கார்ப்பரேட் பணியை விட்டு உள்ளூர் சமூகத்தினருக்கு உதவிடும் ஆதர்ஷ்!
ஆதர்ஷ் கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
கர்நாடகாவின் கும்தா பகுதியில் உள்ள கடற்கரை நகரத்தில் நான் காலடி எடுத்து வைத்ததும் நுரையுடன்கூடிய அழகான அலைகள் என்னை வரவேற்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முனைப்புடன் அங்கு செயல்படும் நிறுவனம் ஒன்று என்னை வெகுவாகக் கவர்ந்தது.
அந்த நிறுவனத்தின் பெயர் பஞ்சபூதா கன்சர்வேஷன் ஃபவுண்டேஷன். ஆதர்ஷ் பட் இங்கு நடைபெறும் பணிகளை மேற்பார்வையிடுகிறார். இவர் தனது கார்ப்பரேட் பணியை விட்டு விலகி இந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதே இவரது நோக்கம். இவர் தனது பயணம் குறித்து பகிர்ந்துகொண்டார்.
கேரளாவின் காசர்கோட் பகுதியில் வளர்ந்த ஆதர்ஷ் மங்களூரைச் சேர்ந்தவர். ஆந்திராவில் உள்ள ரிஷி வேலி பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். அதன் பிறகு ஜெய் ஹிந்த் கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். ரெசிடென்ஷியல் பள்ளியில் பயின்றபோதே சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை அவருக்கு பரிச்சயமானது.
கல்லூரியில் பயின்ற சமயத்திலேயே Parthenon குழுமத்தில் அவருக்குப் பணி கிடைத்தது.
“இந்தப் பணி மூலம் தேவையான வருவாயை என்னால் ஈட்டமுடிந்தது. பட்டப்படிப்பை முடித்து கூகுளில் பணி கிடைப்பதற்கு முன்பே தேவையான பணி அனுபவம் எனக்குக் கிடைத்தது,” என்று ஆதர்ஷ் நினைவுகூர்ந்தார்.
கூகுள் நிறுவனத்தில் Adwords துறையில் பணி கிடைத்தது. ஆனால் இந்த வாய்ப்பு அவருக்கு திருப்தியளிக்கவில்லை. இதன் மூலம் சுதந்திரமாக செயல்படமுடியாது என்று தோன்றியதால் அந்தப் பணி வாய்ப்பை நிராகரித்துவிட்டு ஃபெலோ ப்ரோக்ராமில் இணைந்தார். 21 வயதில் ஒரிசாவின் கிராமப்புறத்திற்குச் சென்றார். அங்கு 13 மாதங்கள் தங்கியிருந்தார். இருவேறு என்ஜிஓ-க்களுடன் பணியாற்றினார்.
பின்னர் உத்தர்கண்ட் பகுதிக்கு மாற்றலானார். அந்த சமயத்தில்தான் அந்தப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரிடராக அது அமைந்தது.
“நான் உத்தர்காண்ட் பகுதியில் ஓராண்டு வசித்தேன். நிவாரணம் வழங்குவதையும் தாண்டி இந்த மோசமான பேரிடர் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து திட்டமிட்டேன். சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையும் ஊதுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைத்து வேலை வாய்ப்பு உருவாக்கினேன். ஐந்து ஊழியர்களுடன் தொடங்கப்பட்டு இன்று 70-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்,” என ஆதர்ஷ் விவரித்தார்.
ஆதர்ஷ் சில ஆண்டுகள் பாறை மீது ஏறுதல், ஸ்லாக்லைனிங் போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தார். பஞ்சபூதா வளாகத்திலும் மரங்களில் கயிறு கட்டி அவ்வப்போது பயிற்சி செய்து வருகிறார்.
பஞ்சபூதம்
கும்தாவில் உள்ள நிர்வனா கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பஞ்சபூதா கன்சர்வேஷன் ஃபவுண்டேஷனை நிறுவியவர் மங்கல்தாஸ் ஷெட்டி. இந்த கடற்கரை நகரம் அகநாஷினி ஆற்றின் அருகே அமைந்துள்ளது. அரேபியன் கடலில் தடையின்றி கலக்கக்கூடிய ஒரு சில ஆறுகளில் இதுவும் ஒன்று. இந்த ஆற்றின் கரைகள் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபடாமல் இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள், பல்லுயிர் மற்றும் அவற்றை ஆய்வு செய்யும் கடல்சார் நிபுணர்களுக்கு உதவுகிறது.
