ஒரு முறை சார்ஜ் செய்து 181 கிமீ பயணம்: விலை ரூ.99,999: ஓலா-வின் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா மின்ஸ்கூட்டர்களின் அறிமுகம் மற்றும் விலை தொடர்பான விவரங்களை ஓலா வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து ஜாம்பவன் நிறுவனமான ஓலா தனது மின் ஸ்கூட்டர் ரகங்களை இன்று சொன்னபடி அறிமுகம் செய்துள்ளது. எஸ் 1 மற்றும் எஸ் 1 புரோ ஆகிய இரண்டு ரகங்களில் மின் ஸ்கூட்டர்கள் அறிமுகம் ஆகின்றன.
ஓலா எஸ் 1 மின் ஸ்கூட்டர் ரூ.99,999 எனும் விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓலா நிறுவனம் மின்வாகனத் தயாரிப்பில் பெரிய அளவில் திட்டமிட்டு தமிழகத்தின் ஓசூர் அருகே உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஆன்லைன் பதிவு அண்மையில் துவங்கி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஓலா தனது மின்ஸ்கூட்டர்களை இன்று நன்பகல் அறிமுகம் செய்தது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், போக்குவரத்துத் துறையில் ஒரு புரட்சி தேவை என்றும், பெட்ரொலில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் ஓலா தெரிவித்துள்ளது.
இந்த புரட்சி ஓலாவின் இந்திய ஆலையில் இருந்து துவங்குவதாகவும் ஓலா தெரிவித்துள்ளது.
Ola S1 மின் ஸ்கூட்டர் ரூ.99,999 எனும் விலையிலும், Ola S1 Pro ரூ.1,29,999 எனும் விலையிலும் கிடைக்கும் என ஓலா அறிவித்துள்ளது.
ஓலா ஸ்கூட்டர்கள் பிரத்யேகமான சிப்களை கொண்டிருப்பதாகவும், வாகன ஓட்டிகள் விரும்பிய வாகன ஒலியை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையை கேட்டு ரசிக்கும் வகையில் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தகவல்களை அளிக்கும் வரைபட (மேப்) வசதியும் உள்ளடக்கியுள்ளது.
நிகழ் நேர தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு அமசங்களையும் மின்ஸ்கூட்டர்கள் கொண்டுள்ளன. ஸ்கூட்டர் தொடர்புடைய செயலி மூலம் இவற்றை இயக்கலாம். மூவ் ஓ.எஸ் எனும் புதிய பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், ஓலா ஸ்கூட்டர்களை குரல் மூலமும் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் மோடு வசதியும் பெற்றுள்ளது.
இந்த ஸ்கூட்டர் 3 விநாடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. பத்து வகையான வண்ணங்களில் கிடைக்கிறது. 115 கிமி வேகத்தில் செல்லக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 181 கிமீ வரை செல்லலாம்.
ஓலா மின் ஸ்கூட்டர் தொடர்பான அறிமுக விவரங்கள் டிவிட்டரில் வீடியோ மூலம் விளக்கமாக வெளியிடப்பட்டுள்ளன. அக்டோபர் முதல் வாகனங்கள் விற்பனைக்கு வருகின்றன.
தகவல் மற்றும் படங்கள் உதவி: ஓலா டிவிட்டர் பக்கம்