முருகப்பா குழுமத்தில் பெண் வாரிசுக்கு இயக்குனர் இடம் இல்லை; வள்ளி அருணாசலம் கோரிக்கை நிராகரிப்பு!

முருகப்பா குழுமத்தின் இயக்குனர் குழுவில் பெண்களுக்கு இடம் அளிக்க வேண்டும் எனும் வள்ளி அருணாசலத்தின் கோரிக்கையை இயக்குனர் குழு ஏற்க மறுத்துள்ளது.
16 CLAPS
0

தென்னகத்தின் புகழ் பெற்ற தொழில் குழுமங்களில் ஒன்றான ரூ.38,000 கோடி மதிப்புள்ள முருகப்பா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மண்ட்ஸ், இயக்குனர் குழுவில் இடம் அளிக்க வேண்டும் என்ற, நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குனர் எம்.வி.முருகப்பனின் மகள் வள்ளி அருணாசலத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இது தொடர்பான வள்ளி அருணாசலத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால், பல்வேறு துறைகளில் பரந்து விரிந்திருக்கும் இந்த குழுமத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெறும் முதல் பெண் இயக்குனர் எனும் சிறப்பை அவர் பெற்றிருப்பார்.

அணு விஞ்ஞானியாக இருக்கும் 59 வயதான வள்ளி அருணாசலம், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் குழுமத்தின் இயக்குனர் குழுவில் தனக்காக உரிமையை பெற போராடி வருகிறார். தாய் வள்ளி முருக்கப்பன் மற்றும் சகோதரி வெள்ளச்சி ஆகியோருடன் இணைந்து நிறுவனத்தில் மொத்தம் 8.15 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறார்.

கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வள்ளி அருணாசலம்,

“குழுமத்தை நிர்வகிக்கும் குடும்பம், இயக்குனர் குழுவில் பெண்களுக்கு இடம் அளிக்கத் தயாராக இல்லை என்பது தெளிவாகி இருப்பதாகவும், குடும்பத்திற்குள் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சி பலன் அளிக்காததால் சட்டரீதியான வழியை நாட இருப்பதாகவும் கூறியுள்ளார்.”

வள்ளி அருணாசலத்தில் தந்தை எம்.வி.முருக்கப்பன் 2017ல் இறந்ததை அடுத்து, அவரது குடும்பத்திற்கு இயக்குனர் குழுவில் பிரதிநித்துவம் இல்லாமல் இருக்கிறது.

முருகப்பா குழும வழக்கப்படி, இயக்குனர் குழுவில் பெண்களுக்கு இடம் அளிக்கப் படுவதில்லை. எனினும், வள்ளி அருணாசலம் தனது கோரிக்கை மூலம் இதை மாற்றி அமைப்பார் என கருதப்பட்டது. இது தொடர்பாக அவர் அளித்த கோரிக்கை இயக்குனர் குழுவின் ஆண்டு பேரவை கூட்டத்தில் சிறப்பு அம்சமாக பரிசீலிக்கப்பட்டது.

வீடியோ சந்திப்பு மூலம் நடைபெற்ற நிறுவனத்தின் 79வது பொதுப்பேரவை கூட்டத்தில், வள்ளி அருணாசலத்தின் கோரிக்கைக்கு எதிராக 91 சதவீத பங்குதாரர்கள் வாக்களித்தாக கூறப்படுகிறது.

அம்பாடி இன்வெஸ்ட்மண்ட்ஸ் இயக்குனர் குழுவில் இரண்டு சுயேட்சை இயக்குனர்கள் உள்பட எட்டு இயக்குனர்கள் உள்ளனர். குழுமப் பங்குதாரர்கள், அவர்களில் பெரும்பாலானோர் இயக்குனர் குழுவில் உள்ளவர்கள்.

இயக்குனர் குழுவில் பெண்களால் முக்கியப் பங்காற்ற முடியும் என்பதை ஏற்கவில்லை என்பது துரதிஷ்டவசமானது என வள்ளி அருணாசலம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

டாக்டர் பட்டம் பெற்ற, பன்னாட்டு நிறுவனங்களில் 24 ஆண்டு அனுபவம் உள்ள, பல்வேறு காப்புரிமைகளை தனது பெயரில் பெற்றுள்ள பெண் வாரிசு, அதே சதவீத பங்குகளை கொண்டிருந்தும் தந்தையும் மரணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு பின்னரும் இயக்குனர் குழுமத்தில் இடம்பெற முடியாமல் இருப்பது ஏன் எனும் கேள்வி எழுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிறுவனத்திடம் தங்கள் பங்குரிமையை நியாயமாக அளிக்குமாறு கோரி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சகோதரியும், தானும் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

செய்தி ஆதாரம்; டெக்கான் ஹெரால்டு | தமிழில்- சைபர்சிம்மன்

Latest

Updates from around the world