ஓடும் ரயிலில் பயணிக்கு பிரசவம் பார்த்து அசத்திய செவிலியர்கள்...!
மருத்துவ சாதனங்கள் ஏதும் இல்லாத நிலையிலும் சசிகலா, வீணா ஆகிய இரு செவிலியர்களும் ஓடும் ரயிலில் பயணம் செய்த நிறை மாத கர்ப்பிணியான மணம்மா பாதுகாப்பாக குழந்தையைப் பெற்றெடுக்க உதவியுள்ளனர்.
அவசர மருத்துவத் தேவை எப்போது ஏற்படும் என்பதை யாராலும் கணிக்கமுடியாது. இதை சமாளிக்க ஒரே வழி தயார்நிலையில் இருப்பது மட்டுமே. ஒன்பது மாத கர்ப்பிணியான மணம்மா ரயிலில் பயணம் மேற்கொண்டபோது அத்தகைய ஒரு சூழல் உருவானது.
இருபத்தி இரண்டு வயது மணம்மா 29 வயதான தனது கணவர் குண்டையாவுடன் பெங்களூருவில் இருந்து யஷ்வந்த்பூர்-பிடார் எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது மணம்மாவிற்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. அதிர்ஷ்ட்டவசமாக பிடார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (BRIMS) செவிலியர்களான சசிகலா பீம்ராவ், வீணா வசந்த் ஆகிய இருவரும் அதே ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
மணம்மாவைக் கண்டதும் அவர் குழந்தையை பிரசவிக்கும் நேரம் நெருங்கி விட்டது என்பதை இருவரும் உணர்ந்தனர். ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் சசிகலா குறிப்பிடுகையில்,
மணம்மாவைக் கண்டதும் அவருக்கு பிரசவிக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை தெரிந்துகொண்டோம். உடனடி மருத்து உதவி ஏதும் வழங்கும் நிலை அங்கு இல்லை. நாங்கள் சோதித்துப் பார்த்தபோது குழந்தை வெளியே வரும் நிலையில் இருந்தது.
உடனே நர்ஸ் இருவரும் கழிப்பறைக்கும் ரயில் கதவிற்கும் இடையில் இருக்கும் இடத்தில் பிரசவம் பார்க்க தீர்மானித்தனர். சக பயணிகளின் உதவியுடன் அந்தப் பகுதி டெலிவரி பார்ப்பதற்கான அறுவை சிகிச்சை அறையாகவே மாற்றப்பட்டது என தி லாஜிக்கல் இண்டியன் தெரிவிக்கிறது.
கத்தி, பெட்ஷீட், அறுவை சிகிச்சை செய்யத் தேவையான நூல் போன்றவற்றைப் பெற பயணிகள் உதவினர். ப்ளாஸ்டிக் பைகளை கையுறையாகப் பயன்படுத்தி அந்தப் பகுதியில் பெட்ஷீட்டை பரப்பினர்.
தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் உடனான உரையாடலில் இந்த சம்பவம் குறித்து சசிகலா விவரிக்கையில்,
"நாங்கள் பயணித்த அதே பெட்டியில் மற்றொரு குடும்பம் பயணித்தது. அவர்கள் ஒரு கத்தியைப் பயன்படுத்தியதைப் பார்த்தோம். அவர்களிடம் கத்தியை வாங்கிக்கொண்டோம். அடுத்து எங்களுக்கு நூல் தேவைப்பட்டது. பிடாரில் மல்லிகைப் பூ கிடைப்பது அரிது. எனவே பெங்களூருவில் இருந்து பிடார் பகுதிக்கு பயணம் செய்பவர்களில் பலர் மல்லிகைப் பூ வாங்குவார்கள். பயண நேரத்தில் பொழுதுபோக்க அந்தப் பூவை கட்டுவார்கள். அவ்வாறு பூ கட்டிக்கொண்டிருந்த ஒருவரிடம் நூல் வாங்கிக்கொண்டோம். மணம்மா குழந்தையை அழுத்தி வெளியே தள்ள வீணா உதவினார். நான் டெலிவரி பார்த்தேன். பெண் குழந்தை பிறந்தது. இவை அனைத்தும் 15 முதல் 20 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது,” என்றார்.
பிரசவம் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிறகு 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் அனுப்பப்பட்டது. தர்மாவரம் ரயில் நிலையத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. அதன் பிறகு மணம்மாவும் அவரது குழந்தையும் பத்திரமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
BRIMS மருத்துவக் கண்காணிப்பாளரான டாக்டர் சிஎஸ் ராகாடே குறிப்பிடுகையில், “அந்த இரு நர்ஸ்களும் எங்களைப் பெருமைப்பட வைத்துள்ளனர். அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA