ஓலா எஸ் 1 மின் ஸ்கூட்டர் விற்பனை இன்று துவங்கியது!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா மின்ஸ்கூட்டர் விற்பனை ஆன்லைனில் துவங்கியிருக்கிறது. மின் ஸ்கூட்டர் விற்பனை துவக்கத்தை நிறுவனர் பவிஷ் அகர்வால் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்ஸ்கூட்டர் விற்பனை ஆன்லைனில் இன்று துவங்கியுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழகத்தில் ஓசூர் அருகே மாபெரும் மின்ஸ்கூட்டர் ஆலையை அமைத்து, ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1புரோ ஆகிய இரண்டு வகை மின்ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தது.
மின் ஸ்கூட்டர்களை செப்டம்பர் 8ம் தேதி முதல் வாங்கலாம் என்றும், அக்டோபர் மாதம் முதல் வாகனங்கள் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு சில மாதங்களுக்கு முன் துவங்கியது. மின்ஸ்கூட்டர்கள் ஆன்லைனில் கடந்த 9ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தொழில்நுட்பக் கோளாறால் ஒரு வார காலம் தள்ளி வைக்கப்பட்டு, செப் 15 முதல் விற்பனை துவங்கும் என்றும் தெரிவித்தார்.
ஆன்லைன் மூலமாக இந்த வாகனங்களை வாங்க முடியும். விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ளலாம் என ஓலா அறிவித்தது. அதேநேரம் முன்னதாக முன்பதிவிலேயே ஓலா நிறுவனம் சாதனை படைத்தது.
தற்போது முன்பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவிருக்கிறது ஓலா. அதற்கேற்ப முன்பதிவு மற்றும் கொள்முதல் வரிசையில் மாற்றமில்லை என்று ஓலா அறிவித்திருக்கிறது.
எனவே நீங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தால், ஸ்கூட்டரை (Ola Electric Scooter) உங்களால் முதலில் பெறமுடியும். மேலும், ஸ்கூட்டரின் விநியோக தேதிகளும் மாறாமல் இருக்கும் என்றும் ஓலா தெரிவித்துள்ளது.
மின்ஸ்கூட்டர் விற்பனையை ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
“ஓலா எஸ்1 விற்பனை துவங்கியது. முன்பதிவை துவங்கியுள்ளோம். உங்களின் ஸ்கூட்டர் எப்போது கிடைக்கும் எனும் தகவலை இ-மெயிலில் அல்லது ஓலா செயலியில் பார்க்கவும்,” என பாவிஷ் அகர்வால் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அறிவித்தப்படி இன்று ஓலா மின்ஸ்கூட்டர்கள் விற்பனை ஆன்லைனில் துவங்கியது. எந்த தொழில்நுட்பச் சிக்கலும் இல்லாமல் வாகனத்தை வாங்க முடிந்ததாக பயனாளிகள் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்கூட்டர்கள் பத்து வண்ணங்களில் கிடைக்கும் என்றும், ஓலா ஸ்கூட்டர் ஆலை முதல் கட்டமாக, பத்து லட்சம் ஆண்டு உற்பத்தி திறன் பெற்றிருக்கும் என்றும், தேவைக்கேற்ப இது 20 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்திருந்தது.
முழுவதுமாக ஆலை உருவாகும் போது ஆண்டுக்கு ஒரு கோடி வாகன உற்பத்தித் திறன் பெற்றிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓலா எஸ்1 ஸ்கூட்டர் ரூ.99,999 எனும் விலையிலும் எஸ்1 புரோ ஸ்கூட்டர் ரூ.1,29,999 எனும் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஓலா ஸ்கூட்டர் பல்வேறு நவீன அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் டிஜிட்டல் தன்மை கொண்டதாக இருப்பதாக இதன் அறிமுகத்தின் போது நிறுவனர் பாவிஷ் அகர்வால் குறிப்பிட்டிருந்தார்.
ஓலா ஸ்கூட்டர் தனக்கான தனி இயங்கு தளம் மற்றும் செயலியையும் கொண்டுள்ளது. செயலி மூலமும் வாகனத்தை இயக்கலாம். இதன் பேட்டரியும் அதிக திறன் கொண்டதாக அமைந்துள்ளது.