ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா இ-பைக் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்ன?
விலை எவ்வளவு?!
ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நிறுவியது. இந்த ஆலை கட்டுமானத்தின் முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் தயாரிப்பு மேற்கொள்ளவுள்ளது. ஆண்டுக்கு 10 மில்லியன் வாகனங்கள் தயாரிக்கும் வகையில் அடுத்த ஆண்டுக்குள் ஆலை முழு அளவில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சமீபத்தில் தனது ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஆரம்பித்தது. 499 ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் ஓலா ஸ்கூட்டரை olaelectric.com தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் இந்த தொகை திருப்பிச் செலுத்தக்கூடிய வைப்புத்தொகையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் 1,00,000 முன்பதிவுகளைப் பெற்றது.
இந்தநிலையில், தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி செய்யவிருக்கிறது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம். இது தொடர்பாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால்,
“எங்கள் ஸ்கூட்டரை முன்பதிவு செய்த அனைவருக்கும் நன்றி! ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஓலா ஸ்கூட்டருக்கான அறிமுக நிகழ்வை திட்டமிட்டுள்ளோம்," என்று பதிவிட்டு இருந்தார். அன்றைய தினமே இதன் விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, ஸ்கூட்டர் டெலிவரியில் டெஸ்லா நிறுவனத்தின் பாணியை ஓலா நிறுவனம் பின்பற்ற இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டீலர்ஷிப் என்ற பழைய முறை இல்லாமல், வண்டியை முன்பதிவு செய்பவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கேச் சென்று டெலிவரி செய்ய இருக்கின்றனர் ஓலா நிறுவனத்தினர்.
இந்த பாணிக்கு DTC (Direct to Customer) என்றும் ஓலா பெயர் வைத்திருக்கிறாதாம், என்றாலும், சர்வீஸுக்கு மட்டும் சர்வீஸ் சென்டர்கள் திறக்க இருக்கிறது என்று கூறப்படுகிறது. சர்வீஸ் புக்கிங்கை ஆன்லைனிலேயே மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், ஓலா இ-ஸ்கூட்டரின் சில அம்சங்கள் வெளியாகியுள்ளன.
சிறப்பம்சங்கள்!
* இந்த இ -ஸ்கூட்டரின் பூட் ஸ்பேஸ் 50 லிட்டர். இதில் 2 ஹெல்மெட்களை வைக்கும் அளவுக்கு இடவசதி!
* ஸ்கூட்டரின் எடை 80 கிலோ அளவு மட்டுமே இருக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளதாம்
* பின்பக்க டிஸ்க் பிரேக்கும் உண்டு.
* புளூடூத் கனெக்ட்டிவிட்டி, ஜிபிஎஸ், டச் ஸ்க்ரீன், எல்இடி ஹெட்லைட்ஸ் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளது!
* டிரைவ் ரேஞ்ச் 130–150 கிமீ வரை.
* அதிகாரப்பூர்வமாக விலை அறிவிக்கப்படாத நிலையில் இதன் ஆன் ரோடு விலை 1.25 லட்சத்துக்குள் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.