'என்னை மன்னித்து விடுங்கள்...' - மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு அறிவித்த வினேஷ் போகத்!
100 கிராம் எடை கூடியதால் ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் 100 கிராம் எடை அதிகரிப்பால் ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்கப் பதக்க கனவு தகர்க்கப்பட்டுள்ளது. எப்படியும் இறுதிப் போட்டியில் வென்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை வென்று தருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது இந்த தகுதி நீக்கம் இந்தியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆஸ்கர் கனவைப் போலவே ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்குவதும் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒன்று. அதனாலேயே, இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் மீது எப்போதுமே மக்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
அந்தவகையில், இந்தாண்டும் ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இதுவரை ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா ஒரு தங்கம்கூட வெல்லவில்லை.
இறுதிப்போட்டியில் வினேஷ் போகத்
இந்த சூழ்நிலையில்தான், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதி, வெற்றி பெற்றார் இந்தியாவின் வினேஷ் போகத்.
முதல் நிமிடத்திலேயே வினேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் வினேஷ் பெற்றார்.
அதன் தொடர்ச்சியாக, இறுதிப்போட்டியில் அவர் அமெரிக்க வீராங்கனையும் மோதுவதாக இருந்தது. அந்தப் போட்டியில், வினேஷ் வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைக்கும், இல்லையென்றால் வெள்ளியாவது நிச்சயம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
அதிர்ச்சி தந்த தகுதிநீக்கம்
ஆனால், எதிர்பாராத விதமாக, நேற்று காலை எடை சரிபார்த்தலின்போது, நிர்ணயித்த அளவைவிட 100 கிராம் உடல் எடை கூடியதால், பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது ஒலிம்பிக் கமிட்டி. இது, ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.
சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த சங்கத்தின் இந்த தகுதிநீக்க முடிவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களும் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக தங்களது வருத்தத்தையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
எடை குறைக்க விடிய விடிய போராடிய வினேஷ் மற்றும் டீம்
அரை இறுதி போட்டிக்குப்பின் உடல் எடை சோதனை செய்தபோதே வினேஷ் சற்று எடை கூடிக் காணப்பட்டுள்ளார். எனவே, இன்று காலைக்குள் அவர் அந்த எடை அதிகரிப்பை சரி செய்ய பல்வேறு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். சைக்கிளிங் உள்பட பல்வேறு பயிற்சிகளையும் விடிய விடிய தூங்காமல் மேற்கொண்டுள்ளார்.
பயிற்சியாளர்களும் அவரை உத்வேகப்படுத்தி உடல் எடை குறைப்பு பயிற்சியில் உதவியுள்ளனர். இருப்பினும், அவருக்கு எடை பரிசோதனை செய்தபோது 50 கிலோவை விட அதிகமாக இருந்துள்ளது. அதனால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வினேஷின் இந்த தகுதிநீக்கம் சதி, இதற்கு உரிய விசாரணை தேவை என அவருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வரும் நிலையில், தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வினேஷ் போகத்.
29 வயது புயல்!
காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகள் என பல்வேறு முக்கிய போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் 29 வயதான வினேஷ் போகத். மல்யுத்த போட்டிகளில் முடிசூடா ராணியாக வலம் வந்த இவரது, கடைசி 18 மாதங்கள் ரோலர்கோஸ்ட் போன்று ஏற்ற இறக்கங்கள் மிகுந்தது.
ஆம், கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்தியபோது, தானும் அதில் கலந்து கொண்டு போராடினார் வினேஷ். அப்போது மற்ற வீராங்கனைகளுடன் வினேஷையும் போலீசார் தரதரவென இழுத்துச் சென்றனர்.
அப்போது, “இப்படிப்பட்ட நாள்களைப் பார்க்கவா பதக்கங்களை வென்றோம்?” என்று செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கதறி அழுதபடி வினேஷ் போகத் பேசிய வார்த்தைகள் சமூகவலைதளப் பக்கங்களில் வைரலானது.
