சிறிய அறையில் தொடங்கிய சானிட்டரி பேட் தொழில்; நயன்தாரா முதலீட்டில் 'Femi9'ஆகி 100 கோடி டர்ன்ஓவர் செய்யும் கோமதி!
உடலுக்கு தீங்கு விளைவிக்காத, தரமான சானிட்டரி நாப்கின்கள் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கும் ஈரோட்டைச் சேர்ந்த Femi ப்ராண்ட் நிறுவனர் கோமதி, உடன் நயன்தாரா இணைந்து ‘Femi9’ என பெயர் மாற்றி அறிமுகம் செய்துள்ளார். இந்த ப்ராண்ட் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்வது எப்படி என பார்ப்போம்.
வீட்டிற்கு தூரம்... அதாங்க மாதவிலக்கு என்றால் நிஜமாகவே பெண்களை வீட்டில் இருந்து தூரமாக ஒதுக்கி வைக்கும் மனநிலை பெரும்பான்மையான மக்கள் மத்தியில் மாறி விட்டது. பீரியட்ஸ் என்ற வார்த்தையையே வெளியில் பெண்களே சொல்லக் கூச்சப்பட்ட சூழல் மாறி, ஆண்களே அதுபற்றி சமூகவலைதளங்களில் சத்தமாகப் பேசும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
மாதவிடாய்க்காக துணி பயன்படுத்திய பெண்கள், நாப்கின் பயன்படுத்தியது ஆரோக்கியத்தின் அடுத்தகட்டமாகக் கருதப்பட்ட காலம் போய், இப்போது தொழில்போட்டி காரணமாக அந்த நாப்கின்களே பெண்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பொருளாக மாறி வருகிறது.
எனவே, சந்தையில் தரமான நாப்கின்கள் கிடைக்காதா என ஏங்கித் தேடியவர்களுக்கு கிடைத்த கண்டுபிடிப்புதான்
நாப்கின்கள்.ஈரோட்டைச் சேர்ந்த டாக்டர் கோமதி என்பவர் கடந்த 16 வருடங்களாகத் தயாரித்து விற்பனை செய்து வரும் இந்த ஃபெமி நாப்கின்கள், கடந்தாண்டு நடிகை நயன்தாராவுடன் இணைந்து கொண்டதில் இருந்து 'Femi9' ஆக மாறி, மக்கள் மத்தியில் முன்பைவிட இன்னும் வேகமாக, அதிகமாகச் சென்று சேர்ந்துள்ளது.
ஃபெமி உருவான கதை
“நான் 10வது வரை மட்டுமே படித்துள்ளேன். 15 வயதில் திருமணம் நடந்து விட்டது. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு குடும்பத்தில் திடீர் எனப் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டது. குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், குடும்பச் செலவிற்குப் பணம் வேண்டும், அதற்கு நான் ஏதாவது ஒரு தொழிலைச் செய்தாக வேண்டும் என்ற நிலை உண்டானது.
எனவே, மளிகைக்கடை, துணி வியாபாரம், மாவு அரைத்து விற்பது என எனக்குத் தெரிந்த தொழில்களையெல்லாம் செய்யத் தொடங்கினேன். ஆனால், அவற்றில் எனக்கு ஆத்ம திருப்தி ஏற்படவில்லை. நான் செய்யும் தொழில் எனக்கு வருமானத்தை ஈட்டித் தருவதாக மட்டும் இல்லாமல், மக்களுக்கு நன்மை செய்வதாகவும் இருக்க வேண்டும் என்ற சிந்தனை அப்போதுதான் உதித்தது.
அந்த சமயத்தில்தான் ஃபெமியின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. எனது உறவினர்கள் மூலம் மலேசியாவில் இருந்து நான் பயன்படுத்துவதற்காகத்தான் முதலில் ஃபெமியை வாங்கினேன்.
"வாங்கிப் பயன்படுத்தியபிறகு அதன் தரம் எனக்குப் பிடித்துப் போகவே, நாமும் இதேபோல் தயாரித்து நம் பெண்களுக்கு விற்பனை செய்தால் என்ன என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அப்படி 2008ம் ஆண்டு ரூ.20 லட்சம் முதலீட்டில் உருவானதுதான் எனது ஃபெமி என்ற சானிட்டரி நாப்கின் வியாபாரம்,” என தன் ஆரம்ப நாட்களை நினைவு கூர்கிறார் கோமதி.
தான் பயன்படுத்தியதுமே அதனை விற்பனைச் செய்யத் துவங்கிவிடவில்லை கோமதி. அந்த நாப்கின்களை பல ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள நல்ல விசயங்கள் உண்மைதானா என தானும் ஆராய்ந்து உறுதி செய்துள்ளார். அவை அனைத்திலும் நல்ல முடிவுகளே கிடைக்க, முழு திருப்தியுடன் இந்தத் தொழிலில் இறங்கியுள்ளார் அவர்.
