அன்று அலுவலக உதவியாளர்; இன்று பல கோடி மதிப்பு ஐடி நிறுவனத்தின் உரிமையாளர்!
தெலுங்கானா நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக இருந்து, ஆர்வம் மற்றும் விடாமுயற்சி காரணமாக திறமைகளை வளர்த்துக்கொண்டு இன்று ஐடி நிறுவனத்தின் சி.இ.ஓவாக உயர்ந்துள்ள மனிதரின் ஊக்கம் அளிக்கும் வெற்றிக்கதை.
தெலுங்கானாவில் இருபது ஆண்டுகளுக்கு முன், மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக தனது பணி வாழ்க்கையை துவக்கிய பனிராஜ் ஜலிகமா, 5 மில்லியன் டாலர் ஆண்டு வருமானம் கொண்ட 'ஓஜாஸ் இன்னவேட்டிவ் டெக்னாலஜி' (Ojas Innovative Technology Pvt Ltd) நிறுவனத்தின் சி.இ.ஓவாக பின்னாளில் உருவாவோம் என நினைத்து பார்த்திருக்க மட்டார்.
செயலி உருவாக்கத்தில் செலவு குறைந்த சேவை, அடையாள நிர்வாகம், பென்பொருள் சேவைகள், ஊழியர் மேம்பாடு உள்ளிட்டவற்றில் ஐடி சேவைகளை வழங்கும் நிறுவனமாக ஓஜாஸ் விளங்குகிறது.
”உங்கள் வாழ்க்கையின் விதி கோள்களிடம் இல்லை, உங்கள் கைகளில் இருக்கிறது,” எனும் ஷேக்ஸ்பியர் வரிகளுக்கு ஏற்ப பனிராஜ் தனது வாழ்க்கையை தானே உருவாக்கிக் கொண்டார்.
வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் வெற்றி பெறுவதற்கான மன உறுதி கொண்ட பனிராஜ் வாழ்க்கைப் பயணம், அலுவலக உதவியாளரில் இருந்து, ஐடி நிறுவனத்தின் செயல் அதிகாரியாக, முன்னணி வர்த்தக நிறுவனத்தின் மூத்த மேலாளராக என பல்வேறு நிலைகளில் முன்னேறி வந்திருக்கிறது.
எளிய துவக்கம்
தெந்லுங்கானாவின் பெட்டபள்ளி எனும் சிறிய ஊரில் வளர்ந்த பனிராஜ் 12ம் வகுப்பை முடித்ததும் டைப்ரைட்டிங் கற்றுக்கொண்டார். அதன் பிறகு கரீம்நகர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகச் சேர்ந்தார். அங்கு குமாஸ்தாவாக பதவி உயர்வு பெற 20 ஆண்டுகள் ஆனது.
"அப்போது குறுக்கெழுத்து எழுத்தாளர்கள் பணிக்கு 1 இடம் தான் காலியாக இருந்தது. என்னிடம் சான்றிதழ் இருந்தால் எளிதாக பதவி உயர்வு கிடைத்திருக்கும். செகந்திராபாத்தில் ஒருவரிடம் இதற்கான பயிற்சி பெற்றேன். 195 கிமீ சென்று பயிற்சி பெறுவதற்காக இரவில் பாதுகாவலராக பணியாற்றினேன்,” என்கிறார் பனிராஜ்.
ஆறு மாதங்களில் அவர் குறுக்கெழுத்து தேர்வில் வெற்றி பெற்று, பதவி உயர்வுக்காக மாவட்ட நீதிபதியை அணுகினார். 28 சக ஊழியர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர் 2003ல் காபியிஸ்ட்டாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் இத்துடன் நின்றுவிடவில்லை.
பனிராஜின் மனைவி ஸ்ரீலதா அப்போது கரீம்நகரில் கம்ப்யூட்டர் துறையில் விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், நல்ல சம்பளம் கிடைக்கக் கூடிய ஐடி துறையில் வேலைக்குச் செல்ல வேண்டும் என ஸ்ரீலதா நினைத்தார். அப்போது தான் பனிராஜ் வேலையில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு எம்பிஏ அல்லது சட்டப்படிப்பு படிக்க முடியும் என தீர்மானித்தனர்.
2006ல் பனிராஜ் புனேவைச்சேர்ந்த ஐடி சேவை நிறுவனத்தில் செயல் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மாவட்ட நீதிமன்ற வேலையை ராஜினாமா செய்து இந்த வேலையை ஏற்றுக்கொண்டார். சில மாதங்களில் அவரது மனைவியும் அதே நிறுவனத்தில் மென்பொருள் சோதனை பிரிவில் வேலைக்கு சேர்ந்தார்.