“பாதுகாப்பு அம்சத்தை இரு வேறு கோணங்களில் பார்க்கவேண்டும் என்கிறார் மங்கல்தாஸ். முதலில் ஏற்கெனவே அழிக்கப்பட்டதை மீட்டெடுக்கவேண்டும். மற்றொன்று இருப்பவற்றைப் பாதுகாத்து இனி வரும் தலைமுறையினர் பின்பற்றும் வகையில் பராமரிக்கவேண்டும். நாங்கள் இரண்டாவது வழியைத் தேர்வு செய்தோம். நதியின் சூழலியலைப் பராமரிக்கும் பணியில் உள்ளூர் மக்களுடன் இணைந்து ஈடுபடத் தொடங்கினோம்,” என்றார் ஆதர்ஷ்.
பஞ்சபூதா மனித நடவடிக்கைகளால் இயற்கை வளங்கள் பாதிப்படையாமல் இருப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் இயற்கை வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தக்கூடிய வணிகங்களை ஊக்குவிக்கிறது. இயற்கைக்கு கேடு விளைவிக்காமல் வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்றார் ஆதர்ஷ்.
வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது. ஆனால் இயற்கையைப் பாதுகாப்பதுடன் உள்ளூர் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதே பஞ்சபூதா குழுவினரின் நோக்கம். உதாரணத்திற்கு ஒரு நபர் அறுவடை செய்வார், மற்றொருவர் பதப்படுத்துவார், இறுதியாக மற்றொருவர் பலனடைவார். இத்தகைய மாதிரியை இந்நிறுவனம் பின்பற்றுகிறது. இந்த செயல்முறையினால் விரைவான வளர்ச்சி சாத்தியமில்லை என்றபோதும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க இந்த அணுகுமுறை உதவுகிறது.
இன்று இந்நிறுவனம் ஹோம்ஸ்டே மாட்யூல் உருவாக்கி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்கி வருகிறது. ஹோம்ஸ்டே மாட்யூலில் விருந்தோம்பல் வணிகத்தில் விருப்பமுள்ள, நிலம் வைத்துள்ள உள்ளூர் நபர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஹோம்ஸ்டே அமைக்க கான்கிரீட்டுக்கு பதிலாக மரங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட யோசனைகளையும் இந்நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஹோம்ஸ்டே உள்ளூர் உணவுமுறை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான செயல்முறைகளில் உள்ளூர் மக்களுக்குத் தேவையான உதவிகளை பஞ்சபூதா குழு வழங்குகிறது.
மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு உள்ளூர் கலாச்சாரம் ஆர்வத்தை ஏற்படுத்தும். உள்ளூர் சமூகத்திற்கு மற்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் வரும்போது தகவல்கள் பரிமாறப்படும் என்றார் ஆதர்ஷ்.
ஐந்தாண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் முதல் மூன்றாண்டுகள் கற்றல் மாட்யூல்கள் உருவாக்குவதில் செலவிட்டது. இந்த மாட்யூல்கள் இயற்கையைப் பாதுகாப்பது தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்காக உருவாக்கப்பட்டது.
ஐம்பூதங்களான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை தொடர்பாகவே இந்நிறுவனம் செயல்படுவதால் ‘பஞ்சபூதா’ என்கிற பெயர் தேர்வு செய்யப்பட்டது.
நிறுவனங்களுக்கு தாவரங்கள், விலங்குகள், கடல்சார் சூழலியல் ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பஞ்சபூதா ரெசிடென்ஷியல் புரோக்கிராம் ஏற்பாடு செய்கிறது. இவ்வாறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பஞ்சபூதா வருவாய் ஈட்டுகிறது.
இதுவரை கிட்டத்தட்ட 25 நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் பஞ்சபூதாவை பார்வையிட்டுள்ளனர். இந்நிறுவனம் அங்கேயே தங்கி கற்றுக்கொள்ளும் வகையில் ஒருவார கால நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்று நேரடி அனுபவம் பெறலாம்.
நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை பற்றிய நேரடி அனுபவம் கிடைக்கும் என்கிறார் ஆதர்ஷ்.
“சான்றிதழ் வழங்கும் வகையில் சில நிகழ்ச்சிகளும் நேரடி அனுபவம் வழங்கும் வகையில் சில நிகழ்ச்சிகளும் திட்டங்களும் இருக்கின்றன,” என்கிறார்.
கும்தா பகுதியில் பிராந்திய அலுவலகம் கொண்டுள்ள ஐஐஎஸ்சி போன்ற கல்வி நிறுவனங்கள், தக்ஷின் ஃபவுண்டேஷன், பூமி கல்லூரி போன்றவை பல்வேறு திட்டங்களுக்காக பஞ்சபூதா உடன் இணைந்து செயல்படுகிறது.
பஞ்சபூதா கன்சர்வேஷன் ஃபவுண்டேஷன் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பணியை மேற்கொள்வதில் பெருமை கொள்வதாக ஆதர்ஷ் தெரிவிக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ருதி மோகன் | தமிழில்: ஸ்ரீவித்யா