Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

150 பாரம்பரிய கீரைகளை மீட்டெடுத்து, keeraikadai-யை உலக அளவில் கொண்டு சென்ற ஐடி பொறியாளர்!

ஒரே நாளில் வாடிப்போகும் கீரைகளை அதன் சத்துகள் குறையாமல் மக்களிடம் சேர்ப்பது எப்படி என்று யோசித்து உலகிலேயே முதன் முறையாக புது ரக கீரை வணிக சந்தையை உருவாக்கி இருக்கிறார் மதுரைப் பொறியாளர் ஸ்ரீராம் பிரசாத்.

150 பாரம்பரிய கீரைகளை மீட்டெடுத்து, keeraikadai-யை உலக அளவில் கொண்டு சென்ற ஐடி பொறியாளர்!

Tuesday August 03, 2021 , 7 min Read

உழவுக்கு உயிரூட்டு! உழவர்க்கு வளமூட்டு! மக்களுக்கு விவசாயத்தின் அறிவூட்டு! வளர் சமுதாயத்திற்கு நம்மைச் சுற்றி இருக்கும் பசுமை இலைகளின் மகத்துவத்தை புகட்டு!


இது பழமொழியல்ல, தனது வாழ்நாளின் இலக்காக வைத்து தொழில்முனைவுப் பாதை அமைத்து உலக அளவில் தனது வர்த்தகச் சந்தையை விரிவுபடுத்தி இருக்கும் மதுரைப் பொறியாளரின் அனுபவ மொழிகள்.


சுறுசுறுப்பான உடல்மொழி, ஊக்கம் தரும் பேச்சு, நோக்கத்தில் தெளிவு, சிந்தனையில் பொறுமையோடு நிதானித்து பேசுகிறார் கீரைக்கடை.காம் keeraikadai.com நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீராம் பிரசாத். தொழில்முனைவராக வெற்றிக்களம் கண்டுள்ள அவரை பேட்டி கண்டது யுவர் ஸ்டோரி தமிழ்.


“நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில். உயர்நிலைப் படிப்பை தாத்தாவின் ஊரான தேனியில் படித்த போது, அவரின் விவசாயப் பணிகளைப் பார்த்து எனக்குள்ளும் ஒரு விவசாயி அப்போதே வேறூன்றினான். எனினும், பட்டப்படிப்பு என்று வந்ததும் எலக்ட்ரானிக் என்ஜினியரிங் படித்து முடித்து விட்டு 2003ம் ஆண்டில் எல்லோரையும் போல நானும் ஐடி துறையில் கால்பதித்தேன்.

”விவசாயத்தில் ஆர்வம் இருந்தாலும் எனக்கு அந்த வாய்ப்பும் இல்லை அனுபவமும் இல்லை என்பதால் ஐடி துறை சரியானதாக இருக்கும் என்று அதனை தேர்ந்தெடுத்தேன்,” என்று தனது தொடக்கக் கால வாழ்வை விவரிக்கிறார் ஸ்ரீராம்.
ஸ்ரீராம்

ஸ்ரீராம் பிரசாத், நிறுவனர் மற்றும் சிஇஓ, கீரைக்கடை

சுமார் 12 ஆண்டுகள் அக்மார்க் ஐடி ஊழியராக பணியாற்றியதோடு 2008ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை Paletteiicons வெப் டிசைனிங் நிறுவனத்தையும் 2013-15 வரை Get Marche என்ற ஆன்லைனில் மளிகைப்பொருட்களை வழங்கும் சேவையையும் மதுரையில் தொடங்கி நடத்தி வந்திருக்கிறார் ஸ்ரீராம்.


மதுரையில் ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விற்பனை என்பது புதிதாக இருந்தாலும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திருந்தது, 2015ல் கோவையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று Get Marche-ஐ தங்களுடன் இணைத்துக் கொள்ள அந்த நிறுவனத்தின் ரீட்டெய்ல் பிரிவு சிஇஓவாக சுமார் 6 மாதங்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக குடும்பத்துடன் வந்து கோவை மண்ணிலேயே குடியும் புதுந்தார் ஸ்ரீராம்.