மிகச் சிறந்த கண்டுபிடிப்பு
“ஃபெமிக்கு முன்பு வரை மார்க்கெட்டில் லீடிங்கில் இருந்த ஒரு பிராண்டைத்தான் பயன்படுத்தி வந்தேன். ஆனால், அதைவிட ஃபெமி நன்றாக இருக்கவே, அதைப் பற்றி மேலும் விசாரித்தேன். அப்போதுதான், அது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு என எனக்குத் தெரிய வந்தது. ஜெர்மனி டாக்டர்கள்தான் இந்த நாப்கினைக் கண்டுபிடித்தவர்கள். உடனே கிளம்பி நேரடியாகவே அந்த டாக்டர்களைச் சந்தித்து, அதன் பேட்டன்ட்களை வாங்கினேன்.
”மார்க்கெட்டில் உள்ள நாப்கின்களில் அதிகளவு கெமிக்கல்கள் கலந்துள்ளன. முன்பைவிட இப்போது சிறுமிகள் மிக வேகமாகவே பூப்பெய்து விடுகின்றனர். ஐந்தாவது, ஆறாவது படிக்கும் குழந்தைகூட பூப்பெய்தியதாக கேள்விப்படும் போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. மாதத்திற்கு குறைந்தபட்சம் பத்து நாப்கின்கள் எனக் கொண்டால், ஒரு பெண் மாதவிடாய் நிற்கும் வரை எத்தனையோ ஆயிரம் நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.”
”ஆனால், வியாபாரப் போட்டி காரணமாக நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும் எனக் கூறி, தரமற்ற நாப்கின்களை விற்பனை செய்கின்றனர். இதனைப் பயன்படுத்துவதால் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினை, குழந்தைப் பேறு தள்ளிப் போதல் எனப் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் எங்கள் ஃபெமி9ல் அப்படியில்லை. ஒரு நாளைக்கு ஒரு நாப்கின் மட்டுமே பயன்படுத்தினால்கூட போதுமானது. அது உடலுக்கும் தீங்கு விளைவிக்காது,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் கோமதி.
பார் இன்ஃப்ராரெட் டெக்னாலஜி
ஃபெமி நாப்கின்களில் மொத்தம் 9 லேயர்கள் உள்ளன. அவை அனைத்தும் சர்ஜிகல் காட்டனால் ஆனவை. ஆபரேஷன் தியேட்டர்களில் எவ்வளவு தூய்மையாக பொருட்களைக் கையாள்வார்களோ அந்தளவிற்கு, தூய்மைக்கும், சுகாதாரத்திற்கும் முன்னுரிமை கொடுத்து ஃபெமி9 நாப்கின்களைத் தயாரிப்பதாக கோமதி கூறுகிறார்.
“இது ஒருவகை கைத்தொழில்தானே என மற்றவர்கள் கருதி விடாத அளவிற்கு, நாப்கின்கள் தயாரிக்கும் இடங்களில் சுகாதாரத்தைப் பேணுகிறோம். Femi9-இல் இருக்கும் 9 லேயர்களிலும் காற்றோட்டம் இருக்கும். இது மாதவிடாயினால் துர்நாற்றம் வராமல் இருக்க உதவும். மிருதுவான லேயர்கள் மற்றும் லீக்கேஜ் இல்லாமல் இருப்பது, பேட் வைத்துள்ளோம் என்ற பீலீங்கே இல்லாமல் பெண்களை செயல்பட வைக்கும்,” என்று விளக்கினார் கோமதி.
பாக்டீரியாக்களால் பிரச்சினை
வழக்கமாக, நாம் மார்க்கெட்டில் கிடைக்கும் நாப்கின்களைப் பயன்படுத்தும் போது, 2- 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை மாற்ற வேண்டும். இல்லையென்றால், காற்று கலப்பதினால் மாதவிடாய் இரத்தத்தில் பாக்டீரியா உருவாகும். இது கர்ப்பப்பை மட்டுமின்றி இதர உள்ளுறுப்புகளிலும் நோயை உண்டாக்கக்கூடியது.
ஆனால், ஃபெமி9 பேடில் உள்ள ஆனையான் என்ற விசயம் இந்த பாக்டீரியாவை அழிக்கிறது. பார் இன்ஃப்ராரெட் டெக்னாலஜி மூலம் மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு ஏற்படும் மூட் ஸ்விங், சாப்பிட முடியாத நிலை, வாந்தி போன்றவற்றை மாற்றுகிறது. மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு தற்கொலை எண்ணம்கூட வருவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால்,
“பெமி9 பயன்படுத்தும் போது ஹார்மோன்கள் சந்தோசமாக இருக்கும். சமநிலையில் இருக்கும். இதில் இருக்கும் மேக்னடிக் தன்மை உற்சாகத்தைக் கொடுக்கும். நேனோ சில்வர் என்ற உள்ளே இருக்கும் உறுப்புகளை பாதுகாக்க உதவும்,” என ஃபெமி9ன் சிறப்பம்சங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார் கோமதி.
