்கில் மாதத்திற்கு 22 டன் மண்புழு உரம் தயாரிக்க முடியும். தோராயமாக இந்த கிடங்கு அமைக்க ரூ. 14 லட்சம் செலவாகும் என்கிறார் ராமமூர்த்தி.
மண்புழு உரம் தயாரித்து விற்பனை, பயிற்சி என்று மட்டும் நின்றுவிடாமல் உரம் தயாரிப்பு மையம் அமைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு அவர்கள் இடத்திற்கே சென்று அருகில் இருந்து கட்டுமானம் முதல் முதன்முதலாக உரம் தயாரித்து மண்புழு உரம் அறுவடை செய்யும் வரை தானே முன் நின்று செய்து தருகிறார் ராமமூர்த்தி. அதன்பிறகும் கூட உரம் தயாரிப்பு எப்படி இருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து உற்பத்தியாளர்களின் சந்தேகங்களுக்கு தொலைபேசியிலேயே விளக்கமும் தருகிறார்.
சர்க்கரை வியாதியை விட புற்றுநோய்கள் அதிகம் தாக்க முக்கியக் காரணம் விளைநிலத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும் என்று மூளைச்சலவை செய்து தெளிக்கப்படும் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் தான் என்று உறுதியாக சொல்லும் ராமமூர்த்தி.
நோய்களற்ற சமூகத்திற்கான ஒரே தீர்வு இயற்கை விவசாயம் மற்றும் உணவுகளே என்கிறார். ரசாயன உரம் வேண்டாம் என இயற்கை விவசாயத்திற்கு வருபவர்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டும், விளைச்சல் கிடைக்காது என்று தவறான தகவல்கள் விவசாயிகள் மத்தியில் பறப்பப்டுகிறது.
100 கிலோ யூரியா போட வேண்டிய நிலத்தில் அதே அளவு மண்புழு உரம் போடுவதால் விளைச்சலில் எந்த பாதிப்பும் இருக்காது. இயற்கை விவசாயம் பற்றி முழுவதும் அறிந்து கொள்ளாமல் அரைகுறையாக பின்பற்றுவதே மகசூல் குறைவிற்குக் காரணம். இயற்கை விவசாயத்தில் கால்பதித்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் பார்க்கும் போது விவசாயியால் ஏன் முடியவில்லை என்பதை சிந்திக்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் இயற்கை விவசாயத்தை முறையாகவும் விஞ்ஞான ரீதியிலும் செய்வதால் மகசூல் பாதிப்பின்றி தரமான விளைப்பொருட்களை கொடுக்கின்றன. தமிழகத்தில் இயற்கை விவசாயம் பற்றி கற்றுத் தர போதுமான ஆட்கள் இல்லாததே இயற்கை விவசாயம் பலன் கொடுக்காது என்று பலரும் கைகழுவிவிட்டு போவதற்கான காரணம் என்கிறார் ராமமூர்த்தி.
இயற்கை விவசாயம் பற்றிய புரிதலே விவசாயிக்கு இல்லை, ரசாயன உரம் போட்டால் தான் விளைச்சல் இருக்கிறது என்று நிறுவனங்கள் விவசாயிகள் மனதில் விதைத்து விட்டதால் அதே மனநிலையே இன்றும் நீடிக்கிறது. பூச்சிக்கொல்லி போட்டு பூச்சிக்களை கொல்வதாக நினைத்து விவசாயத்திற்கு உதவியான இருந்த பூச்சிகள் பலவற்றையும் விவசாயிகள் அழித்து விட்டனர். இயற்கை விவசாயத்தை முறையாக செய்பவர்களுக்கு நிச்சயம் 100 சதவிகிதம் விளைச்சல் கொடுக்க முடியும்.
ரசாயன உரத்தில் இருந்து நாங்கள் உற்பத்தி செய்யும் மண்புழு உரத்திற்கு மாறிய விவசாயிகள் 30 சதவிகிதம் அதிக விளைச்சலை எடுத்துள்ளனர். பரிஷார்த்த ரீதியில் இதனை செய்து பார்த்த விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இயற்கை விவசாயத்திற்கு மாறிய விவசாயிகளின் வெற்றிக்கதைகளை சேகரித்து வரும் ராமமூர்த்தி இவர்களை முன்னோடியாக வைத்து மற்ற விவசாயிகளுக்கும் ஊக்கம் தர திட்டமிட்டுள்ளார்.
இயற்கை என்றுமே மனிதனை வஞ்சிக்காது அதனை அதன் போக்கிலேயே விட்டால் அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
தங்கமுட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்த்த கதை தான் விளைச்சலுக்கு ஆசைப்பட்டு ரசாயனம் தெளிப்பது. இயற்கை விவசாயம் விளைச்சல் தராது என்று சில விவசாயிகள் நம்புவது உண்மையானால் நாங்கள் தயாரிக்கும் மண்புழு உரத்திற்கு சந்தையில் மவுசு இருக்காது. ஆனால் நிதர்சனம் என்னவென்றால் நாங்கள் உற்பத்தி செய்யும் மண்புழு உரம் அறுவடை முடிந்த கையோடு விவசாயி வந்து வாங்கிச் சென்று விடுகிறார். சொல்லப்போனால் பற்றாக்குறைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாமல் தவிக்கிறோம் என்கிறார் ராமமூர்த்தி.
தனக்கு இருக்கும் ஆசையெல்லாம் கிராமங்களில் வீடுகள் தோறும் மண்புழு உரம் தயாரிப்பு மையம் அமைத்து விவசாயிகளின் சொந்த பயன்பாட்டிற்கோ அல்லது விற்பனைக்கோ அளிக்கலாம் என்பது தான் அதனை நோக்கியே பணியாற்றி வருகிறார். தற்போது ஒரு டன் மண்புழ உரத்தை ரூ.12,000 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறார் இவர்.
“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்பதை மறவாமல் இயற்கை விவசாயம் காப்போம், நம் தலைமுறை காப்போம், என்கிறார் ராமமூர்த்தி.