Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சைக்கிள் கம்பெனி முதல்; இந்திய ஹாக்கி அணி வரை: நேஹாவின் நம்பிக்கை பயணம்!

ஒலிம்பிக் போட்டிகளில் தேர்வான 24 வயது வீராங்கனை!

சைக்கிள் கம்பெனி முதல்; இந்திய ஹாக்கி அணி வரை: நேஹாவின் நம்பிக்கை பயணம்!

Wednesday June 23, 2021 , 3 min Read

ஹரியானாவைச் சேர்ந்த, சாவித்ரி தேவி 13 ஆண்டுகளுக்கு முன்பு தனது மூன்று மகள்களில் இளைய மகளை ஒரு ஹாக்கி அகாடமியில் சேர்த்தார். எதற்காக என்றால் ஹாக்கி பயிற்சி பெறும் நேரத்தில் சேட்டைக்கார சிறுமியான அந்த இளைய மகளின் தொந்தரவில் இருந்து சிறிது நேரம் தப்பிக்க முடியும் என்பதால்தான்.


அப்படி ஹாக்கியில் சேர்க்கப்பட்ட அந்த மகள், இப்போது உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக முதல்முறையாக ஆட இருக்கிறார். அடுத்த மாதம் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்காக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட 16 பேரைக் கொண்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் சாவித்ரி தேவி இளைய மகளான 24 வயதான நேஹா கோயல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தாய் சாவித்ரி தேவி மற்றும் சகோதரி உடன் ரூ.2000 சம்பளத்திற்காக வேலை பார்க்கும் சைக்கிள் கம்பெனி முதல், இந்திய பெண்கள் ஹாக்கி அணி வரையிலான நேஹா கோயல் பயணம் நம்ப முடியாத ஒன்றாகும். அர்ஜுனா விருது பெற்றவரும், 2002 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிரிதம் சிவாச் தான் நேஹா கோயலின் பயிற்சியாளர். 46 வயதான சிவாச், சோனேபட்டில் ஒரு ஹாக்கி அகாடமியை நடத்தி வருகிறார்.


அவர், நேஹாவை பற்றி பேசுகையில்,

“நேஹாவுக்கு 11 வயதாக இருந்தது. அவள் அதிகம் பேச மாட்டாள். எனவே ஒரு நாள், நான் அவளுக்கு ஒரு ஸ்கிப்பிங் கயிற்றை கொடுத்து விளையாடச் சொன்னேன். அந்த தருணத்தில் அவளிடம் தென்பட்ட திறன் தான், ‘ஏன் அவளுக்கு ஹாக்கி கற்பிக்க முயற்சிக்கக்கூடாது?' என்று என என்னை எண்ண வைத்தது. நான் அவளுடைய பெற்றோரை சமாதானப்படுத்த விரும்பினேன், அதனால் நான் அவளுடைய வீட்டிற்குச் சென்றேன், அது அகாடமியிலிருந்து வெகு தொலைவில் இல்லை," என்றுள்ளார்.
நேஹா

பயிற்சியாளர் வீட்டுக்கு வர நினைத்தாலும், நேஹாவை அவரை அழைக்க விரும்பவில்லை. ஏனென்றால் அவரின் வீட்டின் நிலை அதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. ஒரு சிறிய, மங்கலான லைட் மட்டுமே கொண்ட அறை, ஒரு மூலையில் ஒரு மர பிளாங்கில் ஒரு சிறிய டிவி, மறுபுறம் ஒரு தற்காலிக சமையலறை, மற்றும் ஒரு கட்டில் இது தான் நேஹாவின் வீடு. அதுவும் சாக்கடை கால்வாய் அருகே வீடு. இந்த வீட்டில் ஐந்து பேர் வசித்து வந்துள்ளனர். இப்படி ஏழ்மை நிலையில் இருந்து வந்தவர் நேஹா. போதாக்குறைக்கு தந்தையின் குடிப்பழக்கம் வேறு.


சில ஆண்டுகளுக்கு முன்பு தான் நேஹா தந்தையை இழந்துள்ளார், என்றாலும் ஹாக்கி விளையாட்டைத் தொடர்ந்துகொண்டே, சகோதரிகளுக்கும், தாய்க்கும் உதவி வந்துள்ளார். நேஹாவின் நிலையை அறிந்து, பயிற்சியாளர் நேஹாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு சென்று, அவருக்குத் தேவையான உபகரணங்கள், உணவு என அனைத்து உதவிகளையும் வழங்கியிருக்கிறார். நேஹாவின் வறுமை நிலைக்கு ஒரு உதாரணத்தை விளக்குகிறார் பயிற்சியாளர் சிவாச்.

”ஒருமுறை, நாங்கள் குர்கானில் மாநில அளவிலான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். முதல் பாதியில் நேஹாவால் அதிகம் ஓட முடியவில்லை. நான் அவளிடம் காரணம் கேட்டேன். அதற்கு அவள் வெளிப்படுத்திய பதில், அவள் ஷூவில் இருந்த ஒரு பெரிய துளை. பின்னர், இடைவேளை நேரத்தில் என் கணவர் குல்தீப் அருகிலுள்ள கடைக்குச் சென்று ஷூவை வாங்கி வந்தார். அதன்பின் வேகமாக ஓடவும் செய்தார். இரண்டு கோல்களும் அடித்தார் நேஹா," என்று நினைவலைகளை பகிர்கிறார்.

கோல் அடிப்பதுடன், வேகமாக ஓடும் திறன்தான் நேஹாவை விரைவாக அணிகளில் இடம்பெற வைத்தது. தற்போது, இந்திய அணியிலும் இடம்பெறவைதுள்ளது.

நேஹா

இப்போது சொல்லுங்கள், நேஹாவின் பயணம் நிச்சயம் ஊக்கம் தரும் ஒன்றுதானே. தற்போது, ஓரளவு பொருளாதார வசதியில் முன்னேறியுள்ள நேஹா தனக்குக் கிடைக்கும் வருமானத்தில் சிலவற்றை, அகாடமிக்கு நிதியுதவியாக கொடுக்கிறார்.


மேலும், அவர் விளையாடும் கிட், காலணிகள் மற்றும் ஹாக்கி குச்சிகளை கூட நன்கொடையாக வழங்குகிறார். சமீபத்தில், அவரும் அவரது தாயாரும் பழைய வீட்டை காலி செய்துவிட்டு, டெல்லி-சண்டிகர் நெடுஞ்சாலையில் சோனேபட்டில் ஒரு உயரமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு குடிபெயர்ந்தனர்.


இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், புதிதாக இடம்பெயர்ந்துள்ள வீட்டில் சில அறைகளை நேஹா, ஹாக்கி அகாடமியில் பயிற்சி பெரும் வீரர்கள் தங்குவதற்காக ஒதுக்கியுள்ளார். தன்னை போன்று யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இந்த உதவியை செய்துள்ளார் நேஹா.

Background Image