நீங்கள் ஈசியாக ‘ஆங்கிலம்’ கற்க உதவும் 6 பிரபல ஆப்’கள்!
அண்மையில் அறிவிக்கப்பட்ட ‘தேசிய கல்வி கொள்கை’-ல் குறிப்பிட்டுள்ளபடி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 5ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்பார்கள் என்ற பரிந்துரை உள்ளது. ஆனால் அதற்கு பிறகு கல்வியை ஆங்கிலத்தில் தொடர நினைப்பவர்களுக்கு சற்று கடினமாக அமையலாம் என வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
தாய்மொழியில் கற்பது அறிவுத்திறனை அதிகரிக்கும் என்றாலும், உலகத்துடன் இன்றளவும் இணைப்பு மொழியாக இருப்பது ஆங்கிலம் தான். அதனால் இந்த புதிய கல்வி முறையால் தங்களின் பிள்ளைகள் பின்தங்கிவிடுவார்கள் என்று அச்சப்படும் பெற்றோர்கள், வெளியில் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை நாடத் தொடங்குவார்கள்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆங்கிலம் கற்க வெளியே போகவேண்டிய அவசியமே இல்லை. ஆப்’கள் மூலமே வீட்டில் அமர்ந்தபடி ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த 6 பிரபல ஆப்’கள் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளமுடியும்:
Duolingo
உலக அளவில் மொழிகள் கற்பிக்கும் பிரபல இலவச ஆப் இது. ஆங்கிலம் கற்க ஏதுவாக, சுலபமான பயிற்சிமுறைகளை கொண்டிருக்கிறது இந்த ஆப். Duolingo; கேள்வி-பதில், விளையாட்டு, படங்கள், ஆடியோ-வீடியோ, எழுத்துக்களை உச்சரிப்பது என்று பலவழிகளில் பயிற்சிகளைக் கொடுக்கிறது. இது குழந்தைகள் ஆங்கிலம் கற்க சுலபமாக இருக்கிறது.
பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கும் இந்த ஆப், கூகிள் ப்ளேஸ்டோரில் 100 மில்லியன் டவுன்லோட்களை பெற்றுள்ளது. இந்தியாவிலும் இது அதிக பிரபலமாக இருக்கும் செயலி ஆகும்.
Memrise
காணொளிகள் மூலம் ஆங்கில வகுப்புகள் எடுக்கும் Memrise, வல்லுனர்கள் கொண்டு பயிற்சிகள் கொடுக்கிறது. வார்த்தை உச்சரிப்பு, ஆங்கிலம் பேசுதலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஆப்-ல், பயனர்கள் தாங்களே ஆங்கிலம் பேசி ரெக்கார்ட் செய்து வீடியோவை பதிவு செய்து, அதனை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
இந்த ஆப்’ல் 3000 ஆங்கிலப் பயிற்சியாளர்கள் உள்ளனர். வீடியோ, பயிற்சி கோர்சுகள் மற்றும் கேம்ஸ் மூலம் ஆங்கிலம் கற்றலை ஊக்குவிக்கிறது Memrise. உலகமெங்கிலும் இந்த ஆப் மூலம் 50 மில்லியன் மக்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டுள்ளனர். கூகிள் ப்ளேஸ்டோரில் 10 மில்லியன் டவுன்லோட்களை பெற்றுள்ளது. ஆரம்பக்கட்ட பயிற்சி இலவசமாகவும், மேற்கொண்டு ஆங்கிலம் படிக்கவிரும்புவோர் ப்ரோ ப்ளான் கோர்சுகளை கட்டண முறையில் இணைந்து படிக்கமுடியும்.
Hello English
ஜெய்பூரைச் சேர்ந்த இந்திய ஆப் ‘Hello English’ மெய்நிகர் நுண்ணறிவு மூலம் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆப். வேலைவாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க நினைப்போர்க்கு சுலபமான வழிகளில் பயிற்சி அளிக்கிறது. இதில் உள்ள சிறப்பு அம்சமான ‘ஆடியோ டிக்ஷனரி’-ல் 10ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை வாய்ஸ் மூலம் கற்றுக் கொடுப்பதாகும்.
