Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'முடங்கிய கைகளுக்கு மறுவாழ்வு' - ஐஐடி மெட்ராஸ் - சிஎம்சி வேலூர் இணைந்து உருவாக்கிய உள்நாட்டு 'ரோபோ கைகள்'

ஐஐடி மெட்ராஸ், சிஎம்சி வேலூர் ஆய்வாளர்கள் இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

'முடங்கிய கைகளுக்கு மறுவாழ்வு' - ஐஐடி மெட்ராஸ் - சிஎம்சி வேலூர் இணைந்து உருவாக்கிய உள்நாட்டு 'ரோபோ கைகள்'

Saturday January 18, 2025 , 3 min Read

ஐஐடி மெட்ராஸ், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் (சிஎம்சி வேலூர்) ஆய்வாளர்கள் இணைந்து கை மறுசீரமைப்புக்காக குறைந்த விலையில், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

‘PLUTO’ (plug-and-train robot) என்றழைக்கப்படும் இந்த சாதனம், தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் மூலம் உரிமம் வழங்கப்பட்டது. த்ரைவ் ரிஹாப் சொல்யூஷன்ஸ் மூலம் வணிகப்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் தற்போதைய மறுவாழ்வுச் சந்தையில் குறிப்பிட்ட அளவு இடைவெளியை நிவர்த்தி செய்கிறது. மருத்துவமனைகள், வீடுகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ப விலைகுறைந்த மறுவாழ்வுத் தீர்வுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த புதுமையான சாதனம் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘ப்ளூட்டோ’ இந்தியாவில் உள்ள வீடுகளில் சோதிக்கப்பட்ட முதலாவது ஒரே உள்நாட்டு ரோபோவாகும். இந்த ரோபோவால் தீவிர சிகிச்சை அளிக்க முடியும், என நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில் ப்ளூட்டோவினால் ஏற்கனவே 1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
IIT

ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் (முதன்மை ஆராய்ச்சியாளர்), ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை மற்றும் வேலூர் சிஎம்சி உயிரிபொறியியல் துறை ஆகியவற்றில் பிஎச்டி பெற்ற டாக்டர் அரவிந்த் நேருஜி, சிஎம்சி வேலூர் உயிரி பொறியியல் துறை பேராசிரியர் சிவகுமார் பாலசுப்ரமணியன், ஆகியோர் இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

தொழில்நுட்ப பரிமாற்றம், வணிகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு ஐஐடி மெட்ராஸ் தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சி (IC&SR) அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலக டிடிஓ-ஐபிஎம் செல் (TTO-IPM Cell) ஏற்பாடு செய்திருந்தது.

காப்புரிமை பெறப்பட்ட இத்தொழில்நுட்பம் துல்லியமான சிகிச்சை இயக்கங்களையும், நிகழ்நேர தரவுகளையும் வழங்குகிறது. பக்கவாதம், முதுகுத்தண்டு காயம், தண்டுவட மரப்புநோய் (multiple sclerosis), பார்கின்சன் நோய், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பயனளிக்கிறது.

“பக்கவாதத்திற்குப் பிந்தைய நிலைமைகளுக்கு ஏற்ப மலிவு விலையில், அணுகக் கூடிய தீர்வை வழங்குவதன் மூலம் நோயாளிகளின் கை மறுசீரமைப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருப்பதால் வீட்டிலோ படுக்கையிலோ சரியான நேரத்தில் நிலையான சிகிச்சையை செயல்படுத்த முடிகிறது. மீட்பு விளைவுகளை மேம்படுத்தி இருப்பதுடன் பராமரிப்பாளர்களை சார்ந்திருக்கும் சூழலையும் குறைத்துள்ளது,” என்று ஐஐடி மெட்ராஸ் டிடிகே மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டு மையத்தின் தலைவருமான பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் கூறினார்.
Pluto

சிஎம்சி வேலூர், ஐஐடி மெட்ராஸ் இடையிலான ஆராய்ச்சி & மேம்பாட்டின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 11 வெவ்வேறு மருத்துவமனைகளில் வழக்கமான மருத்துவப் பயன்பாட்டிற்காக ‘ப்ளூட்டோ’ அமைக்கப்பட்டிருக்கிறது.

“கை குறைபாடு உள்ள 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக இந்த சாதனத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர். சிஎம்சி வேலூரில் வாரத்திற்கு குறைந்தபட்சம் 15 நோயாளிகள் வழக்கமான கை சிகிச்சைக்காக ‘ப்ளூட்டோ’வைப் பயன்படுத்துகின்றனர். இந்திய வீடுகளில் பரிசோதிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே உள்நாட்டு ரோபோ ‘ப்ளூட்டோ’ தான். தீவிர சிகிச்சையை வழங்க முடிவதுடன் சிகிச்சையை அணுகக் கூடியதாக மாற்ற முடியும் என்பதை ‘ப்ளூட்டோ’ நிரூபித்துள்ளது,” என்று சிஎம்சி வேலூர் உயிரி பொறியியல் துறை பேராசிரியர் சிவகுமார் பாலசுப்ரமணியன் கூறினார்.

"கை சிகிச்சைக்கான மறுவாழ்வு ரோபோக்கள் பல்வேறு கை செயல்பாடுகளைப் பயிற்றுவிக்கும் திறன்கொண்ட சிக்கலான- விலையுயர்ந்த அமைப்புகளாகவோ, விரிவான சிகிச்சைக்கு பல்வேறு அலகுகள் தேவைப்படக்கூடிய எளிதான ஒற்றை-செயல்பாட்டு சாதனங்களாகவோ உள்ளன.

அதிக விலை, அதிக எடை, போதிய கட்டுப்பாடு இன்மை ஆகிய காரணங்களால் பெரும்பாலான இந்திய மருத்துவ அமைப்புகள் பயன்படுத்துவதில்லை. அத்துடன், வீட்டு அடிப்படையிலான மறுவாழ்வு பயன்பாடும் குறைவாக உள்ளது. எனவே, திறமையான‘- குறைந்த செலவிலான தீர்வுகளுக்கான தேவை எப்போதும் இருந்து வருகிறது" என்று ஐஐடி மெட்ராஸ், சிஎம்சி வேலூர் ஆகியவற்றுடன் இணைந்து முனைவர் பட்டம் பெற்ற போது புளூட்டோவை உருவாக்கிய கண்டுபிடிப்பாளர் டாக்டர் அரவிந்த் நேருஜி கூறினார்.

"ஐஐடி மெட்ராஸ்- வேலூர் சிஎம்சி இடையேயான ஒத்துழைப்பு உதவி சாதனங்கள் தொடர்பாக இன்னும் பல விறுவிறுப்பான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். தொழில்நுட்ப வணிகமயமாக்கல், தொழில்துறை செயல்படுத்தல் ஐஐடி மெட்ராஸ்-ன் முக்கிய உத்தரவுகளில் ஒன்றாக இருப்பதால், இதுபோன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை நோக்கி நாங்கள் பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்," என்று ஐஐடி மெட்ராஸ் டீன் (ஐசிஎஸ்ஆர்) பேராசிரியர் மனு சந்தானம் கூறினார்.

Edited by Induja Raghunathan