வீட்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உணவளிக்கும் உன்னதக் கரங்கள்: ஒரு தொகுப்பு!
கொரோனா பாதித்து தனிமைபடுத்திக் கொண்டிருப்போர் உணவின்றி தவிப்பதை பார்த்து பல தன்னார்வலர்கள் களமிறங்கி உணவு வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றனர்.
உணவு அளித்தல் என்பது ஒருவருக்கு உயிர் அளிப்பதைப் போன்றதே என்று உணர்ந்த பலர் இன்று நடமாடும் மனிதர்குல மாணிக்கங்களாக ஜொலிக்கின்றனர்.
கொரோனா எனும் பெருந்தொற்று இல்லார், வறியார், செல்வந்தர் என்ற பேதமின்றி அனைவர் வாழ்விலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம் ஒரு இறப்புச் செய்தியால் நொருங்கிப் போய் இருக்கின்றன பல இதயங்கள். தீவிர நிலையில் இருப்போர் மருத்துவமனையில் அல்லல்பட வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்போரின் நிலை இன்னும் மோசம்.
அதிலும் வீட்டில் இருக்கும் பெண்கள், வயதானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால் உணவு கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். உறவுகளற்று ஏற்கனவே நான்கு சுவருக்குள் சுருங்கி விட்ட குடும்ப வாழ்வில் உதவிக்கு ஆளின்றி பலரும் தவித்து வருகின்றனர். இதே போன்ற நிலையை அனுபவித்தவர்கள் மற்றும் சமூக அர்ப்பணிப்பில் ஏற்கனவே செயல்பட்டு வரும் தன்னார்வலர்கள் பலர், கடினமான சவால்களுக்கு மத்தியிலும் கோவிட் நோயாளிகளுக்கு தங்களால் முடிந்த உதவியான சத்தான உணவை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றனர்.
யுவர்ஸ்டோரி தமிழின் சிறிய பங்காக சமூகத்திற்கு உணவளித்து உதவும் தன்னார்வலர்களின் தொடர்பு எண்கள் சரிபார்க்கப்பட்ட பட்டியல் இதோ:
1. தி மார்னிங் எனர்ஜி (The Morning Energy)
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் ஷமிகா. இவரின் வயதான பெற்றோர் மற்றொரு நகரத்தில் வசிக்கின்றனர் கொரோனா தொற்று உறுதியான சமயத்தில் அவர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்பட, அருகில் இருந்த பெண் ஒருவர் எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் அக்கறையோடு அவர்களுக்கு உணவளித்து பராமரித்திருக்கிறார். இதற்காக ஷமிகா அளித்த பணத்தை கூட ஏற்காத அந்தப் பெண்ணின் செயலால் ஈர்க்கப்பட்டிருக்கிறார் இவர்.
இதனையடுத்து, தன்னுடன் பணியாற்றும் நண்பர்கள் அர்பிதா, நியாசுடன் சேர்ந்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் சேவையை செய்து வருகிறார்.
ஒரு சனிக்கிழமை இரவுப் பணி முடித்து வீடு திரும்பிய பின்னர் இந்தத் திட்டம் குறித்து சமூக ஊடகத்தில் போஸ்ட் வெளியிட தேவையில் இருக்கும் பலர் தொடர்பு கொண்டு உணவு கேட்டிருக்கின்றனர்.
2 வாரங்களில் சுமார் 46 கோவிட் நோயாளிகளுக்கு காலை உணவு மட்டும் வழங்கி இருக்கிறது இந்த பேச்சுலர் கிட்சன் டீம். சென்னை பழைய மகாபலிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவர்களின் சேவையைப் பெறலாம். கட்டணமின்றி இலவசமாக டெலிவரி செய்யப்பட்டாலும் வசதி இருப்பவர்கள் பணம் செலுத்தியும் சிற்றுண்டியைப் பெறலாம்.
தொடர்புக்கு : 9345401353, [email protected]
2. ஹெல்பிங் ஹேண்ட்ஸ் (Helping Hands)
குடும்பத்தை பராமரித்துக் கொண்டு கணவரின் தொழிலுக்கும் உதவியாக இருந்து வந்த அனுஸ்ரீ ஷர்தா, கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை செய்திகளில் பார்த்து தனது பங்களிப்பாக சமூகத்திற்கு உதவ முடிவு செய்திருக்கிறார். தன் குடும்பத்தினரின் ஆதரவுடன் ஆரோக்கியமான சைவ வீட்டு உணவை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்து களப்பணி செய்து வருகிறார்.
தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து ஒரு வாரத்தில் சுமார் 200 சாப்பாடு பொட்டலங்களை விநியோகம் செய்திருக்கிறார்.
மாமியார் தீபா ஷர்மாவும் தானும் சமைக்க, கணவர் மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் உணவை பார்சல் செய்ய உதவுவார்கள் என்கிறார் அனுஸ்ரீ. திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம், பனையூர் உள்ளிட்ட பகுதியில் இருப்பவர்கள் தேவை இருப்பின் இவரது உதவியை நாடலாம். இயன்றவர்கள் பணம் செலுத்தியும் இயலாதவர்கள் இலவசமாகவும் மதிய உணவைப் பெறலாம். தொடர்புக்கு : 93606 77476.
3. லதா துபே
கொரோனா இரண்டாம் அலை தனது நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தால் சமூக சேவையில் இறங்கி இருக்கிறார் லதா துபே. சென்னை நந்தனத்தில் வசிக்கும் இவர், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலன் பெற உணவே அடிப்படை என்கிறார்.
தொற்று உறுதியானவர்களால் சமைக்க முடியாது, வெளியில் இருந்து உணவு வாங்கிச் சாப்பிட முடியாது அதனால் என்னால் முடிந்த சிறு உதவியாக தேவையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு மதிய மற்றும் இரவு உணவு வழங்கி வருகிறேன் என்கிறார் லதா.
நோயாளியின் தேவை அறிந்து ஆரோக்கியமான எளிமையான சைவ உணவை தானே வீட்டில் சமைத்து டன்சோ, ஸ்விக்கி ஜீனி, வீ பாஸ்ட் உள்ளிட்ட சேவைகளின் மூலம் டெலிவரி செய்து வருகிறார் லதா.
நாளொன்றிற்கு 45 உணவுப் பொட்டலங்களை இவர் இலவசமாக டெலிவரி செய்கிறார். ஒருவரால் 20 பேருக்கு உதவ முடியும் என்றால் ஒன்றுபட்டு செயல்பட்டால் 200 பேருக்குக் கூட உதவ முடியும் என்கிறார் லதா. வாழ்க்கை சிறியது அதை அர்த்தமாக்குவோம், வாழ்வை மாற்றுவோம் புன்னகையை பரப்புவோம் என்கிறார் லதாதுபே.
இவரின் சேவையைப் பெற தொடர்புக்கு : 9791171575/9500910040.
4. வோக் கிச்சன்ஸ் சென்னை (Voguekitchenschennai)
ஊடகத்துறை ஓராண்டுப் பணியில் திருப்தியின்றி நண்பர்களுடன் இணைந்து உணவகம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார் இளைஞர் காட்ப்ரே விஜய். கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா அலையால் தொழிலைத் தொடர முடியாமல் போக ஒரு நாள் மீதமான உணவை வேளச்சேரி பகுதியில் சாலையோரம் இருப்பவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
உணவுக்காக அவர்கள் அலைந்த அந்த காட்சியைப் பார்த்து மனம் நொந்து தங்களிடம் இருக்கும் சமையலறையைப் பயன்படுத்தி கொரோனா நோயாளிகளுக்கு உணவளிக்க முடிவு செய்து தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து சமூக சேவையாற்றத் தொடங்கி இருக்கிறார் விஜய்.
சமையல்கலைஞர் உள்ளிட்ட 8 பேர் எங்கள் குழுவில் இருக்கிறோம், முழு ஊரடங்கு காலத்தில் வந்து செல்வதும், அடிக்கடி சமையலறையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதும் என பல சவால்கள் இருக்கிறது. எனினும் யாரேனும் ஒருவர் எங்கள் உணவால் உடல்நலன் தேறிவிட்டேன் என்று கூறினால் மனம் நிம்மதியடைந்து விடுகிறது என்கிறார் விஜய்.
தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் பலரின் சோகக்கதைகளும், எங்களிடம் உணவு வாங்கி சாப்பிட்ட யாரேனும் தீவிர நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தாலும் சோகம் தழுவிக்கொள்ள அனைவரும் மிகுந்த மன அழுத்தத்துடனே இந்தப் போரில் களப்பணியாற்றுகிறோம் என்கிறார் விஜய்.