ஐடி துறை என்றால் பிசியோ பிசி வாழ்க்கை, ஸ்ரீராமும் அதற்கு விதிவிலக்கல்ல. தன்னுடைய வெப் டிசைனிங் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் கிளையண்ட்கள் 24*7 வேலை என்று கடிகார முள் போல சுற்றிக் கொண்டிருந்தவர் 2016ம் ஆண்டில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டு ஆன்மாவின் வாசம் தேடி விவசாயத்திற்கே திரும்பிவிட்டார்.

“ஐடி துறையில் நல்ல வருமானம் இருந்தது எனினும் 14 முதல் 16 மணி நேரம் கணிணித் திரை முன்பு உட்கார்ந்திருக்க வேண்டும். உடல் ரீதியிலான பயிற்சிகள் எதுவும் இல்லை, சுமார் 15 ஆண்டுகள் ஐடி பணியால் முதுகுவலி, கழுத்துவலியும் இலவச இணைப்பாக வந்துவிட்டது. எனவே மாற்றம் தேவை என்று விரும்பினேன், தெரியாத துறைக்கு மீண்டும் போகாமல் ஏற்கனவே பிடித்த விவசாயத்துறைக்கே திரும்பி விடலாம் என்று முடிவெடுத்தேன்,” என்கிறார் ஸ்ரீராம்.

2010ம் ஆண்டே ஸ்ரீராமிற்குத் திருமணம் முடிந்துவிட்ட நிலையில், மனோதத்துவ நிபுணரான அவரின் மனைவியும், பெற்றோரும் ஸ்ரீராமின் கனவிற்குத் தடை போடாமல் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

ஐடி டு அக்ரி

எடுத்த எடுப்பிலேயே விதைபோட்டு விவசாயம் செய்து மகசூல் பார்த்து லாபம் கைக்கு வரும் சினிமாக் கதையெல்லாம் இல்லை, இயற்கை விவசாயத்தில் என்னென்ன இருக்கிறது என்பதை முழுமையாகக் கற்றுக்கொள்ள மட்டுமே இரண்டு ஆண்டுகளை செலவிட்டு 2017ம் ஆண்டு இறுதியில் கீரைக்கடை அக்ரோ பிரைவேட் லிமிடெட்டை தொடங்கி இருக்கிறார்.

keeraikadai

கீரைக்கடை.காம் பிரத்யேக கடை

கீரையை ஒரு அக்ரிடெக் ஸ்டார்ட் அப் ஆக செய்யப்போகிறேன் என்றதும் எனது குடும்பத்தினர் நெருங்கிய நண்பரும் இணை நிறுவனருமான ஸ்ரீராம் சுப்ரமணியன் தவிர அனைவருமே ஏன் கீரையை தேர்வு செய்தேன் என்று கேட்டனர்.

“அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த கீரைகளை எல்லோருமே உணவில் ஒதுக்கி விடுகின்றனர், 20 ஆண்டுகளுக்கு முன்னர் 70 வகைகளான கீரைகள் இருந்தன, இன்னும் ஆழமாகச் சென்று 50 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தால் 100 வகைகளான கீரைகள் இருந்திருக்கின்றன. புறாணங்களில் இருக்கும் 500 வகை கீரைகள் இப்போது அழிந்து போய் மூலிகைகளாக மாறிவிட்டன. சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், என்னால் முடிந்த நல்லது ஒன்றை சமூகத்திற்கு திருப்பித் தர நினைத்தேன். Keeraikadai.com அனைவராலும் வாங்கக்கூடிய வகையில் சத்துக்கள் நிறைந்த கீரைகளை ஒவ்வொருவரின் வீடுகளிலும் பேப்பர், பால் போடுவது போல் தினசரி கொண்டு சேர்க்க வேண்டும் என என் பயணத்தைத் தொடங்கினேன்.”

