பயன்படுத்திய கார் விற்பனைப் பிரிவில் நுழைகிறது ஓலா!
போக்குவரத்துத் துறை ஜாம்பவனான ஓலா நிறுவனம் பயன்படுத்திய கார்கள் விற்பனை- வாங்கல் துறையில் அடியெடுத்து வைத்துள்ளது
எலெக்ட்ரிக் மின் வாகனத்தை அறிமுகம் செய்ய ஓலா தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், நிறுவனம் ஓலா கார்ஸ் மூலம் பயன்படுத்திய கார்கள் விற்பனை பிரிவில் நுழைந்துள்ளது.
ஓலா நிறுவனம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், இந்த செயலியில், பலவிதமான கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், கடன் மற்றும் நிதி வசதிக்காக நிதி நிறுவனங்களுடன் கூட்டும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
ஓலா நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு பராமரிப்பு மற்றும் சேவை வசதியையும் அளிக்கிறது.
கடந்த 2019ல் ஓலா நிறுவனம், ‘ஓலா டிரைவ்’ எனும் பெயரில் சுய டிரைவிங் கார் வசதியை அறிமுகம் செய்தது. அப்போது இரண்டு முதல் மூன்று மாத கால சேவையை வழங்கியது. ரூ.2,000 டெபாசிட் செலுத்தி இந்த வசதியை அணுகும் வாய்ப்பு இருந்தது.
இதனிடையே, கொரோனா தொற்றால் போக்குவரத்து வர்த்தகத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நிறுவனம் இப்போது 70 சதவீத மீட்சியை கண்டிருப்பதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, ஓலா நிறுவனம் ஊழியர்களுக்கான பங்கு வாய்ப்பை (ESOP) ரூ.3,000 கோடிக்கு விரிவுப் படுத்தியுள்ளது.
இந்த மாதத் துவக்கத்தில், ஓலா எலெக்டிரிக் மற்றும் பரோடா வங்கி, ஓலா பியூச்சர் பேக்டரி முதல் கட்டத்திற்கான நிதி தொடர்பாக 10 ஆண்டுக்கான 100 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது மின்வாகனங்களுக்கான சர்வதேச உற்பத்தி ஆலையாகும். இந்திய மின்வாகன துறையில் ஏற்பட்டுள்ள நீண்ட கால கடன் வசதி ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான நிறுவன அறிக்கையின்படி, இந்த ஆலைப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஓலா ஸ்கூட்டரின் உற்பத்தி முன்னோட்டம் ஆகஸ்ட் 15ம் தேதி துவங்க உள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்