WFH, Zoom, OTT, சமூக இடைவெளி என 2020ல் நாம் பின்பற்றிய புதிய போக்குகள்...
இணைய கல்வி முதல், இல்லத்தில் இருந்து அலுவலக பணி வரை, வீடியோ சந்திப்பு முதல் ஓடிடி வரை 2020 ம் ஆண்டில் இயல்பு வாழ்க்கையில் இரண்டற கலந்த தொழில்நுட்ப போக்குகள் குறித்து ஒரு பார்வை.
இயல்பு நிலை என்பது மாறி ’புதிய இயல்பு’ பற்றி பேச வைத்த ஆண்டாக 2020 அமைகிறது.
கொரோனா பெருந்தொற்று உண்டாக்கிய இந்த புதிய இயல்பு நிலை தான் இப்போதைக்கு தொடரும் என்பதும் புரிந்திருக்கிறது. வைரஸ் அச்சம் உச்சத்தை தொட்ட நிலையில், பொதுமுடக்கம் காரணமாக பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டியிருந்த சூழலில், வீடியோ சந்திப்பு நுட்பமும், வீட்டில் இருந்தே பணியாற்றும் கருத்தாக்கமும் கைகொடுத்தன.
அதோடு இ-லேர்னிங் எனப்படும் இணைய வழி கல்வியும் பிரபலமானது. இதனிடையே பொழுதுபோக்கு நோக்கில், ஓடிடி மேடைகளும், அவற்றின் வெப்சீரிஸ்களும் கவனத்தை ஈர்த்தன.
இப்படி, 2020ம் ஆண்டில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் ஆசுவாசம் அளித்த தொழில்நுட்பப் போக்குகளைப் பார்க்கலாம்:
ஒர்க் பிரம் ஹோம் (WFH)
இணையத்தில் எத்தனையோ சுருக்கெழுத்து சொற்கள் பழக்கத்தில் இருக்கின்றன என்றாலும் இந்த ஆண்டு துவக்கத்தில் WFH எனும் சுருக்கெழுத்தை தான் எல்லோரும் உச்சரிக்கத் துவங்கினர்.
வீட்டில் இருந்தே பணியாற்றுவதை குறிக்க பயன்படும் ‘Work From Home' எனும் பதத்தின் சுருக்கமான WFH கொஞ்சம் பழைய கருத்தாக்கம் தான். ஆனால், இத்தனை ஆண்டுகளாக பெரிய வர்த்தக நிறுவனங்கள் தவிர வேறு யாரும் இதை அதிகம் கண்டு கொண்டதில்லை.
டெலி கம்யூட்டிங் (Telecommuting) என துவக்கத்தில் குறிப்பிட்டப்பட்ட இந்த கருத்தாக்கம் இணைய வசதி பிரபலமான காலத்தில், ‘ஒர்க் பிரம் ஹோம்’ என்றானது. அலுவலகத்திற்கு வராமலே வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு, நிறுவனங்கள், ஊழியர்கள் என இருத்தப்பினருக்குமே வரப்பிரசாதமாக அமையும் என சொல்லப்பட்டாலும், அதற்கேற்ப முழுவீச்சில் நடைமுறைக்கு வரவில்லை.
ஒர்க் பிரம் ஹோம் கருத்தாக்கத்தை அமல் செய்த நிறுவனங்களில் கூட, என்ன இருந்தாலும் நேரில் சந்தித்து பணி செய்வதற்கு ஈடாகுமா எனும் பாணி விவாதங்களே நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக பரவத்துவங்கிய போது, அலுவலகம் வந்து பணியாற்றுவது பாதுகாப்பானது இல்லை என தெளிவாகியது. இந்த கட்டத்தில் தான் வர்த்தக நிறுவனங்களுக்கு ஒர்க் பிரம் ஹோம் சரியான வழியாக அமைந்தது.
ஆட்குறைப்பில் ஈடுபடாத நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களிடம் வீட்டில் இருந்தே வேலை பாருங்கள் என்றன. கம்ப்யூட்டர் அல்லது இணையம் மூலம் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளுக்கு இந்த வாய்ப்பு கச்சிதமாகப் பொருந்தியது. ஊழியர்களும் கூட, வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வாய்ப்பால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
வீடியோ சந்திப்புகள்- Video conferencing
ஒர்க் பிரம் ஹோம் போலவே, வர்த்தக உலகில், வீடியோ காம்பிரன்சிங் எனப்படும் வீடியோ வழி ஆலோசனைகளும் பிரபலமானது தான். இதற்கென மென்பொருள் சேவைகள் பல இருக்கின்றன என்றாலும், வீடியோ சந்திப்பு வசதி என்பது ஏதோ நமக்கு தொடர்பில்லாத தொழில்நுட்ப விஷயம் என்றே தான் பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், கொரோனா இந்த நிலையை தலைகீழாக மாற்றி சாமானியர்கள் மத்தியிலும் வீடியோ சந்திப்பு வசதியை பழக்கத்திற்குக் கொண்டு வந்தது. நேரில் சந்திக்க முடியாத நிலையில், வெப்கேம் வழியே பேசிக்கொள்ளலாம் என்பதும், இதற்கு ஜூம் போன்ற சேவைகள் வழி செய்கின்றன என்பதும் பெரும் ஆசுவாசம் அளித்தன. இதன் விளைவாக,
அலுவலக ஆலோசனைக் கூட்டங்கள் மட்டும் அல்லாது, இலக்கிய சந்திப்புகளும், நண்பர்களின் அரட்டைக்கச்சேரிகளும் கூட Zoom-க்கு மாறின. அதே வேகத்தில் வெபினார் எனப்படும் இணைய வழி பயிலரங்குகளும் பிரபலமாயின. எப்படி இணைய தேடலுக்கு கூகுள் மறுபெயராக விளங்குகிறதோ, அதே போல, வீடியோ வழி சந்திப்புகளுக்கான அடையாளமாக Zoom உருவானது.