தனியாக கடை வைத்து செயல்படாமல் நிலத்தில் அறுவடை செய்யும் கீரைகளை 2 மணி நேரத்திற்குள் வீடுகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதையே ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் தொழிலாகத் தொடங்கினேன். அதில் கண்ட வெற்றியைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் பிரத்யேகமாக கீரைகளுக்கென்றே தனி கடையாக 2017ம் ஆண்டு டிசம்பரில் கீரைக்கடை.காம் திறக்கப்பட்டது.


நாங்கள் பாலமலையில் இருந்த 5 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் கீரைகளை விதைத்து அறுவடை செய்ததோடு, 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் கைகோர்த்தோம். சுமார் 35 வகைகளான கீரை வகைகளுடன் தொடங்கப்பட்ட கீரைக்கடையில் 2018ம் ஆண்டில் 100க்கும் அதிக வகைகளான கீரைகள் கிடைக்கும்படி செய்தோம். இவை அனைத்தும் கோவை மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், மதுரை, தேனி, திண்டுக்கல், உடுமலைப்பேட்டை மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அந்தந்த பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து தொழில்முனைவை விரிவுப்படுத்தினோம்.

பல வடிவங்களில் கீரை

பறித்த கீரையை பசுமை மாறாமல் வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பது அதிகம் பேரை ஈர்த்தது. 2018ம் ஆண்டு இறுதியில் அண்டை மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் கூட எங்களது சேவையை விரிவாக்கம் செய்யும்படி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. சொல்லப் போனால் வெளிநாடுகளில் இருந்தும் கூட அழைப்புகள் வந்தன, பொறுப்புகள் கூடுகிறது என்பதை அப்போது தான் உணர்ந்தோம்.

வாடிக்கையாளர்கள் வட்டம் பெருகும் போது தான் ஒரு சவால் என் கண் முன் இருந்தது, கீரைகள் குறைந்த நேரத்தில் வாடிப்போகும் மற்றும் அழுகிப் போகக்கூடியவை. அப்போது இதற்கான மாற்று வழியை யோசித்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான முயற்சியை கையில் எடுத்தோம். அந்த முதல் முயற்சி தான் ‘Greeny Dip’.

மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தில் 6 மாத ஆராய்ச்சிக்குப் பிறகு 2019ம் ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. க்ரீனி டிப்பின் சிறப்பு என்னவென்றால் இது கிரீன் டீ போலவே இருக்கும். கீரையுடன், மூலிகைப்பொருட்களும் சேர்த்து கொடுக்கப்படும் டிப்பை 100மி.லி நீரில் போட்டால் 30 விநாடிகளில் சுவையான சூப் தயாரித்து விடலாம். சர்வதேச அளவில் யாரும் செய்திடாத இந்த தொழில்நுட்ப முறைக்கு நாங்கள் காப்புரிமையும் பெற்றிருக்கிறோம்.

greeny dip

முருங்கை சூப்பில் தொடங்கி 3 மாதங்களில் தூதுவளை, முடக்கத்தான், அஸ்வகந்தா, வல்லாரை உள்ளிட்ட 5 வகையான சூப்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கீரை வகைகளுடன் இவையும் விற்பனை செய்யப்பட்டன, இந்த இன்ஸ்டன்ட் சூப்கள் 18 மாதம் வரை கெட்டுப்போகாதவையாக எந்த வேதிப்பொருட்களும் சேர்க்கப்படாமல் சிறப்பாக பேக் செய்யப்பட்டு அருகாமை இடங்களில் மெல்ல விற்பனையைத் தொடங்கினோம். மக்களிடம் இந்த சூப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


இதன் சிறப்பே கீரையில் இருக்கும் சத்துக்கள் சுமார் 85 சதவிகிதம் குறையாமல் அப்படியே இருக்கிறது என்பது தான். பசுமைக் கீரைகளாக கொடுக்க முடியாத இடங்களில் க்ரீனி டிப் விநியோகம் தொடங்கியது. இந்தியா முழுவதிலும் விற்பனை தொடங்கிய நிலையில் Greenydip-க்கென தனி இணையதளத்தையும் தொடங்கினோம்.


