‘தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை’ - காரசார விவாதத்துக்கு பின் சட்ட மசோதா நிறைவேற்றம்!
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டபேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டபேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி போன்ற இணைய விளையாட்டுகளால் லட்சகணக்கில் பணத்தை இழக்கும் மக்கள், அடுத்தடுத்து, தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் நீடித்து வருகிறது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இச்சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனையடுத்து, திமுக அரசு பொறுப்பேற்றதும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு, ஏற்கெனவே உள்ள விதிகளின்படி, இதை கட்டுப்படுத்த இயலாது என்பதால், புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இதனடிப்படையில், தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் ’அவசர சட்ட மசோதா’ நிறைவேற்றப்பட்டு 2022ம் ஆண்டு, அக்டோபர் 19ம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மூலமாக ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
சட்டமசோதா 5 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்த நிலையில், மார்ச் 9ம் தேதி போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட 8 கேள்விகளை எழுப்பியுள்ள ஆளுநர், போதிய தரவுகளை இணைக்கும் படிக்கூறி மசோதாவை திருப்பி அனுப்பினார்.
தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பிய அதே மசோதாவை தமிழ்நாடு அரசு இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.
மீண்டும் சட்டமசோதா நிறைவேற்றம்:
தமிழக சட்டப் பேரவையில் இன்று ஆன்லைன் தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்க ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன் ரம்மி தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்து முதல்வர் உரையாற்றினார்,
“41பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இறந்துள்ளனர், கனத்த இதயத்துடன் இதனை வாசிக்கிறேன். இந்த சட்டம் அறிவால் செய்யப்பட்டதல்ல இதயத்தால் செய்யப்பட்டது. இனி ஒரு உயிர் பறிக்கப்பாடமல் இனி ஒரு குடும்பம் நடுத்தெருவில் வராமல் இருக்கு இந்த இணையவழி சூதாட்ட சட்ட முன்வடிவை சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றி தர வேண்டும். மாநிலத்தில் உள்ள மக்களைக் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு,” எனக்கூறினார்.
இணைய வழி சூத்தட்டத்தை தடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய முதல்வர், இந்த கணக்கெடுப்பு 2 லட்சத்து 4 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது தொடர்பாக எடுத்துரைத்தார். மாணவர்கள் தன் மதிப்பு திறன் குறைந்து காணப்படுவதாக 75 விழுக்காடு ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கபட்டதையும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அவையில் அனல் பறந்த விவாதம்:
ஆன்லைன் நிறுவன நிர்வாகிகள் நேரில் சந்தித்த பிறகு , தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது சந்தேகத்தை எழுப்புகிறது எனத்தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. நாகை மாலிக்,
உயிரை விட ஆன்லைன் நிறுவனங்களின் நலன் பெரிதா? எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு மக்களுக்கு எதிராக ஆளுநர் ஆன்லைன் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழ்நாடு மாணவர்களின் நலன் கருதி முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த தடை சட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. மாரிமுத்து தெரிவித்தார்.
சூதாட்டத்திற்கு துணை போகக்கூடாது:
தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் சூதாட்டகாரர்ளுக்கு துணை போவதாக பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
கொதித்தெழுந்த நயினார்; கூலாக பதிலளித்த துரைமுருகன்:
சட்ட மசோதா குறித்து பேசாமல் எதிர் கட்சியினர் ஆளுநரை விமர்சித்து பேசுவது சரியா? என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ஆளுநர் செய்த தவறை விமர்சிக்க அவைக்கு உரிமை உண்டு என பதிலளித்தார்.
பாஜக ஆன்லைன் ரம்மி தடை சட்ட தீர்மானத்தின் மீது பேசிய பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய போது,
“சட்ட மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகர் கூறிய நிலையில் சில கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை விமர்சித்துள்ளனர்,” என கடுமையாக சாடினார்.
உடனே குறுக்கிட்டு பேசிய சபாநாயகர்,
“சட்ட மசோதாவில் ஆளுநரை விமர்சித்து பேசக்கூடிய பேச்சுக்களை அவை குறிப்பில் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறுகிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன் ஆளுநர் செய்த தவறை விமர்சிக்க அவைக்கு உரிமை உள்ளது எனக் கூறினார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் மட்டுமாக உயிர் இழப்பு ஏற்படவில்லை எனவும் போதை உள்ளிட்ட பிற காரணங்களாலும் உயிரிழப்பு கொள்வதாக தெரிவித்தார். மேலும், ஆளுநர் இந்த ஆன்லைன் சட்டத்தை ஒப்புதல் அளிக்கக் கூடிய வகையில் அவற்றை உரிய திருத்தத்தை மேற்கொள்ள நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்,” எனவும் கூறினார்.
குறிப்பிட்ட பேசிய சபாநாயகர் அப்பாவு
ஆன்லைன் தடை சட்டம் தொடர்பாக அக்டோபர் 1ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் பின்னர், அக்டோபர் 19ஆம் தேதி அனுப்பிய சட்ட மசோதாவிற்கு அவர் ஓப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே இந்த தடை சட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்,
ஆன்லைன் மட்டும் இல்லாமல் எல்லா சூதாட்டங்களையும் தடைசெய்ய உறுதுணையாக இருப்போம், என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்:
அவையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு குரல் வாக்கெடுப்பு நடத்தினார்.
மசோதாவை ஏற்போர் “ஆம் என்க” என சபாநாயகர் கூறியதும் அவையில் பெரும் சத்தத்தோடு “ஆம்” என சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மறுப்போர் “இல்லை என்க” என்றார், ஆனால் எவரும் இல்லை என குரல் எழுப்பவில்லை. இதனையடுத்து, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.