தேவையில் இருப்போருக்கு இலவசமாக அவர்களுக்கு ஏற்றவாறு உணவை சமைத்து டெலிவரி செய்கிறது விஜயின் குழு. தொடர்ந்து செயல்பட நன்கொடைகளையும் இவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். சென்னை வேளச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் கோவிட் நோயாளிகள் இவர்களின் உதவியைப் பெற தொடர்பு கொள்ளலாம் : 7358553462, 7904269362
5. ஆர்ஒய்ஏ மெட்ரோ ஸ்டார் (RYA Metro Star)
ராஜஸ்தான் இளைஞர்கள் அமைப்பின் அங்கமான RYA Metro Star கோவிட் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சென்னை முழுவதும் இலவசமான உணவு டெலிவரி செய்து வருகின்றனர். இது குறித்து தெரிவித்த அதன் தலைவர் அஸ்வின்,
“நன்கொடைகள் மற்றும் சங்கத்தில் ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் நிதியை வைத்து தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு 3 வேளையும் இலவசமாக உணவு விநியோகிப்பதாகக் கூறுகிறார்.”
இவர்களின் அமைப்பைத் தொடர்பு கொண்டு அவர்கள் வழங்கும் படிவத்தோடு கோவிட் தொற்று உறுதியான சான்றிதழையும் சமர்ப்பித்தால் 5 நாட்கள் வரை இவர்களின் சேவையைப் பெறலாம்.
6 உணவுப்பொட்டலத்தை விநியோகிப்பதில் தொடங்கிய இவர்களின் சேவையானது 10 நாட்களில் 4 ஆயிரத்து 500 உணவுப் பொட்டலங்கள் விநியோகமாக விரிவாக்கம் பெற்றிருக்கிறது. ஊரடங்கால் டெலிவரி செய்வதில் சிக்கல் இருப்பினும் டன்சோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து நாள்தோறும் சுமார் 700 பேருக்கு 3 வேளை உணவை வழங்கி வருகின்றனர்.
தொடர்புக்கு : 98413 98413
6. ஆர்ஒய்ஏ காஸ்மோ எலைட் பவுன்டேஷன் (RYA Cosmo Elite Foundation)
7 ஆண்டுகளாக சென்னையில் செயல்பட்டு வரும் RYA Cosmo Elite Foundation தனது சேவையின் ஒரு பகுதியாக கோவிட் நோயாளிகள் மற்றும் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இலவச மதிய உணவை வழங்கி வருகிறது.
இந்தஅமைப்பானது சென்னை முழுவதும் கடந்த 15 நாட்களில் 500க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான சுகாதாரமான சைவ உணவை விநியோகம் செய்துள்ளது. உணவு பொட்டலம் மற்றும் டெலிவரிக்காக ரூ. 51 மட்டும் வசூலிக்கப்படுகிறது. இவர்களின் சேவையை வாட்ஸ் அப் மூலம் பெறலாம். தொடர்புக்கு : அசோக் கபியா 99405 63528
7. அந்தராஷ்ட்ரியா அகர்வால் சம்மேளனம் (ANTARRASHTRIYA AGARWAL SAMMELAN)
கொல்கத்தாவை தமைமையிடமாகக் கொண்டு செயல்படும் ANTARRASHTRIYA AGARWAL SAMMELAN, சென்னையில் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுத்தமான ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக கடந்த ஏப்ரல் 30ம் தேதி முதல் இந்த அமைப்பானது உணவு விநியோகம் செய்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களின் உதவியோடு வீட்டிலேயே உணவு சமைத்து தேவை இருப்பவர்களுக்கு 3 வேளையும் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. உணவு சமைத்து கொடுக்க முடியாதவர்களுக்கு அருகில் இருக்கும் உணவகங்களில் இருந்து ஆரோக்கியமான உணவை வாங்கியும் தருகின்றனர் இவர்கள். பிரதிபலன் தேவையில்லை என்றாலும் தொடர்ந்து இந்தச் சேவையைத் தொடர நிதியுதவிகளை ஏற்றுக்கொள்கின்றனர். தொடர்புக்கு : 88077 00011, 99629 76877
8. ஆரண்ய அறக்கட்டளை
தமிழக சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமத்தின் கூடுதல் டிஜிபி சந்தீப்ராய் ரத்தோரின் மனைவி சில்பம் கபூர் ரத்தோர் தனது ஆரண்ய அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக சென்னை கீழ்பாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு ஆகிய இடங்களில் ஆதரவற்ற முதியவர்கள், வீட்டுத் தனிமையில் இருக்கும் கோவிட் உறுதியானவர்களுக்கு இலவச உணவு விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளது.