Femi டு Femi9
கடந்தாண்டு அக்டோபரில் தனது சமூகவலைதளப் பக்கம் மூலம் ஃபெமி9 பிராண்டை அறிமுகப்படுத்தினார் நடிகை நயன்தாரா. இதனால் குறுகிய காலத்தில் மேலும் பலரைச் சென்றடைந்தது இந்த நாப்கின்கள். தற்போது இந்த ப்ராண்டுடன் நேரடி தொழிலாளர்களாக 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிவது மட்டுமின்றி, தமிழகத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் டிஸ்ட்ரிபியூட்டர்களாகவும், 200 பெண்கள் ஸ்டாக்கிஸ்ட்களாகவும், 30 பேர் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்களாகவும் உள்ளனராம். இதுதவிர இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் மலேசியா, துபாய் உட்பட மற்ற நாடுகளிலும் இதேபோல் பெண்கள் டிஸ்ட்ரிபியூட்டர்களாகவும் உள்ளனராம்.
ஃபெமி எப்படி ஃபெமி9 ஆனது என்பது பற்றிக் கூறுகையில்,
“நான் ஃபெமியை ஆரம்பித்த நாட்களில் இந்தளவிற்கு சமூகவலைதள பக்கங்கள் வளர்ந்திருக்கவில்லை. பெரிய அளவில் வியாபாரம் செய்ய என்னிடம் அப்போது போதுமான பொருளாதார வசதியும் இல்லை. எனவே, பள்ளிகள், கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள், அபார்ட்மெண்ட்கள் என ஒவ்வொரு இடங்களாகச் சென்று நானே ஃபெமி குறித்து மக்கள் மத்தியில் பேசினேன். மாதவிடாய் குறித்து, தங்கள் சொந்த ரத்தமே தரமற்ற நாப்கின்கள் மூலம் பெண்களுக்கு எப்படி ஆபத்தாய் மாறுகிறது, ஃபெமிக்கு ஏன் மாற வேண்டும்? என்பதைக் குறித்தெல்லாம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் விரிவாக, ஆதாரப்பூர்வமாகப் பேசி வருகிறேன்.”
அப்படி ஒரு சில வருடங்களுக்கு முன்னர் கல்லூரி ஒன்றில் பேசியபோதுதான், நயன்தாரா மேடமின் குழுவினர் அங்கு வந்திருந்தனர். அங்கு நான் பேசியதைக் கேட்டு அவர்கள்தான் ஃபெமியை மேடத்திற்கு அறிமுகம் செய்து வைத்தனர். அவரும் ஃபெமி நாப்கின்களை பல ஆய்வகங்களுக்கு அனுப்பி தேவையான ஆராய்ச்சிகளைச் செய்து பார்த்தார். அவரும் பயன்படுத்திப் பார்த்தார். அதன் முடிவில், ஃபெமி உண்மையிலேயே மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற நாப்கின்களில் இருந்து வேறுபட்டு தரமானதாக, பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது செய்யும் நாப்கினாக இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டார்.
”அதனைத் தொடர்ந்து, நாங்களும் உங்களுடன் இணைந்து கொள்கிறோம்... என எங்களுடன் நயன்தாரா மேடமும், விக்னேஷ் சிவன் சாரும் இணைத்துக் கொண்டார்கள். அதுவரை பெமி என்று இருந்ததை, மேடமின் பேரும் சேரும்படி, ஃபெமி 9 (Femi9) என மாற்றினோம். பெண்மயமான என்ற பொருளும் இந்தப் பெயருக்கு உண்டு. ஃபெமி9-ன் பேரிலேயே அனைத்து தகவல்களும் இடம்பெறும்படியான டிசைனை மேம்தான் செய்தார்கள்.”
ரூ.100 கோடி டர்ன்ஓவர்
நான் இந்தத் தொழிலில் இறங்கி மொத்தம் 16 வருடங்கள் ஆகின்றன. 20 லட்சம் முதலீடு செய்து வீட்டிலேயே ஒரு அறையில் ஆரம்பித்தேன். பிறகு வாடகை கட்டத்திற்கு அலுவலகத்திற்கு மாற்றினோம். இப்போது சொந்தக் கட்டிடத்தில் எங்கள் அலுவலகம் இயங்கி வருகிறது. முதல் 12 வருடங்கள் சொல்லிக் கொள்ளும்படி லாபம் இல்லை. ஆனாலும் மக்களிடம் நல்லதைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற மன உறுதியுடன் இதைத் தொடர்ந்து செய்து வந்தேன்.
”நயன்தாரா மேடம் ஃபெமிக்குள் வருவதற்கு முன்பு வரை மாதம் ஒரு லட்சம் என்ற அளவில் நாப்கின் தயாரிப்பு இருந்தது. இப்போது அது 10 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல், தற்போது ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் என்ற அளவில் செய்து வருகிறோம்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கோமதி.
பெண்களுக்கான நாப்கின்களைப் போலவே, குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் டயப்பர்களையும் தயாரிக்கும் வேலையில் தற்போது ஈடுபட்டுள்ளது ஃபெமி9. விரைவில் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான டயப்பர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.