Ola Electric: பேட்டரி ஆராய்ச்சியில் $100 மில்லியன் முதலீடு செய்துள்ளது ஓலா!
ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பவிஷ் அகர்வால் சமூக ஊடக தளமான ட்விட்டரில் நிறுவனம் தனது முதல் லி-அயன் செல்லை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வால் சமூக ஊடக தளமான ட்விட்டரில் ஓலா நிறுவனம் தனது முதல் Li-ion செல்லை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. ஆரம்பத்தில் ஓலா நிறுவனத்தில் இ-ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்த மவுசு, ஸ்கூட்டர்களில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக சரிய ஆரம்பித்தது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அரங்கேறின. இதனால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கவே மக்கள் அச்சப்பட ஆரம்பித்தனர். இதனையடுத்து, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முன்பக்க சக்கரம் தானாகவே கழன்று விழுவதாகவும், இதனால் நடுரோட்டில் விபத்துக்கள் நிகழ்ந்ததாகவும் வாடிக்கையாளர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்த புகைப்படங்கள் பகீர் கிளப்பின.
இப்படியான காரணங்களால் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சரிய ஆரம்பித்தது. ஜூன் மாத கணக்கீட்டின் படி 5,869 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
பேட்டரியில் ஏற்படும் பழுது காரணமாகவே ஓலா ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பதாக கூறப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்களின் அச்சத்தை போக்க ஓலா நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் லி-அயன் (Li-ion) செல்லை உருவாக்க உள்ளதாகவும், பேட்டரி ஆராய்ச்சிக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளதாகவும் அந்நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
"செல் என்பது EV புரட்சியின் இதயம். நாம் நமது சொந்த தொழில்நுட்பத்தை வேகமாகவும், புதுமையாகவும் உருவாக்க வேண்டும். எங்களது புதிய செல் தொழில்நுட்பத்தில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை கொண்டு வர உள்ளது,” என பதிவிட்டுள்ளார்.
தரகு அறிக்கைகளின்படி, ஓலா எலக்ட்ரிக் தனது பேட்டரி செல்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக $100 மில்லியன் வரை முதலீடு செய்துள்ளது. இந்த வாரம் நிறுவனம் தனது முதல் உள்நாட்டு செல்லை உருவாக்கியுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் செலவை உறுதிபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
ஐசிஐசிஐ மற்றும் எடெல்வைஸ் தரகு அறிக்கைகளின்படி, மின்சார வாகன உற்பத்தியில் பேட்டரி செல்கள் மிகவும் விலையுயர்ந்த கூறுகளாகும். சொந்தமாக லி-அயன் செல்லை உருவாக்குவதன் மூலமாக, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது செலவுகளை 30 சதவீதம் குறைக்க முடியும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக வலுவான ஆதாரவை ஓலா நிறுவனம் கொடுத்துள்ளது. அதாவது, புதிய Li-ion செல்லை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ள நிறுவனம், 100 ஆராய்ச்சியாளர்களையும் பணியமர்த்தியுள்ளது.
தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான செல்களை தென்கொரிய நிறுவனமான எல்ஜி கெமிடமிருந்து வாங்கி வருகிறது. மேலும், தென் கொரிய நிறுவனத்தை சார்ந்திருப்பதை குறைக்கும் விதமாக புதிய லி-அயன் செல்லை 20GWh செயல் திறனுடன் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓலா 2026க்குள் அதனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் - தருதர் மல்ஹோத்ரா | தமிழில் - கனிமொழி