பாதுகாப்பான அரசு வேலையை விட்டு விலகியதற்காக நண்பர்கள், உறவினர்கள் விமர்சனத்திற்கு இலக்கானாலும், இந்த தம்பதி மனம் தளரவில்லை.
தொழில் வளர்ச்சி
ஐதராபாத் கல்லூரி ஒன்றில் பட்டம் பெற்ற பனிராஜ், புனே பல்கலையில் கம்ப்யூட்டர் அறிவியலில் பட்டயம் பெற்றார்.
2011ல் அவர் டிசிஎஸ் நிறுவனத்தில் மூத்த மேலாளர் எனும் நிலையை அடைந்தார்.
இதே காலத்தில், பிஎம்சி சாப்ட்வேர் நிறுவன சகா அருண் குமார் என்பவரைச்சந்தித்தார். இருவரும் இணைந்து ஓஜாஸ் நிறுவனத்திற்கு அடித்தளம் அமைத்தனர். இருப்பினும் பனிராஜால், டிசிஎஸ் நிறுவன பணிச்சுமை காரணமாக ஓஜாஸ் நிறுவனத்தின் தினசரி பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒராண்டுக்குப்பிறகு அவர் ஓஜாஸ் நிறுவன செயல்பாடுகளில் இருந்து விலகிக் கொள்வதே சரி எனத் தீர்மானித்தார்.
2014ல் அவர் எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பித்தார். இறுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த போது, அவருக்கு பயிற்சி அளிக்க வந்திருந்த ஐஐஎம் பட்டதாரி மனிஷ் அரோராவைச் சந்தித்தார்.
"நீங்கள் பெரிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறீர்கள். அவற்றின் செயல்முறைகளை வெற்றிகரமாக கையாண்டிருக்கிறீர்கள். ஆனால் எதையாவது நீங்களே உருவாக்கி இருக்கிறிர்களா? எந்த சூழலும் இல்லாத நிலையில் புதிதாக ஒன்றை துவக்கியிருக்கிறீர்களா? துவக்கத்தில் இருந்து திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறீர்களா?’ என மனிஷ் அவரிடம் கேட்டார்.
2015ல் பனிராஜ், காக்னிசண்ட் நிறுவனத்தில் செயல்பாடுகளுக்கான இணை இயக்குனராக சேர்ந்தார். மனிஷ் கேட்ட கேள்வி அவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே ஆண்டு ஐதராபாத்திற்கு சென்று பார்த்த போது ஓஜாஸ் நிறுவனம் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் கையகப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதை தெரிந்து கொண்டார். அதே நேரத்தில், அருண் அவரிடம் வர்த்தக வளர்ச்சி வியூகத்தை வகுக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அவரும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக்கொண்டார்.
"நான் மற்ற நிறுவனங்களுக்காக வேலை செய்து கொண்டிருந்தேன். அவர்கள் நிறுவனம் வளர் உதவி செய்துக்கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய அனுபவம் மற்றும் அருண் குமாரின் தொழில்நுட்ப ஆற்றலின் பலனாக இதுவே சரியான முடிவு என கருதினேன்,” என்கிறார் பனிராஜ்.
2017ல் பனிராஜ், மற்ற பொறுப்புகளில் இருந்து விடுவித்துக்கொண்டு ஓஜாஸ் நிறுவன சி.இ.ஓவாக பதிவியேற்றுக்கொண்டார்.
வெற்றிப் பயண சவால்கள்
எல்லா ஸ்டார்ட் அப்கள் போலவேம் ஓஜாஸ் நிறுவனமும் நிறைய சவால்களை எதிர்கொண்டது. நிறுவனர்கள் நிறுவன அமைப்பை மாற்றி, பனிராஜை ஏற்றுக்கொள்ளக்கூடிய புரோமோட்டர்களை கொண்டு வர வேண்டியிருந்தது. அதே நேரத்தில் மென்பொருள் பொறியாளர்கள் நிறுவனத்தின் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயங்கினர். வாடிக்கையாளர்களும் சிறிய நிறுவத்தை நம்ப தயங்கினர்.
ஆனால் சவால்களை சமாளித்து, ஐடி சேவைத்துறையில் நிலைப்பெற்று சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய நிறுவனர்கள் விரும்பினர்.
2019ல் பனிராஜ், தற்போதைய இயக்குனர் உதய் சர்த்சாலாவுடன் அமெரிக்கா சென்று புதிய வர்த்தகத்தை பெற்றார். அதே ஆண்டு அமெரிக்காவில் அலுவலகம் துவக்கி, ஒரு மில்லியன் அளவு வருவாய் ஈட்டினர்.
