ஓலா டிரைவரான ஒலிம்பிக் சேம்பியன்? - வைரலான செய்தி உண்மையா?
ஒலிம்பிப் போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கங்களை பெற்றுத்தந்த பராக், இன்று ஓலா டிரைவராக வாழ்க்கையை ஓட்டுகிறார் என்ற செய்தி, இணையத்தில் வைரலாகி எண்ணற்றோரின் மனதை கனக்கச் செய்தது. ஆனால், அவர் ஒரு ஒலிம்பிக் சாம்பியன் தானா? என்று ஃபேக்ட்-செக் செய்ததில் தெரிந்தது உண்மை...
மும்பையைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவோரின் அன்றாட டாக்ஸி பயணம், அவரது ஓலா ஓட்டுநர் முன்னாள் ஒலிம்பிக் வீரர் என்பதைக் கண்டறிந்தபோது ஒரு அசாதாரண அனுபவமாக மாறியது. ஆம், ஒலிம்பிப் போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கங்களை பெற்றுத்தந்த அவர், இன்று ஓலா டிரைவராக வாழ்க்கையை ஓட்டுகிறார் என்ற செய்தி, இணையத்தில் வைரலாகி எண்ணற்றோரின் மனதை கனக்கச் செய்தது. ஆனால், அவர் ஒரு ஒலிம்பியன் தானா? என்று ஃபேக்ட் செய்ததில் தெரிந்தது உண்மை...
வைரலான செய்தி..!
மும்பையைச் சேர்ந்த தொழில்முனைவரான ஆரியன் சிங் குஷ்வா, ஓலா காரில் பயணம் செய்துள்ளார். பயணத்தில் ஓட்டுநராக வந்தவரிடம் உரையாடியதில், அவர் ஒரு ஒலிம்பிக் வீரர் என்பதை அறிந்து திகைத்து போனார். அவரது கதையை கேட்டறிந்ததுடன், அச்சந்திப்பை குறித்து, அவரது லிங்க்ட்இன் கணக்கில் பதிவு செய்தார். நாட்டிற்காகப் பதக்கம் பெற்று தந்தவருக்கு நேர்ந்த இந்நிலை வைரலாக, இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அரசு அளிக்கும் ஆதரவு குறித்தும் இணையவாசிகளிடையே விவாதமாகியது. அவரது பதிவில்,
"எனது ஓலா ஓட்டுநர் ஒரு ஒலிம்பியன். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மும்முறை தாண்டுதலில் 2 இடமும், நீளம் தாண்டுதலில் 3வது இடம் பெற்ற மூத்த ஒலிம்பியன் பராக் பாடிலைப் பாருங்கள். சர்வதேச அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒவ்வொரு முறையும், அவர் பதக்கம் இல்லாமல் திரும்பியதில்லை. 2 தங்கம், 11 வெள்ளி, 3 வெண்கலங்களை பெற்றுள்ளார்."
இருப்பினும், அவருக்கு ஸ்பான்சர்கள் யாரும் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்திற்கு உணவளிக்க போதுமான நிதியும் இல்லாததால், அவரது தடகள வாழ்க்கையை அவர் தொடரவில்லை. சர்வதேச அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற பராக்கிற்கு ஸ்பான்சராக உதவ எவரேனும் இருப்பினும் அவர்களுக்கானது இந்த பதிவு," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவு பரவலான கவனத்தைப் பெற்று, இணையவாசிகளிடையே உணர்ச்சிகளையும் விவாதங்களையும் தூண்டியது. ஒரு பயனர், "இது ஊக்கமளிக்கும் மற்றும் இதயத்தை உடைக்கும் கதை!" என்று கருத்து தெரிவித்தார். மற்றொரு பயனர், தடகள வீரரின் நிலையை எடுத்துரைத்து, "நமது விளையாட்டு ஜாம்பவான்கள் இதை விட சிறந்ததை அடைய வேண்டும். ஒரு தேசமாக நாம் முன்னேற வேண்டும்," என்று பதிவிட்டிருந்தார்.
மற்றொருவர், "ஓய்வுக்குப் பிறகு விளையாட்டு வீரர்களுக்கு நிலையான திட்டங்கள் ஏன் இல்லை? இதற்கு அவசர கவனம் தேவை!" என்று எழுதியிருந்தார். மற்றொருவர் பிராண்டுகள் மற்றும் அமைப்புகளை பாட்டிலுக்கு நிதியுதவி செய்ய வலியுறுத்தினார், "இதற்கு கூட்டமாக நிதியளிப்போம். பராக் பிரகாசிக்க மற்றொரு வாய்ப்புக்கு தகுதியானவர்," என்று கருத்து தெரிவித்திருந்தார்.
செய்தியின் பின்புலம்..!
எத்தனை எத்தனை கனவுகளோடு விளையாட்டில் சாதிக்க தொடங்கிய ஒலிம்பியன் ஒருவர், ஓலா டிரைவராக வாழ்க்கையை கடத்தி கொண்டிருக்கிறார் என்பது மனதை கணக்கச் செய்தது. அத்துடன், இந்த LinkedIn பதிவின் அடிப்படையில், பல ஊடகங்கள் பாட்டீலின் கதையை வெளியிட்டன. அதில் பாட்டீல் ஒரு ஒலிம்பியன் என்றும் அவரது பதக்கங்கள் ஒலிம்பிக் போட்டிகளில் வென்றவை என்றும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.