தேவை இருப்பவர்கள் ஒரு நாள் முன்னதாகவே இவர்களைத் தொடர்பு கொண்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். தொடர்புக்கு : 044 – 42997501.
9 . சங்கீதா உணவகம்
தன்னார்வலர்கள் மட்டுமின்றி உணவகத் துறையில் பல காலங்களாக இருந்து வருபவர்களும் கோவிட் ஸ்பெஷல் ஒரு நாள் உணவுத் திட்டத்தை வழங்குகின்றனர்.
சென்னை தி. நகர், வேளச்சேரி, மேடவாக்கம், துரைப்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருப்பவர்கள் சங்கீதா உணவகத்தின் இந்த வசதியைப் பெறலாம். காலை உணவில் கபசுரக்குடிநீர், நெல்லிக்காய் கஷாயம் முதல் இரவு சுக்கு மிளகு பால் வரை அனைத்து ஆரோக்கியமான அம்சங்களும் இதில் அடக்கம். இதன் கட்டணம் நாள் ஒன்றிற்கு ரூ.650. தொடர்புக்கு : 73972 22111
10. ஃபுட் பேக்டரி
வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கான பிரத்யேகமான நாள் முழுவதிற்குமான உணவுத் திட்டத்தை பேக்கேஜ்களாக வழங்குகிறது ஃபுட் பேக்டரி.
சிற்றுண்டி, காலை இடைவேளைக்கு பழங்கள்+ நெல்லிக்காய், தென் இந்திய மதிய உணவு, மாலை சிற்றுண்டியாக சுண்டல் + உலர் பழங்கள் மற்றும் இரவு உணவு என ஒரு நாள் முழுமைக்கான உணவுத் திட்டத்தை இவர்கள் வழங்குகிறார்கள். நாள் ஒன்றிற்கு ரூ. 500ல் தொடங்கி 3 நாட்கள், ஒரு வாரத் திட்டங்கள் என சந்தாபெறலாம். தொடர்புக்கு : 73388 58148
11. ஸ்ரீ சத்ய சாய் அமுதம்
ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் தொடக்கமாக ஸ்ரீ சத்ய சாய் அமுதம் மூலம் தமிழ்நாடு முழுவதும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் இருக்கும் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு 7 நாட்கள் வரை இலவசமாக உணவு விநியோகம் செய்கிறது இந்த அமைப்பு.
வீட்டிலேயே செய்யப்பட்ட சுகாதாரமான பாதுகாப்பான உணவு எந்தவித கட்டணமுமின்றி தேவை இருப்பவர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு கொடுக்கப்படுகிறது. உதவி வேண்டுவோர் அமைப்பின் உதவிஎண்களில் முன்கூட்டியே பதிவு செய்யலாம். தொடர்புக்கு : 94421 70037, 99443 39418
12. களஞ்சியம் ஃபுட் பேங்க்
பசியில் வாடுவோருக்கு உணவு வழங்கும் அரும்பணி செய்து வரும் இந்த அமைப்பின் தன்னார்வலர் சாம் எலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சமயத்தில் உணவிற்காக தான் அல்லல்பட்டதை கருத்தில் கொண்டு திருச்சி நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான உணவை சத்தான உணவை வழங்கும் உன்னத பணியை கையில் எடுத்தார்.
உணவகம் நடத்தி வந்த சுஷ்மா என்பவரும் தனது கிச்சனை பயன்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டியதன் விளைவாக இரு அமைப்பும் சேர்ந்து கொரோனா நோயாளிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு சத்தான மதிய மற்றும் இரவு உணவு விநியோகம் செய்கிறார்கள், இவர்களின் சேவை தொட விருப்பம் உள்ளவர்கள் ஒரு உணவுக்கு ரூ. 51 வீதம் நன்கொடை அளித்து உதவலாம். தொடர்புக்கு : 97860 00274