2 நாட்களில், ரூ.1,100 கோடிக்கு மேல் ஓலா ஸ்கூட்டர் விற்பனை: நவம்பர் 1ம் தேதி மீண்டும் ஆபர் விலை!
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி மீண்டும் ஆபர்!
மின்சார வாகன சந்தையில், குறிப்பாக இந்திய வரலாற்றில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய சாதனையை நிகழ்த்தி வருகிறது. நேற்றுமுன்தினம் தான் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தொடங்கியது.
S1, Ola S1 Pro ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் முதல் நாளில் இருந்தே விறுவிறுப்பாக சென்றது. விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே 600 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஸ்கூட்டர்களை விற்று சாதனை படைத்திருக்கிறது ஓலா. அதிலும், ஒவ்வொரு நொடியும் 4 ஸ்கூட்டர்களை விற்றிருக்கிறது.
நேற்றுடன், ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோவை வாங்குவதற்கான இறுதிநாள் முடிந்தது. முதல்நாள் வரவேற்பை போல இரண்டாம் நாளும் ஓலா வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இரண்டாம் நாளில் மட்டும் 500 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்திருக்கிறது ஓலா.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால்,
"முதல் நாள் விற்பனை நமக்கும் ஆட்டோ மொபைல் தொழில்துறைக்கும் முன்னோடியில்லாத வகையில் அமைந்தது. என்றாலும், இரண்டாம் நாள் விற்பனை முதல் நாள் விட்டுவிட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது.
எங்கள் தயாரிப்புகள் மீது வாடிக்கையாளர்கள் காட்டிய விருப்பம் மற்றும் உற்சாகம் அதிகமாக இருந்தது. மொத்தம் 2 நாட்களில், நாங்கள் 1100 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்துள்ளோம்! இது வாகனத் துறையில் மட்டுமல்ல, இந்திய இ-காமர்ஸ் வரலாற்றில் ஒரு பொருளின் முதல் நாள் விற்பனையில் அதிகபட்சமாகும். நாம் உண்மையில் டிஜிட்டல் இந்தியாவில் வாழ்கிறோம், என்றார்.
முதல் இரண்டு நாள்களுக்கான விற்பனை பக்கம் இனி மூடப்பட்டிருக்கும். என்றாலும் olaelectric.com மூலமாக முன்பதிவுகள் செய்யலாம். மேலும், தீபாவளிக்கு சரியான நேரத்தில் நவம்பர் 1, 2021 அன்று மீண்டும் சலுகை விலையிலான விற்பனை பக்கம் மீண்டும் ஓப்பனிங் செய்யப்படும் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோவை வாங்க விரும்பினால், விரைவில் முன்பதிவு செய்ய நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.
முன்பதிவு செய்திருந்தாலும் நேற்று முடிவடைந்த முன்பதிவில் வாங்காதவர்களும் நவம்பர் 1 ஆம் தேதி வாங்கலாம்.கடந்த 2 நாட்களும் ஒரே நேரத்தில் உற்சாகமாகவும் மனநிறைவாகவும் இருந்தது. எங்கள் தயாரிப்புகளை வாங்கிய உங்கள் அனைவருக்கும் ஓலாவில் உள்ள எங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றி. இந்தியாவை மின்சார எதிர்காலத்திற்கு கொண்டு செல்லும் உண்மையான புதிய கால புரட்சியாளர்கள் நீங்கள்!" என்று பதிவிட்டு இருக்கிறார்.