இந்தியாவின் 1,000 நகரங்களில் டெஸ்ட் ரைடு சேவை: ஓலா எலெக்ட்ரிக் புதிய முயற்சி!
நவம்பர் 27 முதல் தொடக்கம்!
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்க்கான வாடிக்கையாளர் டெஸ்ட் ரைடு (test rides) எனப்படும் சோதனை ஓட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. வரும் வாரங்களில் இது செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
விரிவாக்கத்தால் இந்தியா முழுவதும் உள்ள 1,000க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய முடியும் என்று ஓலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே டெஸ்ட் ரைடு செய்ய அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, நவம்பர் 10 ஆம் தேதி பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் டெஸ்ட் ரைடு வசதி செய்யப்பட்டது. பின்னர், நவம்பர் 19 ஆம் தேதி சென்னை, ஹைதராபாத், கொச்சி, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களுக்கு இந்த சேவை விரிவாக்கப்பட்டது.
டிசம்பர் 15-க்குள் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த வசதியை உறுதி செய்யும் வகையில், இப்போது மேலும் பல நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார்.
“எங்களின் S1 டெஸ்ட் ரைடுகளுக்கான ரெஸ்பான்ஸை கண்டு வியப்பும் பெருமையும் ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் இந்த வசதியை முயற்சி செய்து நேசித்துள்ளீர்கள். டிச.15க்குள் இந்தியா முழுவதும் 1000+ நகரங்களுக்கு டெஸ்ட் ரைடுகளை விரிவுபடுத்துகிறோம். இந்திய வாகன வரலாற்றில் இதுவே மிகப்பெரிய நேரடி நுகர்வோர் ரீச் ஆகும்!" என்று அதில் கூறியுள்ளார்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி அருண் சிர்தேஷ்முக் இதுதொடர்பாக கூறுகையில்,
“எங்கள் டெஸ்ட் ரைடு வசதிக்கு வாடிக்கையாளர்களின் ரெஸ்பான்ஸ் மிகவும் பாசிட்டிவ் ஆக உள்ளது. ஓலா எஸ்1 ஸ்கூட்டருக்கான வாடிக்கையாளர்களின் உற்சாகத்தைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வரும் வாரங்களில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் டெஸ்ட் ரைடு வசதியை அணுகுவதை உறுதி செய்வதற்காக இந்தியா முழுவதும் 1,000 நகரங்களில் இதனைக் கொண்டுவர இருக்கிறோம்," என்றுள்ளார்.
சூரத், திருவனந்தபுரம், கோழிக்கோடு, விசாகப்பட்டினம், விஜயவாடா, கோயம்புத்தூர், வதோதரா, புவனேஸ்வர், திருப்பூர், ஜெய்ப்பூர் மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் நவம்பர் 27-ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் ரைடு சேவை தொடங்கும் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.