பெண்ணியம் போற்றும் ஊக்கம் அளிக்கும் ஒபாமாவின் மேற்கோள்கள்!
பெண்களுக்கு அதிகாரமளித்தலை நோக்கிய மாற்றத்தில் ஆண்களும் முக்கிய பங்கு வகிக்கலாம் என்பதை உணர்த்தும் பாரக் ஒபாமாவின் மேற்கொள்கள்!
பாரக் ஒபாமா, அமெரிக்காவின் 44வது அதிபராக, 2009 ஜனவரி முதல் 2017 ஜனவரி வரை பதவி வகித்தார்.
ஒபாமா, எப்போதும் பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாலின சமத்துவம், சம ஊதிய உரிமை ஆகியவற்றுக்கு குரல் கொடுப்பவராக இருக்கிறார். மாலியா மற்றும் சாஷா ஆகிய இரண்டு மகளுக்கு தந்தையான ஒபாமா, பெண்ணிய அடையாளத்தையும் பெருமையுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், ஒபாமா மற்றும் அவரது நிர்வாகம், கல்வி, தொழில்முனைவு, ஆரோக்கியம், வன்முறை மற்றும் தலைமை ஆகியவற்றில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தினர். தனது வாழ்க்கையில் பெண்களின் பங்கை, குறிப்பாக மனைவி மிச்சல் ஒபாமா பங்கை அவர் தொடர்ந்து அங்கீகரித்திருக்கிறார்.
உலகத்தலைவர்களில் மாற்றத்திற்காக குரல் கொடுத்தவராக அவர் அறியப்படுகிறார். அதன் காரணமாகவே பெண்கள் அவரை மிகவும் போற்றுகின்றனர். அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய, ஒபாமாவை, ஒரு பெண்ணியவாதியாக, ஒரு தந்தையாக, ஒரு கணவராக முன்னிறுத்தும் சிறந்த மேற்கோள்களை பார்க்கலாம்:
- “21ம் நூற்றாண்டின் பெண்ணியம் என்பது, எல்லோரும் சமம் எனும் நிலையில் நாம் மேலும் சுதந்திரமாக இருக்கிறோம் என்பதாகும்.”
- "நம்முடைய மனைவிகள், அம்மாக்கள் மற்றும் மகள்கள் தங்கள் முயற்சிக்கேற்ற வாழ்க்கையை பெறும் வரை நம்முடைய வாழ்க்கை பயணம் முழுமை அடைவதில்லை.”
- “நமக்கு முன்னர் இருந்த பெண்களின் பணியை முன்னோக்கிக் கொண்டு சென்று, நம்முடைய மகள்கள், அவர்கள் கனவுகளுக்கு எந்த வரம்பும் இல்லாததை, அவர்கள் சாதனைகளுக்கு தடைகள் இல்லாததை, அவர்கள் உடைக்க ஒரு கூரையும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.”
- “ஒரு பெண்ணின் இருப்பு மற்றும் வெற்றியால், அச்சம் கொள்ளும் ஆண்களின் மனப்பாங்கை மாற்றிட முயற்சிக்கவேண்டும்.”
- ”பாலினசார்பை எதிர்த்து போராடுவது ஆண்களின் கடமை. துணைவர்களாக, பார்ட்னர்களாக, காதலர்களாக சமமான உறவை உண்டாக்க நாம் கடினமாக உழைக்க வேண்டும், மற்றும் இதற்காக முயற்சிக்க வேண்டும்.”
- ”பெண்களை பாலின அடிப்படையில் மட்டம் தட்டுவதும், ஆண்களை அதே காரணத்துக்காக புகழும் போக்கையும் மாற்றிட வேண்டும்.”
- ”என் வாழ்க்கையில் முக்கியமான மனிதர்களாக எப்போதும் பெண்களாகவே இருந்துள்ளனர். வளரும் நாடுகளில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக பாடுபட்ட, தனியாக வாழந்த அம்மாவால் நான் வளர்க்கப்பட்டேன். என்னை வளர்க்க உதவிய பாட்டி, ஒரு வங்கியில் கடினமாக உழைத்தும் ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டதை பார்த்திருக்கிறேன். மிச்சல் தனது பணி மற்றும் குடும்பப் பொறுப்பை சமமாக கையாள்வதை பார்த்திருக்கிறேன்.”
”என் மகள்கள் மற்றும் உங்கள் மகள்கள் நலனுக்காக நான் அவர்களுக்காகப் போராடுவதை நிறுத்துக்கொள்ள மாட்டேன்...”
ஆங்கில கட்டுரையாளர்: தன்வி தூபே | தமிழில்: சைபர்சிம்மன்