அதோடு, விரக்தியின் உச்சத்தில் மத்திய அரசு தனக்கு வழங்கிய கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திரும்ப அளிக்க முடிவு செய்தார் வினேஷ். இதற்காக அவர் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றபோது, வழியில் தடுக்கப்பட்டார். எனவே, அவர் தனது இரண்டு விருதுகளையும் தலைநகரின் கர்தவ்ய பாத் முக்கிய சாலையின் நடுவில் விட்டுச் சென்றார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு காலில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதும் மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு, உடல் எடையை குறைத்து 50 கிலோ எடை பிரிவில் போட்டியிடத் தயாரானார் வினேஷ்.
இது ஒருபுறம் இருக்க, “நான் ஒலிம்பிக்கில் விளையாடுவதை தடுக்கும் நோக்கில் பிரிஜ் பூஷன் மற்றும் அவரது ஆதரவாளர் சஞ்சய் சிங்கும் இணைந்து அனைத்து வழியிலும் முயற்சித்து வருகிறார்கள்...” என கடந்த ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியிருந்தார் வினேஷ்.
இப்படி விளையாட்டில் மட்டுமல்ல.. தன் சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தவர் தான் வினேஷ் போகத்.
இந்தியாவின் பெண் சிங்கம்
வினேஷ் போகத்தின் சந்தித்த இந்த துயரமான நாட்களை நினைவு கூர்ந்து, நேற்று இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர்,
“செவ்வாய் அன்று நடந்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற வினேஷ் போகத், இந்தியாவின் பெண் சிங்கம். 4 முறை உலக சாம்பியன் மற்றும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை அவர் வீழ்த்தியுள்ளார். அதன் பிறகு, காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை தோற்கடித்தார்.“
ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன். இந்தப் பெண் தன் சொந்த நாட்டிலேயே அடித்து நொறுக்கப்பட்டார். தன்னுடைய நாட்டின் தெருக்களில் இழுத்து செல்லப்பட்டார். உலகையே வெல்ல போகும் இந்தப் பெண் இந்த நாட்டின் அமைப்பிடம் தோற்றார்...” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த போதும், தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தீவிர பயிற்சியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டி வரை சென்று, இன்று தகுதிநீக்கம் செய்யப்பட்ட போதும், மக்கள் மனங்களை வென்ற வீராங்கனையாகி இருக்கிறார் வினேஷ் போகத்!
மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு
விதியின் கொடூரமான திருப்பத்தால் நீண்ட காலமாக கண்ட ஒலிம்பிக் பதக்கக் கனவு நொறுங்கிப்போன நிலையில், வினேஷ் போகட் வியாழக்கிழமை தனது சர்வதேச மல்யுத்த வாழ்க்கைக்கு விடை கொடுத்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியை அளித்துள்ளார்.
ஏற்கனவே, வினேஷ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு, விதியாலோ அல்லது சதியாலோ பொய்த்துப்போன நிலையில், தற்போது அதிரடியாக மல்யுத்தத்தில் இருந்தே அவர் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அவரது தகுதி நீக்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் வினேஷ் வெளியிட்டுள்ளப் பதிவில்,
“எனக்கு எதிரான போட்டியில் மல்யுத்தம் வென்று விட்டது, நான் தோற்று விட்டேன். எனது கனவுகள் சிதைந்துவிட்டன... என் மனதைரியமும், நம்பிக்கையும் உடைந்துவிட்டன. இனியும் போராட எனக்கு இப்போது வலிமை இல்லை. குட்பை மல்யுத்தம், 2001-2024. நான் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். மன்னித்து விடுங்கள்,'' என உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, ஒலிம்பிக் போட்டிகளின் போது அல்லது தொடக்க விழாவிற்கு முந்தைய 10 நாட்களுக்குள் எழும் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள CAS-ன் தற்காலிகப் பிரிவில், தனது ஒலிம்பிக் தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அவரது இந்த மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.