இணைய வழி கல்வி- eLearning
கொரோனா சோதனைக்கு மத்தியில் பிரபலான இன்னொரு முக்கியக் கருத்தாக்கமாக இணைய வழி கல்வி அமைந்தது. ஆன்லைன் லேர்னிங் அல்லது விர்ச்சுவல் லேர்னிங் போன்ற பல பெயர்களில் குறிப்பிடப்படும் இணைய வழி கல்வி, இ-லேர்னிங் என அதிகார்ப்பூர்வமாக குறிப்பிடப்படுகிறது.
வகுப்பறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், இணையம் மூலமாக மாணவர்கள் கற்றுக்கொள்ளும் முறையே இ-லேர்னிங் எனப்படுகிறது. இந்த முறையில் எண்ணற்ற அணுகூலங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது.
தொலைதூரக் கல்வியின் நீட்சியாக கருதப்படும் இணைய வழி கல்வியின் அடுத்த கட்டமாக, மூக் (MOOC) எனப்படும் ’மேசிவ் ஆன்லைன் ஓபன் ஆன்லைன் கோர்ஸ்’ கருத்தாக்கம் அமைகிறது. MOOC பாடத் திட்டங்களில் சேர்ந்து இணையம் வழியே படித்து பட்டம் பெறலாம் எனும் நிலை வந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூடிய போது, கல்வி நிறுவனங்கள் வேறு வழியின்றி இ-லேர்னிங் முறைக்கு மாறின. ஜூம் சந்திப்புகள் போலவே, கூகுள் மீட் மற்றும் கிளாஸ்ரூம், மைக்ரோசாப்ட் டீம்ஸ் வழியே ஆசிரியர்கள் தோன்றி பாடம் நடத்தினர். நம்மவர்கள் டியூஷன் வகுப்புகளையும் வீடியோ வழியே நடத்தத் துவங்கினர்.
இணைய வழிக் கல்வி ஏற்றத்தாழ்வுக் கவலையை ஏற்படுத்தினாலும், கொரோனா காலத்தில் கல்வி முடங்காமல் இருக்க இணைய வழி கல்வி கைக்கொடுப்பதை மறுக்க முடியாது.
வீட்டுக்கு வந்த தியேட்டர் – OTT
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த திரையரங்குகளையும், மால்களையும் மூட வேண்டியது தவிர்க்க இயலாததானது என்றாலும், இதனால் ஏற்பட்ட உளவியல் நெருக்கடியில் இருந்து மக்களைக் காப்பாற்றியது ஓடிடி மேடைகள் தான்.
ஸ்டிரீமிங் முறையில் இணையம் வழியே திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்களை பார்க்க வழி செய்யும், Over The Top எனச் சொல்லப்படும் OTT மேடைகள் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும், 2020ம் ஆண்டில் இந்த சேவைகள் வெகுஜனமயமாயின.
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நிலையில், பொழுதைக் கழிக்க பலரும் நாடியது நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி மேடைகளைத் தான்.
வீட்டிக்குள்ளே இருந்து படம் பார்க்க முடிந்ததோடு, இனி வெப்சீரிஸ்கள் தான் எதிர்காலம் என்றும் பேச வைத்தது. அதோடு, திரையரங்கில் ரிலீசாகாமல், திரைப்படங்களை நேரடியாக ஓடிடி மேடையில் வெளியிடுவது தொடர்பான விவாதமும் அனல் பறந்தது. இந்த விவாதத்திற்கு இடையே வெளியான பொன்மகள் வந்தால் படமும், சூரைப்போற்று படமும் புதிய வெளியீட்டு பாதையில் வந்தவை என்ற வகையில் முக்கியமானவை.
சமூக இடைவெளி- Social distancing
கைக்குலுக்குவது கூட ஆபத்தானது என கொரோனா சொல்ல வைத்தது. இந்த நெருக்கடியான நிலையில், விலகி இருந்தாலும், ஒன்றாக இருப்போம் என சொல்ல வைத்தது சோஷியல் டிஸ்டன்சிங் எனப்படும் சமூல இடைவெளி கருத்தாக்கம்.
பொது இடங்களில் பரஸ்பரம் ஆறு அடி விலகி இருப்பதன் மூலம், வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தலாம் எனும் பொது சுகாதார நெறிமுறையை எல்லோரும் பின்பற்றும் நிலை உண்டானது. நிலைமை சிக்கலானது தான், ஆனால் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் எளிதாகக் கையாளலாம் எனும் நம்பிக்கையையும் சமூக விலகல் சாத்தியமாக்கியது.
சமூக விலகல் பல இடங்களில் காற்றில் பறக்க விடப்பட்டாலும், இன்னும் சில காலத்திற்கு இதுவே நமக்குப் பாதுகாப்பு வேலியாக இருக்கும் என்பதை மறக்கக் கூடாது. இதே போலவே, நோய்த்தொற்றின் மூலத்தை கண்டறிந்து தனிமைப்படுத்தலை மேற்கொண்டு, தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவிய காண்டாக்ட் டிரேசிங் நுட்பமும் பரவலாக பின்பற்றப்பட்டது.