பேச, எழுத, படிக்க சேட் உதவியுடன், இ-புக்ஸ் வடிவில் ஹெலோ இங்கிலிஷ், ஆங்கிலத்தை 22 இந்திய மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்து ஆங்கிலம் கற்பதை சுலபமாக்குகிறது இந்த ஆப். கூகிள் ப்ளேஸ்டோரில் இதுவரை இந்த ஆப் 10 மில்லியன் டவுன்லோட்கள் பெற்றுள்ளது.
EnglishScore
பிரிடிஷ் கவுன்சில் அளிக்கும் இந்த ஆப், ஆங்கிலப் புலமையை மதிப்பிடுகிறது. அறிமுகம் செய்த ஒரே ஆண்டில், அரை மில்லியன் டவுன்லோட்களை ப்ளேஸ்டோரில் பெற்றது. IELTS, TOEF போன்ற தேர்வுகள் எழுத ஆங்கிலப் புலமை அவசியம் என்பதால், அதற்கு ஏற்றவாறு இந்த ஆப்’ல் ஆங்கில கோர்சுகள் உள்ளன.
பயனர்களின் புலமையை மதிப்பீடு செய்து, அவர்கள் எந்த இடத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்படுகிறது. தனிப்பட்ட கோச்சிங் மற்றும் பயிற்சியாளரை வழங்கும் இந்த ஆப், கோர்சின் இறுதியில் பிரிடிஷ் கவுன்சிலின் சான்றிதழ் வழங்குகிறது. மேற்படிப்பு, வேலைவாய்ப்புக்கு செல்வோர் ஆங்கிலப் புலமையில் தங்களது நிலையை இந்த சான்றிதழ் மூலம் காட்டிக்கொள்ள முடியும்.
Drops
Drops மொழியை விளக்கப்படம் மூலம் கற்றுக்கொடுக்கிறது. இந்த ஆப் ஆங்கிலத் திறனை அதிகரிக்க பயிற்சி அளிக்கிறது. சுலபமான அதே நேரத்தில் வேகமாக மொழியை கற்றுக் கொடுக்கும் விதத்தில் படங்கள் மூலம், எடுத்துக்காட்டுகள் மூலம் கற்றுக் கொடுக்கிறது. இதில் உள்ள அனிமேஷன், கிராபிக்ஸ் மொழியை கற்க மனதில் எளிமையாக பதிய உதவுகிறது.
Drops-ல் அமெரிக்கன் இங்கிலீஷ் மற்றும் பிரிடிஷ் இங்கிலீஷ் என இருவேறுபாட்டையும் கற்றுத் தருகிறது. கூகிள் ப்ளேஸ்டோரில் ‘பெஸ்ட் ஆப்’ விருதை ’2018 ஆம் ஆண்டு பெற்றது. உலக அளவில் 5 மில்லியன் டவுன்லோட்களை பெற்று டாப் ரேட்டட் மொழி செயலியாக உள்ளது.
Busuu
மெய்நிகர் நுண்ணறிவு பயன்படுத்தி ஆங்கில மொழியை சாமானியர்களுக்கு கற்றுத் தருகிறது. இந்த செயலி ஆங்கில இலக்கணத்தில் பயிற்சி கொடுக்கிறது. இதன் உள்ளடக்கம் வல்லுனர்களால் உருவாக்காப்ப்ட்டுள்ளதால் பயனர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வேலை செய்யும். 2020-ன் ‘சிறந்த மொழி கற்றல் ஆப்’ என அங்கீகரிக்கப்பட்டுள்ளது Busuu. இதுவரை ப்ளேஸ்டோரில் 10 மில்லியன் டவுன்லோட்களை இந்த ஆப் பெற்றுள்ளது.