கீரை, க்ரீனி டிப் சோதனைகள் வெற்றியடைந்துவிட்டது என்று ஓய்ந்துவிடாமல், 2019ம் ஆண்டில் உணவுப்பிரியர்களின் நகரமான மதுரையில் கீரைவகை உணவுகளை அறிமுகம் செய்தோம்.

கீரை தோசை, கீரை பனியாரம், கீரை கொழுக்கட்டை என்று கீரைகளை மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்பொருட்களாக அறிமுகம் செய்தோம். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூட்டு வகைகளாக வேண்டும் என்ற வேண்டுகோள் வரவே ‘க்ரீனி மீல்’ ’Greeny meal’ குறித்த ஆராய்ச்சியில் இறங்கினோம்.

பாலக், முருங்கைக்கீரை கூட்டு வகைகளுடன் வாழைத்தண்டு மற்றும் வாழைப்பூ கூட்டை செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்காமல் எப்படி தென் இந்திய சுவையில் 18 மாதங்கள் வரை பயன்படுத்துபவையாக உருவாக்குவது என சிந்தித்தோம்.


எண்ணப்படியே இதர பொருட்கள் சேர்க்காமல் பேக் செய்யப்படும் முறையில் ராணுவத்தினர் கையாளும் தொழில் முறையை கையில் எடுத்தோம். சமைத்து பேக் செய்யப்படும் கூட்டு வகைகளில் பூஞ்சை சேராத வண்ணம் இருக்கும், வாடிக்கையாளர்கள் அதனை வாங்கி மறுசூடு செய்தாலே சுவையான கூட்டு தயாராகிவிடும்.

கீரைக்கடை விரிவாக்கம்

2020 இறுதியில் க்ரீனி மீல் அறிமுகம் செய்யப்பட்ட காலத்திலேயே அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் கீரைக்கடையின் கிளையைப் பரப்பினோம். இந்தத் தொழிற்கூடத்தில் இருந்து இதரப் பகுதிகளுக்கு எங்களின் மதிப்பு கூட்டப்பட்ட கீரை வகைகள் விற்பனை செய்யப்பட்டன.


பெருந்தொற்று காலத்தில் பொருட்களை அனுப்புவதில் சிக்கல் இருந்த போதும் அந்த சவாலையும் சமாளித்து கொரோனா காலத்திலும் ஆரோக்கிய உணவை மக்களிடம் கொண்டு சேர்த்தோம். இது மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் மாதிரிகளை அனுப்பி பரிசோதித்ததில் அவர்களுக்கு எங்கள் பொருட்களின் சுவை மிகவும் பிடித்துப்போய்விட்டது.

கொரோனா பரவலுக்குப் பிறகு மக்களுக்கு கீரை வகைகளின் பயன் தெரிந்திருக்கிறது. பசுமை கீரைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு ஏறத்தாழ 15 நாடுகளுக்கு புதிதாக இறக்குமதியை தொடங்கி இருக்கிறோம். தொடர் வளர்ச்சி கண்டு வரும் கீரை தொழில்முனைவின் அடுத்த நகர்வாக மதுரையில் 3000 சதுர அடியில் உற்பத்தி மையத்தை இந்த ஆண்டு தொடங்கி இருக்கிறோம். இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
greeny meals

நல்ல தொழில்முனைவுத் திட்டம், தளராத நம்பிக்கையுடன் ரூ.5 லட்சம் முதலீட்டில் 2017ம் ஆண்டில் கீரைக்கடை தொடங்கப்பட்டது. இதில் லாபம் பார்க்க மட்டுமே 2 ஆண்டுகள் தேவைப்பட்டது.

2019-2020 நிதியாண்டில் கீரைக்கடை நிறுவம் 65 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் செய்துள்ளது. கொரோனா பாதிப்பால் 2021ல் ரூ.55 லட்சம் விற்றுமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ரூ.2.5 கோடி வரை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம்.