லிங்க்ட்இன் பதிவு மற்றும் அதைத் தொடர்ந்து வெளியாகிய செய்திகளில் கூறப்பட்ட கூற்றுகளை பி.டி.ஐ உண்மைச் சரிபார்ப்பு மையம் விசாரித்தது. ஒலிம்பிக் போட்டிகளில் பாட்டீல் ஒருபோதும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதில்லை என்பது கண்டறியப்பட்டது. அதற்கு பதிலாக, அவர் உலக சீனியர் விளையாட்டு மற்றும் பிற இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டிகளில் பங்கேற்றார். இருப்பினும்கூட, குஷ்வாவின் பதிவை நம்பியிருந்த கட்டுரைகள், பாட்டிலின் பதக்கங்கள் ஒலிம்பிக் போட்டிகளில் வென்றவை, என்ற தோற்றத்தை ஏற்படுத்தின.
ஆரியன் அவரது LinkedIn பதிவில், பாட்டீலின் LinkedIn கணக்கை டேக் செய்திருந்தது. அதில் அவர் தன்னை 'பராக் பாட்டில் சீனியர் ஒலிம்பியன்' என்று குறிப்பிட்டுள்ளார். அவரது புரோஃபைலில், அவர் அனைத்து சாதனைகளையும் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, எந்த ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெறுவது அல்லது பங்கேற்பது பற்றி அவர் எங்கும் குறிப்பிடவில்லை.
பாட்டிலின் LinkedIn -ல் பகிர்ந்திருந்த பதக்கங்களின் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
தவறான செய்தி
பாட்டீல் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்காக நடத்தப்படும் சீனியர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், அவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் எந்த தொடர்பும் இல்லை அல்லது ஒலிம்பிக் போட்டிகளுடன் எங்கும் தொடர்பு அற்றவை என்பதை பிடிஐ கண்டறிந்தது.
மேலும், விசாரணையின்போது, அக்டோபர் 24, 2019 அன்று பராக் பற்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியை கண்டுள்ளது. அதில்,
"சின்ச்வாடைச் சேர்ந்த தடகள வீரரான பராக் பாட்டீல், 2019ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி முதல் அக்டோபர் 12 வரை அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் கேம்ஸில் நான்கு வெள்ளிப் பதக்கங்களையும் ஒரு வெண்கலத்தையும் வென்றார். 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரி மட்டங்களில் ஒரு தடகள வீரராக அவரது பயணத்தைத் தொடங்கினார்.
அதன் பிறகு, 2010ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டுக்கு இடையில் 12 சர்வதேச பதக்கங்களை வென்றார். ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் கேம்ஸ்க்குப் பிறகு, அவரது மொத்த பதக்க எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, ஆசியாவில் உலக மாஸ்டர்ஸ் தரவரிசையில் டிரிபிள் ஜம்பில் இரண்டாவது இடத்தையும், நீளம் தாண்டுதலில் மூன்றாவது இடத்தையும், 100 மீட்டர் பிரிவுகளில் ஐந்தாவது இடத்தையும் அவர் பிடித்துள்ளார்," என்று குறிப்பிட்டிருந்தது.
விசாரணையின் அடுத்த பகுதியாக, வைரலான லிங்க்ட்இன் பதிவு மற்றும் தொடர்புடைய செய்தி அறிக்கைகள் குறித்த விவரங்களைக் கோரி, PTI இன் பணியகத்தின் (விளையாட்டு) தலைவர் பூனம் மெஹ்ராவிடம பேசி உள்ளது.
"இது ஒலிம்பிக் அல்ல, இது உலக சீனியர் விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டி. இது பெரும்பாலும் அமெரிக்காவில் நடக்கும். இதை சீனியர் ஒலிம்பிக் என்று அழைப்பது முற்றிலும் முறைசாரானது மற்றும் தவறானது. ஏனெனில், ஒலிம்பிக் என்பது ஐஓசியின் வர்த்தக முத்திரை. எனவே, இது முற்றிலும் தவறான கூற்று," என்று அவர் கூறினார்.
பல தடகளப் போட்டிகளில் கலந்துக்கொண்டு பராக் பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், அவர் எந்த ஒலிம்பிக் நிகழ்விலும் பங்கேற்கவில்லை அல்லது பதக்கம் வெல்லவில்லை, என்பது தெளிவாகிறது.
பாட்டீலின் சாதனைகள் சந்தேகத்திற்கு இடமின்றி பாராட்டத்தக்கவை என்றாலும், வேறுபாட்டைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை பி.டி.ஐ உண்மைச் சரிபார்ப்பு வலியுறுத்துகிறது. தவறான தகவல் பரவுவதற்கு தவறான தலைப்புச் செய்திகள் எவ்வாறு பங்களிக்கக்கூடும் என்பதை இந்த செய்தி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வேப்பிலை, எலுமிச்சையால் புற்றுநோய் குணமானதா? ரூ.850 கோடி கேட்டு சித்து மனைவிக்கு நோட்டீஸ்!