"அதிக தேவை கொண்ட துறைகளில் திறமை வாய்ந்த ஐடி ஊழியர்களைக் கொண்டிருந்தது, போட்டி நிறுவனங்களை விட எங்களுக்கு சாதகத்தை அளித்தது. மேலும். செலவு குறைந்த ஐடி சேவை பங்குதாரர் எனும் வாசகத்தையும் முழுவதுமாக நம்பினோம்,” என்கிறார் பனிராஜ்.
"ஒரு காலத்தில் நிலக்கரி தங்கமாக இருந்தது, அதன் பிறகு பெட்ரோல் தங்கமாக கருதப்பட்டது, இப்போது, பல துறை திறன் படைத்த ஊழியர்கள் தான் தங்கம் என என்னுடைய குழு தலைமையிடம் அடிக்கடிக் கூறுவது உண்டு. திறன் வாய்ந்த ஊழியர் வளம் இருக்கும் வரை வளர்ச்சி உறுதி,” என்கிறார்.
புதிய ஊழியர்கள்
ஓஜாஸ் நிறுவனத்தில் புதியவர்கள் மற்றும் அனுபவசாலிகள் என இரு தரப்பினரையும் பணிக்கு எடுத்துக்கொள்கின்றனர். புதிதாக வருபவர்களுக்கு திறன் வளர்ச்சி அல்லது பயிற்சி தேவைப்படும் போது நிறுவனம் அதற்கு உதவும் வகையில், ஓஜாஸ் இண்டர்ன்ஷிப் லைப் சைக்கிள் எனும் திட்டத்தை வைத்துள்ளது. ஐந்து கட்டங்கள் கொண்ட பயிற்சியாக இது அமைகிறது.
பயிற்சி நிலை ஊழியர்கள் ஓஜாஸ் திட்டங்களில் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பை பெறுகின்றனர். நிறுவன உள் மதிப்பீட்டிற்கு பிறகு அவர்கள் திட்டங்களில் இணைக்கப்படுகின்றனர்.
"எதிர்கால தேவையை ஈடு செய்யும் ஊழியர்கள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் எப்போதும் 40-15 சதவீத பணியாளர்கள் இந்த திட்டத்தில் இடம்பெறும் வகையில் பார்த்துக்கொள்கிறோம்” என்கிறார் பனிராஜ்.
வளர்ச்சி
கோவிட்-19 பெருந்தொற்று தாக்கிய போது, ஓஜாஸ் ஊழியர்கள் பல்வேறு வாடிக்கையாளர்கள் இடங்களில் சிக்கி கொண்டனர். ஒரு சில வாடிக்கையாளர்கள் குறித்த நேரத்தில் பணமும் தரவில்லை. நிறுவன வருவாய், 0.27 மில்லியன் டாலரில் இருந்து 0.1 மில்லியன் டாலராக குறைந்தது.
உறுதியான தலைமை காரணமாக, ஓஜாஸ் பெருந்தொற்று சவாலை திறம்பட சமாளித்து 2020 ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தகம் மீண்டது. நிறுவனம் நிலைமையை சமாளிக்க இணைய வழி பயிற்சியில் ஈடுபட்டது.
இன்று நிறுவனம் காக்னிசண்ட், டெக் மகிந்திரா, கேபக்மினி, எக்ஸைடு பைப் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் ஐந்து வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 700க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், ஐதராபாத், லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் அலுவலகங்களை கொண்டுள்ளது.
2020 ல் நிறுவனம் 3.19 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. இந்த காலாண்டில் இதுவரை 1.32 மில்லியன் டாலர் ஈட்டியுள்ளது.
"இந்த நிதியாண்டில் 6.85 மில்லியன் டாலர் ஈட்டுவோம் என நம்புகிறோம். நாங்கள் நம்பும் விழுமியங்கள் மற்றும் சிறந்த தலைமையால் இது சாத்தியம்,” என்கிறார் பனிராஜ்.
பெரிய கனவு
அடுத்த சில ஆண்டுகளில் நிறுவனம் 15 மில்லியன் டாலர் வருவாயை அடைய திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்தில் வர்த்தகம் இருந்தாலும், பெருந்தொற்று சூழல் காரணமாக அங்கு செயல்பாட்டை துவக்கவில்லை. பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும், அங்கு செயல்பாட்டை துவக்கி ஐரோப்பாவிலும் கணிசமான வர்த்தகத்தை அடைய திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ஜஸ்டஸ் | தமிழில்: சைபர் சிம்மன்