ஏனெனில் கொரோனா தாக்கத்திற்குப் பிறகு மக்களிடம் ஆரோக்கிய உணவை நாடும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதோடு நிறுவனமும் விவசாயிகளும் லாபத்தை அறுவடை செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.


வெளியில் இருந்து எந்த முதலீடும் பெறாமல் என்னுடைய வெற்றியின் மீது நம்பிக்கை வைத்த நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் நிதியுதவியுடன் மேலும் மேலும் தொழிலை வளர்த்தோம். இப்போது இந்தத் தொழில்முனைவு திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில், இதனை இந்திய அளவில் கொண்டு செல்ல முதலீடு செய்ய முன்வரும் நிறுவனத்துடன் கைகோர்க்கவும் தயாராக இருக்கிறோம் என்கிறார் ஸ்ரீராம் பிரசாத்.


கீரைக்கடை இதுவரை 20,000 பின்கோடுகளுக்கு டெலிவரி செய்துள்ள்து. இதை ஒவ்வொரு பின்கோடு அளவிலும் கொண்டு செல்லும் திட்டமாக இல்லத்தரசிகளே கூட குறைந்த முதலீட்டில் மாதந்தோறும் கணிசமான லாபத்தை பெறும் உரிமத்தை (Franchise) பலரும் கேட்டு வருவதால் அதற்கான திட்டமிடல்களைத் தொடங்கி இருக்கிறோம். ஒரு மாதத்திற்குள் தென் இந்திய அளவிலும் அதன் பின்னர் இந்தியா முழுவதிலும் கீரைக்கடை franchisee வாய்ப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.


4 பேருடன் தொடங்கிய கீரைக்கடை இப்போது 18 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஒட்டு மொத்த லாபத்திலும் 1 சதவிகிதத்தை விவசாயிகளின் குழந்தைகள் கல்விக்காக செலவிட்டு வருகிறோம். பாரம்பரியத்தை மீட்டெடுத்திருக்கிறோம், ஆரோக்கியத்தை விதைத்திருக்கிறோம் என்ற ஆத்ம திருப்தி இப்போது இருக்கிறது.

கீரைக்கடை குழுவினர்

கீரைக்கடை.காம் குழுவினர்

நிச்சயமாக ஒரு தொழிலைத் தொடங்கும் போது பல்வேறு விமர்சனங்கள், கேள்விகள் இருக்கும், எனக்கும் அப்படி இருந்தது. ஆனால் என் பெற்றோரும், மனைவியும் பக்கபலமாக இருந்தனர். எந்த நேரத்திலும் என் மீதான நம்பிக்கையை நான் இழக்கவில்லை, ஒரு நிமிடம் கூட நான் எடுத்த தொழில்முனைவு முயற்சி தவறு என்று நினைத்ததே இல்லை.

விவசாயத்தை தொழில்முனைவாக எடுத்துச் செய்கிறவர்கள் வெற்றி பெற வேண்டுமானால் விதைத்து, தண்ணீர் விட்டு, வளர்வதற்கான காலம் கொடுத்த அதன் பின்னரே அறுவடை செய்ய வேண்டும். அறுவடை காலம் வரை காத்திருக்கும் பொறுமை இருந்தால் மட்டுமே சரியான திட்டமிடலுடனான தொழில்முறையாக மாறும் என்று அறிவுறுத்துகிறார் ஸ்ரீராம் பிரசாத்.

மறைந்த இயற்கைக் காதலர் நம்மாழ்வாரின் வழிதொட்டு இயற்கை விவசாயத்தின் மூலம் மக்கள் தரும் பணத்திற்கு மண்ணில் விளையும் பொன்னை(கீரையை) மட்டுமல்ல எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாத ஆரோக்கியத்தையும் சமூகத்திற்கு திருப்பிக் கொடுத்து வருகிறார் ஸ்ரீராம்.