கொரோனா பெருந்தொற்றில் சிக்கியவர்கள் மீண்டெழ உதவியுள்ள பெண் நன்கொடையாளர்கள்!
சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பலருக்கு உந்துதலளிக்கும் வகையிலும் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் நன்கொடை வழங்கி உதவியுள்ளார்கள் இந்த நன்கொடையாளர்கள்.
2020-ம் ஆண்டை ‘கொரோனா’ என்கிற ஒற்றை வார்த்தை விழுங்கிவிட்டது என்றால் அது மிகையல்ல. திடீரென்று ’கொரோனா வைரஸ்’ என்கிற பெயர் எல்லா இடங்களிலும் கேட்கத் தொடங்கியது. பெயர் வைத்ததுதான் தாமதம் உடனே இந்தப் பெருந்தொற்றுக்கு கை, கால்கள் முளைத்ததுவிட்டன. அகல விரிக்கப்பட்ட கைகளுடன் வேகமாக ஓட ஆரம்பித்தது. தன்னால் இயன்ற அளவிற்கு மக்களை எட்டிப் பிடித்துக் கொண்டது.
இதன் பிடியில் சிக்கி சிலர் உயிரிழந்தார்கள். பிடியிலிருந்து மூச்சு முட்ட தப்பித்து சிலர் உயிர்பிழைத்தார்கள். நூறு, ஆயிரம் என இது விழுங்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. ஆனாலும் இதன் பசி அடங்கியபாடில்லை. மாறாக இதன் பசியும் ஓட்டத்தின் வேகமும் முன்பைக் காட்டிலும் அதிகரிக்கத் தொடங்கின.
அவ்வளவுதான். அதுவரை பரபரப்பாக வெளியே ஓடித் திரிந்த மக்கள் வீடுகளுக்குள் ஒளிந்துகொண்டார்கள். இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து நின்றது. விளைவு மக்களுக்கு உணவு இல்லை; வேலை இல்லை; வருமானம் இல்லை; வாழ்வாதாரம் இல்லை. ஏற்கெனவே வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தவர்களுக்கு கூடுதலாக இந்த நெருக்கடி வேறு.
மக்களின் வாழ்க்கையை சூரையாட இதுபோன்ற பெருந்தொற்று வடிவில் அரக்கர்கள் தோன்றும்போது மக்களின் பிணியைப் போக்கி அவர்களுக்கு உதவும் நல்லுள்ளங்களும் இருப்பார்கள் அல்லவா?
ஆம், இந்தப் பெருந்தொற்றுச் சூழலை மக்கள் பசியின்றி எதிர்கொள்ளவும் தாக்குப்பிடிக்கவும் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவும் இந்தப் பெண்கள் நன்கொடை வழங்கி உதவியுள்ளனர்.
நீதா அம்பானி
ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானி. இவர் நன்கொடை வழங்குவது புதிதல்ல. சமூக நலனில் அக்கறை கொண்ட இவர், நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறார்.
கிராமப்புற மேம்பாடு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு, பேரிடர் மேலாண்மை, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், நகர்ப்புறங்களைப் புதுப்பித்தல் என பல்வேறு அம்சங்களில் ரிலையன்ஸ் அறக்கட்டளை கவனம் செலுத்துகிறது.
கொரோனா சமயத்தில் நீதா அம்பானி ‘அன்னா சேவா’ என்கிற முயற்சியைத் தொடங்கினார். இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள், தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், நலிந்த மக்கள், முதியோர் இல்லங்களில் இருப்பவர்கள் போன்றோருக்கு உணவளித்துள்ளார். இந்த முயற்சிக்காக டவுன் & கண்ட்ரி பத்திரிக்கையின் உலகின் முன்னணி நன்கொடையாளர்கள் 2020 பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் நீதா அம்பானி மட்டுமே.
அதேபோல் இந்தியாவின் முதல் கோவிட்-19 மருத்துவமனை அமைக்கப்படுவதற்காக 72 மில்லியன் டாலர் பங்களித்துள்ளார்.
சுதா மூர்த்தி
எளிமையான வாழ்க்கைக்கு மிகச்சிறந்த உதாரணம் சுதா மூர்த்தி. இந்த எளிமை காரணமாகவே ஆயிரக்கணக்கானோர் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
இவர் 1996-ம் ஆண்டு முதல் இன்ஃபோசிஸ் அறக்கட்டளை செயல்பாடுகளை வழிநடத்தி வருகிறார். கல்வி, வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கலை மற்றும் கலாச்சாரம் என பல்வேறு செயல்பாடுகள் மூலம் நலிந்த மக்களின் மேம்பாட்டில் பங்களித்து வருகிறார்.
பெருந்தொற்று சமயத்தில் கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்காக இன்ஃபோசிஸ் அறக்கட்டளை 100 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. இதில் 50 கோடி ரூபாய் பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை கோவிட்-19 நோயாளிகளுக்கென பிரத்யேகமாக பெங்களூருவில் ஒரு மருத்துவமனை திறந்துள்ளது.
மாலினி சபா
சபா குரூப் ஹோல்டிங்ஸ் நிறுவனர் மாலினி சபா. வணிகத்தை நடத்தும் ஒருவர் தன்னுடைய வணிகச் செயல்பாடுகள் மூலம் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்பதே இவரது வலுவான கருத்து. இவர் Anannke Foundation தொடங்கினார். இதன் மூலம் நன்கொடைகள் மட்டுமின்றி சுகாதாரம், கல்வி, மனித உரிமை தொடர்பான நடவடிக்கைகளையும் மேற்கோண்டு வருகிறார்.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இந்த அறக்கட்டளை அதன் முயற்சிகளில் ஒரு பகுதியாக 1.9 கோடி ரூபாய் தொகையும் 20,000 கிலோ அரிசியும் வழங்கியுள்ளது. உணவு, சுகாதாரப் பொருட்கள், உடை போன்றவை சுமார் 20 லட்சம் குழந்தைகளையும் அவர்களது குடும்பங்களையும் சென்றடையவேண்டும் என்பதே இந்த நன்கொடையின் நோக்கம்.
நலிந்த மக்கள் பெருந்தொற்றுச் சூழலை கடந்து செல்ல உதவும் வகையில் விரிவான திட்டங்களை இந்த அறக்கட்டளை வகுத்துள்ளது.
ரோகினி நிலேகனி
அர்க்கியம் அறக்கட்டளை நிறுவனர் ரோகினி. இவர் 47 கோடி ரூபாய் வரை நன்கொடை வழங்கியுள்ளார். Edelgive Hurun India Philanthropy பட்டியலில் பெண்களில் இவர் முன்னிலையில் உள்ளார்.
ரேபிட் ரூரல் கம்யூனிட்டி ரெஸ்பான்ஸ் (RRCR) 20 சிவில் சொசைட்டி நிறுவனங்களின் கூட்டமைப்பு. இது சுமார் 1.2 மில்லியன் குடும்பங்களைச் சென்றடைந்துள்ளது. அர்க்கியம் அறக்கட்டளை இந்த கூட்டமைப்பில் மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளது.
வித்யா ஷா
வித்யா ஷா Edelgive Foundation சிஇஓ. Edelweiss குழுமத்தின் நன்கொடை நடவடிக்கைகளை இந்த அறக்கட்டளை மேற்கொள்கிறது. இந்தியாவை மேம்படுத்துவதில் என்ஜிஓ-க்கள் பெரும் பங்களிப்பதை வித்யா கவனித்தார். எனவே Edelgive மூலம் பணம் உதவி மட்டுமல்லாது இதர வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார். இந்த அறக்கட்டளை பல என்ஜிஓ-க்களுடன் பார்ட்னராக இணைந்து நற்பணிகளை மேற்கொள்கிறது.
பெருந்தொற்று சமயத்தில் இந்த அறக்கட்டளை பார்ட்னராக இணைந்துள்ள என்ஜிஓ-க்களுக்கு ஆதரவளித்தது. அதேபோல் நன்கொடையாளர்களையும் என்ஜிஓ-களையும் இணைக்கும் பாலமாகவும் செயல்பட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் ஏத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா