9வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தேதி மற்றும் இடம் அறிவிப்பு!
ஒன்பதாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு வரும் மார்ச் 18, 2023 முதல் மார்ச் 20, 2023 வரைநுபாய், உலக வணிக மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
ஒன்பதாவது ’உலகத் தமிழர் பொருளாதார மாநாடு’ மற்றும் உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு வரும் மார்ச் 18, 2023 முதல் மார்ச் 20, 2023 வரை துபாய், உலக வணிக மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
உலகத் தமிழர் பொருளாதார மாநாடு:
உலகத் தமிழர் பொருளாதார மாநாடு குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மாநாட்டின் நிறுவனர் மற்றும் தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத் அதன் விவரங்களை தெரிவித்தார். அவருடன் 9வது உலகத் தமிழர் பொருளாதார மானாட்டின் தலைவர் அபித் ஜுனைத இருந்தார்.
மாநாடு பற்றி விளக்கிப்பேசிய சம்பத், 2000ம் ஆண்டு முதல் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு 8 முறை நடந்தேறியுள்ளது. முதன் முறையாக 2000ம் ஆண்டு சென்னையிலும், இரண்டாவது மாநாடு 2011ல் துபாயிலும், மூன்றாவது மாநாடு 2016ல் சென்னையிலும், நான்காவது மாநாடு 2017ல் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரிலும், ஐந்தாவது மாநாடு 2018ம் ஆண்டு பாண்டிச்சேரியிலும், ஆறாவது மாநாடு 2015ம் ஆண்டு சென்னையிலும், கொரோனா காரணமாக ஏழாவது மாநாடு 2020ம் ஆண்டு வீடியோ கான்பிரஸ் மூலமாகவும் சென்னையிலும், இறுதியாக 2021ம் ஆண்டு எட்டாவது மாநாடு மீண்டும் சென்னையிலும் நடைபெற்றது, என்றார்.
தனித்துவம் வாய்ந்த சமூக பொருளாதார அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிற வகையில் இந்த மாநாடு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், வர்த்தக மன்ற பிரதிநிதிகள், பொருளாதார அறிஞர்கள் என பலரும் பங்கெடுத்து வருகின்றனர்.
இந்த மாநாடுகளை அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், வியாபார தலைவர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், கொடையாளர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோரது ஆதரவோடு சென்னை வளர்ச்சிக் கழகமும், உலகத் தமிழர் பொருளாதார நிறுவனமும் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தி வருகிறது.
தற்போது. 9வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலகளாவிய பொருளாதார உச்சி மாநாட்டின் விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு வரும் மார்ச் 18, 2023 முதல் மார்ச் 20, 2023 வரை துபாய், உலக வணிக மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
மாநாட்டின் நோக்கம், குறிக்கோள்:
- பொருளாதார மேம்பாட்டிற்கான நெருக்கமான ஒத்துழைப்பையும் கூட்டுறவினை உருவாக்க பன்னாட்டு சமூகம், வணிகத் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்களுடன் உரையாடலை ஊக்குவித்தல்,
- பொருளாதார மேம்பாட்டிற்காக சுதந்திரமான வணிகம் மற்றும் தொழில்சார் பணிகளைத் தொடர பெண்களை ஊக்குவித்தல்.
- கொள்கை வகுப்பாளர்கள், அரசு அதிகாரிகள், சமூகத் தலைவர்கள்; பொருளாதார வல்லுநர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களை அழைத்து அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை நோக்கிய வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான வளர்ச்சியைப் பற்றி விவாதித்தல்.
- வங்கிகள், நிதிநிறுவனங்கள் மற்றும் நிதியளிப்பு முகவர் மூலம் திட்டங்கள் மற்றும் வணிக வளர்ச்சிக்கு நிதி உதவி வழங்குதல், பொருளாதார மேம்பாட்டிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சாதனைகள் மற்றும் சிறப்பை விளம்பரப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியை நோக்கிய அறிவை வளப்படுத்த உயர்கல்வி, தொழில்முறை கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தறிதல்.
- தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புகள்.
- தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், கோவில் குழுக்கள், வர்த்தக மன்றங்கள் மற்றும் தொழில்முறை நிறுவனங்கள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள்.
- தகவல் தொழில்துட்பம், தகவல் தொடர்பு, பொதுமக்களின் ஊடகம் மற்றும் அச்சு ஊடகங்களுக்கான வாய்ப்புகள்.
- கல்வி, தொழில் முனைவு மற்றும் வேலைவாய்ப்பு மூலம் பெண்கள் அதிகாரமளித்தல்
- பொருளாதார வளர்ச்சிக்காக வணிக மற்றும் பள்ளாட்டு வணிகத்தை நிறுவுவதற்கான சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்.
மாநாட்டில் பங்கேற்க உள்ளவர்கள்:
- வணிகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில்முளைவோர், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர்.
- தொழில் வல்லுநர்கள். வழக்கறிஞர்கள், மருத்துப் பயிற்சியாளர்கள், பட்டயக் கணக்காளர்கள், பொறியாளர்கள் மற்றும் மேலாளர்கள்.
- வணிக மற்றும் கல்வி நிறுவனங்களின் அறைகள்.
- கல்வியாளர்கள், ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள்.
இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர்கள் துரைமுருகன்,
தங்கம் தென்னரசு, செஞ்சி மஸ்தான், தா.மோ.அன்பரசன், விஐடி வேந்தர் டாக்டர் ஜி விஸ்வநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஜெகத்ரட்சகன், டாக்டர் கலாநிநி வீராசாமி, மற்றும் தமிழ்நாடு அரசு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தொழிலதிபர்கள் விஜி சந்தோசம், பழனி பெரியசாமி, ஜிம் குழு நிறுவனர் வீரமணி. தமிழ்நாடு அரசு, பாண்டிச்சேரி அரசு, இந்திய அரசு செயலாளர்கள், அமைச்சர்கள், வெளிநாட்டு தொழிலதிபர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாக மாநாட்டின் நிறுவனர் வி.ஆர்.எச்.சம்பத் கூறினார்.